Tuesday, April 1, 2008

பச்சோந்திகள்

“சேர் உங்களப் ப்ரின்ஷிப்பல் வரட்டாம்”
வகுப்பறையில் மும்முரமாய்ப் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பீயோன் வந்து சொன்னான்.

“இந்த மனிஷனுக்கு ஒரு மண்ணும் தெரியாது.நேரம் காலம் தெரியாமல் கூப்பிடும்.இதுக்குத்தான் சொல்லுறது படிப்பிச்சு அனுபவம் உள்ளவன் ப்ரின்ஷிப்பலா வரோணுமெண்டு”

எனது முணுமுணுப்பின் அர்த்தம் முழுமையாக விளங்காத போதும் நான் ப்ரின்ஷிப்பலை பேசுகின்றேன் என்பது மாணவர்களுக்கு விளங்கியிருக்க வேண்டும்.அவர்கள் எல்லோரும் மௌனமாய் இருந்தார்கள்.

பீயோன் வழமை போலவே புன்சிரிப்புடன் தலையைக் குனிந்து கொண்டு சென்றான்.

‘இந்த றாஸ்கலை முதலில துலைக்க வேணும்.இவன்தான் எல்லாரையும் போட்டுக் குடுக்கிறது’
மனதுக்குள் கறுவிக் கொண்டே பின் தொடர்ந்தேன்.

“என்ன சேர்…எட்டரைக்குள்ள ரெலிபோன் வந்திட்டுது போல”
கன்ரினுக்குள் இருந்து கனகலிங்கம் மாஸ்டரின் குரல் கேட்டது.

‘கூப்பிட்டவுடன போகக் கூடாது.கொஞ்ச நேரம் பாத்துக் கொண்டிருக்கட்டும்‘ என்ற எண்ணத்துடன் நானும் கன்ரீனுக்குள் நுழைந்தேன்.

“பாருங்கோ சேர்.இரண்டாம் பாடம் இப்பதான் துடங்கினது.அதுக்குள்ள வரட்டாம்”
கனகலிங்கம் மாஸ்டரை மெதுவாகப் பேச்சுக்குள் இழுத்து விட முயன்றேன்.

“ஓம் தம்பி அனுபவம் இல்லாத ஆக்களைப் ப்ரின்ஷிப்பலாப் போட்டா இப்பிடித்தான் பள்ளிக் கூடம் நடக்கும்”
கனகலிங்கம் மாஸ்டரும் எனது கருத்தையே கொண்டிருப்பது எனக்குச் சற்று உற்சாகம் அளித்தது.

“முந்தி இருநத அதிபர் எவ்வளவு நல்லாப் பள்ளிக் கூடம் நடத்தினவர். இவனப் போட்டதில இருந்து தலயிடிதான்”
ஆத்திரத்தில் வார்த்தை தவறாக வந்ததும் சட்டென்று நிறுத்தி சுற்று முற்றும் பார்த்தேன்.கனகலிங்கம் மாஸ்டர் என் தோள்களைத் தட்டி

“கோபப் படாதையும் தம்பி.முந்தியெண்டா பத்துப் பதினஞ்சு வரியம் ரீச்சரா இருந்தாத்தான் உபஅதிவரா வந்து பேந்து அதிபரா வரலாம்.இப்ப SLEAS பாஸ் பண்ணினவுடன ப்ரின்ஷிப்பலாப் போடுறாங்கள்.அவங்களுக்கு ஒரு நாசமும் தெரியாது”
“ஓம் சேர் தமிழும், கிண்டுக்கல்ச்சரும் படிச்சுப் போட்டு அஞ்சாம் வகுப்பு ஸ்கொலஷிப் மாதிரி சோதின பாஸ் பண்ணினவுடன பெரியாக்களோ இவங்கள்”

“என்ன ப்ரின்ஷிப்பலப் பற்றிக் கத நடக்குது போல”
ஆதித்தியன் சேரும் கன்ரினுக்குள் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார்.

“ஓம் சேர்…இந்த மனிஷன் வந்தாப் பிறகு நடக்கிற சீர் கேடுகளைப் பற்றிக் கதச்சுக் கொண்டிருக்கிறம்”

“கண்ட கண்ட நேரத்தில எல்லாம் ஆள விட்டுக் கூப்பிடுறதால எங்கட படிப்பிப்பு வேலயெல்லே குழம்புது”

“இவர் மட்டுமில்லயாம் இந்த முறை SLEAS இல எடுபட்ட எல்லாரும் இப்பிடித்தான் துள்ளிக்குதிக்கிறாங்களாம்”

“ஏனாம் அப்பிடி?”

“ஒரு வேலயயும் பிற்போடக்கூடாது.உடனேயே செய்து முடிக்கோணும் எண்டு ரெயினிங்கில சொல்லிக் குடுத்தவயாம்”

“அப்ப O\L சோதின எடுக்கிற பிள்ளயளுக்கு முதலாம் தவணேலயே எல்லாத்தயும் படிப்பிச்சு விட்டாச் சரியோ”
ஏல்லோரும் வாய் விட்டுச் சிரிக்க ப்ரின்ஷிப்பலை மட்டம் தட்டி விட்ட திருப்தியுடன்

“அப்ப சரி நான் போய் என்னெண்டு கேட்டுக் கொண்டு வாறன்”
நான் அதிபரின் அலுவலக வாயிலை அடையவும் இரண்டாம் பாடம் முடிந்து பெல் அடிக்கிறது.

“குட் மோனிங் சேர்”

“குட் மோனிங்…..இருங்கோ”

“சேர் வரச் சொன்னனீங்களாம்”

“ஓம் சேர்.அடுத்த வருஷம் A\L எக்ஸ்சாம் எடுக்கிற பெடியளின்ர அலுவலா உங்களோட கதக்க வேணும்”

“என்ன சேர்? சோல்லுங்கோ?”

“தங்கட Batch எல்லாரும் சேர்ந்து ரூர் போகப் போகினமாம்.ஸ்ரூடன்ட் யூனியன் மூலமாப் பெமிஷன் கேட்டுக் கடிதம் எழுதியிருக்கினம்.இப்ப இருக்கிற நிலமேல இது அவசியமே சேர்”
கடிதத்தை என் முன்னால் தள்ளி வைத்தார்.நான் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். ப்ரின்ஷிப்பலை எதிர்க்க இறைவனால் கொடுக்கப் பட்ட இந்த சந்தர்ப்பத்தை இழக்க நான் தயாராக இல்லை.

“கற்றல் புறச் செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேணும் சேர்.தனியப் பிள்ளயளப் பூட்டி வச்சுக் கொண்டிருந்து படிப்பிச்சாக் காணாது”

“அது எனக்கும் தெரியும் சேர்.இப்ப கொஞ்சம் நாட்டு நிலம மோசமாக் கிடக்கு.குண்டு வெடிப்பு……..கிளைமோர் எண்டு…..பிள்ளயளின்ர பாதுகாப்ப பாக்கவெல்லே வேணும்”

“உப்பிடிப் பாத்தா நாங்கள் ஒண்டுமே செய்யேலாது.நாட்டுப் பிரச்சினையைப் பற்றி யோசிக்காமல் செய்ய வேண்டியதைச் செய்யத்தான் வேணும்”

“அது சரி சேர். இப்ப பிரச்சின கொஞ்சம் மோசமாவெல்லே கிடக்கு”

“உங்களோட என்னால உடன் படேலாது சேர்.பிரச்சினயெண்டு பாத்துப் படிக்காமல் விட்டிருந்தா நீங்கள் B.A பட்டதாரியாகவோ நான் Bsc சிறப்புப் பட்டதாரியாகவோ வந்திருக்கேலாது”
அதிபரை விட நான் Qualification கூடியவன் என்பதைப் பொருத்தமான சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டினேன்.

“அப்ப முடிவா என்ன சேர் சொல்லுறியள்?”

“பிள்ளயளின்ர உரிமேல அளவுக்கதிகமாத் தலயிடக் கூடாது சேர். ரூர் போக ஒழுங்கு படுத்திக் குடுக்கிறதுதான் நல்லது”

“சரி.இன்னும் நல்லா யோசிப்பம்.கடைசிப் பாடம் ஸ்ராப் மீற்றிங் வச்சுக் கதப்பம்”

நான் நேராக நூலகம் நோக்கிச் சென்றேன்.நான்கைந்து பேர் கைகளில் அன்றைய தினசரிப் பத்திரிகையை வைத்திருந்தபடி கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

“இஞ்ச பாருங்கோவன். செல்வராகவன் சேரும் லைஃப்ரரிக்கு வாறார்”

நான் லைஃப்ரரிக்கு செல்வது குறைவுதான்.பாடம் இல்லாத நேரத்தில் ஸ்ராஃப் றூமில் புத்தகமும் கையுமாக இருந்து விடுவேன்.அதிபரிடமிருந்து கிடைத்த தகவலையும் அதனை நான் எதிர்த்ததையம் மற்றவர்களிடம் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வக் கோளாறினால் லைஃப்ரரிக்கு சென்றேன்.

“தெரியுமோ சங்கதி? A\L பெடியள ரூர் போக விடாமல் மறிக்கப் போறாராம்”
“இவற்ற அட்டகாசம் தலக்கு மேல போகத் துவங்கிட்டுது.போன சரஸ்வதி பூசையையும் பெரிசாச் செய்ய விடாமல் மறிச்சுப் போட்டார்” – செல்வநாயகம் சேர்.
“அது பரவாயில்ல சேர். 'ரீச்சர் இண்டக்கு தேவாரம் பாடுங்கோ’ எண்டு என்னயெல்லே மாட்டிவிட்டுட்டார்.மாட்டன் எண்டு சொன்னதுக்கு ‘ரீச்சர்ஸ்தான் முன் மாதிரியா நடக்க வேணும்.அப்பதான் பிள்ளயள் பின்பற்றி நடக்கும்’ எண்டு உத்தரவெல்லே போட்டவர்” – வாசுகி ரீச்சர்
எனக்குஆதரவு அதிகரித்துச் சென்றது.

“இந்த முறை பெடியள ரூர் அனுப்பாமல் விடுறேல.நாங்களெல்லாரும் ஒண்டாச் சேந்து நிண்டா அவரால ஒண்டும் செய்யேலாது”
நான்காம் பாடம் முடிந்து பெல் அடிக்க கன்ரீன் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

சுடச் சுட வடையும் கண்டித்தேயிலையில் சுந்தரம் போட்ட பால்த் தேநீருமாய் இன்றைய ஸ்ராஃப் மீற்றிங்கில் ஆசிரியர்கள் எல்லோரும் ஒருபக்கம் நின்று அதிபரை எதிர்ப்பதாகவும், பிள்ளைகளை எப்படியும் ரூர் போக அனுப்புவதாகவும் முடிவு செய்து கொண்டோம்.

ஏஞ்சிய மூன்று பாடங்களும் நகர்ந்து பிள்ளைகளை ஏழாம் பாடத்துடன் வீட்டுக்கு அனுப்பிய பின்னர் ஸ்ராஃப் மீற்றிங் தொடங்கியது.

“எல்லோருக்கும் வணக்கம்.ஒரு முக்கியமான விசயமாக கலந்தாலோசிப்பதற்காகத்தான் இந்த அவசர ஸ்ராஃப் மீற்றிங்.உங்கள் எல்லோருக்கும் விசயம் தெரிந்திருக்குமென நினைக்கின்றேன்”
என்னைப் பார்த்து விஷமமாகச் சிரித்தார்.நான் தெரியாதது மாதிரி வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தேன்.

“A\L ஸ்ருடென்ட்ஸ் ரூர் போவதற்கு பெமிஷன் கேட்கிறார்கள்.தற்போதய நாட்டுச் சூழ்நிலையில் ரூரிற்கு அனுமதியளிக்க முடியாது.உங்களுடய அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளவே இந்த அவசர ஸ்ராஃப் மீற்றிங்”
அனைவரும் அமைதியாக இருக்க கனகலிங்கம் சேர் என் துடையில் கிள்ளினார்.

“மன்னிக்க வேணும் சேர்.கற்றல் செயற்பாடுகள் எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு கற்றல் புறச் செயற்பாடுகளும் முக்கியமானதுதான். Educational Tour என்பது எமது கல்வித்திட்டத்தில் அனுமதிக்கப் பட்ட விடயம்தான்”

“இப்ப பிரச்சினை அதில்ல. ரூர் செல்வதற்கு பொருத்தமான சூழ்நிலை இல்லை.பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கிறது”

“அப்பிடிப் பாத்தா உந்தப் பாதையால வந்து போறதும் பாதுகாப்பில்லைத்தான்.பிள்ளயள பள்ளிக்கூடம் வராமல் வீட்ட நிக்கச் சொல்லவெல்லோ வேணும்”
கனகலிங்கம் சேர் பொருத்தமான நேரத்தில் நெத்தியடி அடிக்க சிரிப்பொலி ஒருகணம் பரவி மறைந்தது.

“நீங்கள் ஒரு முடிவோடதான் வந்திருக்கிறியள் போலக்கிடக்கு.நான் மட்டும் என்ன செய்ய முடியும்.அப்ப ரூர் போகப் பெமிஷனைக் குடுப்பம்”
சாதித்து விட்ட திருப்தியில் நிமிர்ந்து அமர்ந்தேன்.

“ஆனால் சில விஷயங்களை ஒழுங்காகச் செய்ய வேணும்.இரண்டு ஜென்ஸ் ரீச்சரும் இரண்டு லேடிஸ் ரீச்சரும் கட்டாயம் போகவேணும்”
எங்கே நான் அகப்பட வேண்டி வரமோ என்ற அவசரத்தில் பேசத்தொடங்கினேன்.

“நாங்கள் கட்டாயம் போவம் சேர்.வாசுகி ரீச்சர்,செல்வராணி ரீச்சர்,ஆதித்தியன் சேர்,கனகலிங்கம் சேர் நாலு பேரும் போவினம் சேர்”

ஆதித்தியன் இளம் பட்டதாரி ஆசிரியர்.கனகலிங்கம் சேர் நாற்பது வயது தாண்டிய மனிஷன்.மனிஷியின் கரைச்சலில் இருந்து நாலு நாள் தப்பவதற்காக கட்டாயம் போகும்.வாசுகி இளம் பெட்டை.செல்வராணி ரீச்சர் போனாத்தான் பெடியளக் கட்டுப் படுத்தலாம்.பொருத்தமான நான்கு பேரை நான் முன்மொழிய அவர்களும் மௌனத்தால் தமது சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.

“அப்ப சரி.எல்லா ஒழுங்குகளையும் செய்து கொடுப்பம்.பிள்ளைகள் கவனமாப் போய் வந்தாச் சரி.இத்துடன் கூட்டத்தை நிறைவு செய்வோம்”
வாசுகி ரீச்சர் பாடசாலைக் கீதம் பாடி முடிந்ததும் எல்லோரும் கலைந்து சென்றோம்.

கனகலிங்கம் சேர் என் தோள்களில் கையைப் போட்டவாறு
“என்ன செல்வராகவன். நினச்சதச் சாதிச்சுப் போட்டியள்.பெடியளுக்காக நல்லாத்தான் கஷ்டப் படுறியள்”

“நீங்கள் ஒண்டு சேர்.பெடியளை அனுப்பி விட்டா நாலு நாளக்கு சும்மா இருக்கலாமெண்டுதான்”

கனலிங்கம் சேர் மௌனமாய் விலகிச் சென்றார்.மோட்டார் சைக்கிள் ஸ்ராண்டைத் தட்டும் போது ப்ரின்ஷிப்பல் யாருடனே ரெலிபோனில் கதைக்கும் சத்தம் தெளிவாகக் கேட்டது.

“ஓம் மச்சான்.இண்டக்கும் நல்ல அலுப்படிச்சுப் போட்டுத்தான் ரூர் போக அனுமதிச்சனான்.இல்லாட்டி எங்களப் பற்றி லேசா நினைச்சுப் போடுவாங்கள்”

(யாவும் கற்பனை)



பின்குறிப்பு : 27.01.2008 அன்று தினக்குரல் பத்திரிகையில் வெளியானது.

மனிதம் தோற்பதுண்டோ!

காலைக்கடன்களைப் பொறுத்தவரையில், மற்றவர்களை விட ராசனுக்கு ஒரு வேலை அதிகம் இருக்கிறது.

மலசலகூடம் சென்று வந்த பின் முகம் கழுவக் கிணற்றடிக்கும் போக முன்னர் இவ் வேலையை முடித்து விடுவான்.

வவுனியாவில் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ள திருட்டுச் சம்பவங்களின் பின்னர், இரவில் மோட்டார் சைக்கிள்கள் கராஜ் இனைத் தாண்டி உள் விறாந்தையில் இடம் பிடிக்க தொடங்கியிருந்ததன.

உள் விறாந்தைகளில் நித்திரை கொள்ளும் பேரன் பேத்திகள் இப்போது வெளி விறாந்தைக்கு இடம் மாற்றம் பெற்றிருந்தனர்.

துவிச்சக்கர வண்டிகள், இரவில் ஒன்றாகச் சேர்த்து சங்கிலிகளால் கட்டப்பட்டு, ஒற்றுமையாக இருக்கக் கற்றுக்கொண்டுள்ளன.

ராசன் 6 மணிக்கெல்லாம் அலாரம் இல்லாமலே எழும்பி விடுவான். இரவிரவாக கேட்கத் தொடங்கியுள்ள ஷெல் சத்தங்களை எண்ணிக் கொண்டிருந்த பேத்திக்கிழவி காலையில்தான் உறங்கிக் கொண்டிருக்கும்.

கிழவியின் நித்திரையைக் குளப்பி விடாதபடி உள் விறாந்தையிலிருந்து தனது சிவப்பு நிற CD-Dawn மோட்டார் சைக்கிளை கவனமாக உருட்டிக்கொண்டு முற்றத்திற்கு வருவான்.

இவன் முற்றத்திற்கு வருகின்ற நேரம், பக்கத்து வீட்டடியில் English Personal Class கொடுக்கும் மாஸ்டரின் ‘கோண்’ சத்தம் தினமும் கேட்கும்.

பிளாஸ்டிக் வாளியில் குளிர்ந்த தண்ணீரை அள்ளிக் கொண்டு வந்து, தோய்த்துக் காய்கின்ற துணியை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து தனது மோட்டார் சைக்கிளை கவனமாய், ஒவ்வொரு பகுதி பகுதியாக துடைப்பான்.

மற்றவர்களைப் பொறுத்தவரை மோட்டார் சைக்கிள் என்பது ஒரு வாகனம். இவனைப் பொறுத்தவரை அவனது முழுக்குடும்பத்தினதும் ஒட்டுமொத்த உழைப்பு. அதனை பாதுகாக்க வேண்டியது தனது தலையாய கடமையாகக் கருதினான்.

“கம்பஸ் முடிச்ச எத்தினை பெடியள் வேல இல்லாம இருக்கிறாங்கள். உனக்கெதுக்கு கம்பஸ். அதுவும் பீ.ஏ படிப்பு. கொக்காவுக்கும் முப்பது தாண்டப்போகுது. அவளையும் ஒருத்தன்ர கையில பிடிச்சுக் குடுக்க வழியில்லாம கிடக்கு. நீ படிச்சது காணும். ஒரு வேல தேடுறது எனக்கு நல்லதாப்படுது”

அப்பா யோசனை சொல்கிறாரா?அல்லது உத்தரவு போடுகின்றாரா? என்பது புரியாத போதும் தனது குடும்பத்தின் இன்றைய நிலையை உணர்ந்து, அவன் அந்த வேலையில் சேர்ந்திருந்தான்.

அரச சார்பற்ற நிறுவனமொன்றில் ‘கேட்செக்குரிட்டி’ வேலை. ஓவ்வொரு தடவையும் வாகனம் உள்ளே வரும் போதும் வெளியே போகும் போதும் திறந்து திறந்து மூடவேண்டும்.அந்த நிறுவனத்திற்குப் பெரியவனான அந்த வெள்ளைக்காரன் கக்கூசுக்குப் போவதென்றாலும் தனது வதிவிடத்திற்குத்தான் சென்று வருவான்.

வேலைக்குப் போகும் ஒரு நாளுக்கு நானூறு ரூபா என்பது அவனின் குடும்பத்தை பொறுத்தவரை மிகப் பெரிய வருமானம்.

வேலைக்குப் போன தொடக்கத்தில் தன் ‘புஷ்’ சைக்கிளில் தான் போய் வந்தான். அப்பாவால் செல்லமாக ‘றலிக்குதிரை’ என்று அழைக்கப்படும் அந்த சைக்கிள் அப்பா பாரிசவாதத்தால் படுத்த படுக்கையாகிவிட்ட பிறகு இவனின் கைக்கு மாறியிருந்தது. அவனது A\L படிப்புக்கும், பின்பு வேலைக்குச் செல்வதற்கும் அது தான் ஆஸ்தான வாகனமாக இருந்தது.

காலையில் எழும்பி பத்து கிலோமீற்றர் தூரம் சைக்கிளில் மிதிக்க முள்ளந்தண்டு கொதிக்கத் தொடங்கிவிடும். பிறகு எட்டு மணி தொடக்கம் ஐந்து மணி வரைக்கும் கேற்றில் நிற்க கால்களும் வலிப்பெடுக்கத் தொடங்கும். வீட்டுக்கு வந்தால் உடனே நீட்டி நிமிர்ந்து படுக்க வேண்டும்.

“அவனுக்கென்ன வயது போட்டுதே! இளந்தாரிப்பிள்ளை.எப்பிடிச் சுறுண்டு போனான்” என்ற அம்மாவின் புலம்பல் ஆறுதலை விட அரியண்டத்தையே அதிகம் தந்தது.

அப்பா தான் இந்த மோட்டார் சைக்கிள் வாங்கும் யோசனையை சொன்னார். இருபதாயிரத்து சொச்சம் புகையிலை செய்யும் போது வங்கியில் போட்ட காசையும் கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.

- தங்கச்சியின் சாமத்தியச் செலவிற்கென்று அம்மா வைத்திருந்த முக்கால் பவுண் சங்கிலி
- அக்கா சட்டை தைத்துக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்த காசு
- பேத்திக் கிழவியின் ஒரு சோடி தூக்கணத்தோடு
- தன் நண்பனிடம் கடன்பட்டது என்று பொய் சொல்லிய அவனது வங்கிக் கணக்கில் இருந்த பணம்

எல்லாமுமாக சேர்ந்து CD-Dawn ஆக மாறியிருந்தன.

*******************

இன்று திங்கட்கிழமை. பொதுவாக திங்கட்கிழமைகளில் பிரதம எழுதுவினைஞருக்கு ‘சூறணவன்’ ஏறிவிடுவது வழக்கம். எனவே அலுவலகத்திற்கு விரைவாகச் சென்றுவிட வேண்டுமென்று நேற்றே எண்ணியிருந்தான்.
அவன் வேலைக்கு வெளிக்கிட்ட போது
“இந்தா தம்பி…. இந்த சீட்டுக்காசை கனகம் அக்காற்ற குடுத்திட்டுப்போ…. பின்னேரமானா கழிவில்லாமல் முழுக்காசும் குடுக்கோணும்”

என்று தாய் சொன்னதை மறுக்கமுடியாததால் இன்று வழமையை விட பத்து நிமிடங்கள் தாமதமாகி விட்டது.

காலை வேளையில் ஸ்ரேஷன் றோட்டால் பயணம் செய்வது சரியான கஷ்டம். பள்ளிக்கூடப் பிள்ளைகளால் நிரம்பி வழியும். மன்னார் றோட்டால் குருமன்காட்டுச் சந்தியின் ஊடாகப்போனால் அலுவலகத்தை இலகுவாக அடைந்து விடலாம்.

குருமன்காடு என்பது 1990களில் உண்மையிலேயே வெறும் காடுதானாம். இப்போது அது வவுனியாவின் முக்கிய நகரமாக வளர்ந்திருந்தது. ‘குட்டிஜெனிவா’ என்று சொல்லுமளவுக்கு எல்லா அரசசார்பற்ற நிறுவனங்களும் இப்பகுதியிலேயே அமைந்திருக்கின்றது.

காளிகோயில் சந்தியைக் கடக்கும் போதுதான் அதனை அவதானித்தான்.

கொழுகொழுவென்று வளர்ந்திருந்த சிறிய நாய்க்குட்டியொன்று நடுரோட்டில் அங்குமிங்கும் பார்த்து மிரண்டுகொண்டு நின்றது. தன்தாயை தவறவிட்டு எப்படியோ ரோட்டிற்கு வந்துவிட்டது.

ராசன் பொதுவாகவே பிராணிகளில் இரக்ககுணம் உள்ளவன். அதிலும் நாய்க்குட்டியென்றால் அதன் மீது தனி அன்பு அவனுக்கு.

மோட்டார் சைக்கிளின்; வேகத்தைக் குறைத்து ஓரமாக நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தான். மரங்கள் மட்டுமே பச்சையாக இருந்தன.

‘அப்பாடா நல்ல காலம்’ என்று சைக்கிளை நிறுத்திவிட்டு நாய்க்குட்டியை நோக்கி ஓடிச்சென்று கைகளில் தூக்கிக்கொண்டான்.

“இந்த வாகன நெரிசலில் ஏன் றோட்டுக்கு வந்தாய். ஏதும் வாகனம் இடிச்சு சாகவெல்லோ போறாய்”

என்று நாய்க்குட்டிக்கு சொல்லியவாறே கோயில் வாசல் வரை சென்று அதனை பத்திரமாக இறக்கிவிட்டான். அந்த சிறிய நாய்க்குட்டி வாலை ஆட்டி தன் நன்றியை தெரிவித்தது.

கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி தன்மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி வந்த போது அங்கே நான்கைந்து இராணுவத்தினர் அதனை சுற்றி வளைத்து நின்றனர்.

“ஏய் இந்த இடத்தில் வாகனம் நிறுத்தக் கூடாது என்று தெரியாதா?”
அவன் பதில் சொல்ல முன்னம் ஒருத்தனின் துவக்குப்பிடி ராசனின் பிடரியைப் பதம் பார்த்தது.

கடைவாசல்களிலும், வீதியோரங்களிலும் வாகனம் நிறுத்தக்கூடாது என்று புதிதாக பிறப்பிக்கப்பட்ட சட்டம் பின்னர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த போதும் இராணுவத்தினர் அவ்வப்போது அதனை கடைப்பிடிக்கத்தான் செய்கின்றனர்.அவர்களை யாரும் கேட்க முடியாது.அவர்கள் நினைத்தால் ராசனை அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்யவும் முடியும்.அந்த மோட்டார் சைக்கிளை கொண்டு சென்று தபாற்கந்தோருக்கு முன்னால் உள்ள வெளியில் கருவாடு காயப் போடவும் முடியும்.

தன் பிடரியைப் பொத்தியபடி நிலத்தில குந்தியிருக்கும் ராசன் மனிதம் தோற்பதை கண்கூடாக கண்டான்.

அவன்மட்டுமல்ல …. நாமும்தான் தினம் தினம் கண்டுகொண்டிருக்கின்றோம்.

(யாவும் கற்பனை)




பின்குறிப்பு : 25.11.2007 அன்று தினக்குரல் பத்திரிகையில் இந்த கதை வெளியாகியது.

Friday, March 14, 2008

இன்றைய காலத்தின் தேவை தொழில்சார் கல்வி

இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பொருளாதார நிறைவு ஏற்படாமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று தொழில்கல்வி மற்றும் தொழில் பயிற்சி வளர்த்தெடுக்கப்படாமையே என்பது அனைவரினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.

பாடசாலைகளில் வாழ்க்கைத் தேர்ச்சி கல்வியினூடாக தொழிற்பயிற்சிகளை வழங்குவதன் பொருட்டு பாடவிதானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதும் அது நடைமுறையில் வெற்றியளிக்கவில்லை என்றே கூறவேண்டும். பாடசாலைகளில் வாழ்க்கைத் தேர்ச்சிக்கல்வி சரியான முறையில் வளர்த்தெடுக்கப் படவில்லை என ஏக்கப்படும் கல்விச் சமூகம் ஏனோ தொழில் பயிற்சி வழங்கும் நிறுவனங்களை மறந்து விடுகின்றது.

கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் பாடசாலைகளும்,திறன் விருத்தி வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களும் தம்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றனவே தவிர இரண்டையும் இணைத்து செயற்பட வைப்பதன் மூலம் கூடிய விளைதிறனைப் பெற்றுக்கொள்ள முடியம் எனச் சிந்திப்பவர் யாருமில்லை.

தரம் 1ல் அனுமதி பெறும் மாணவர்களில் ஏறத்தாழ 4% இனரே பல்கலைக் கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுகின்றனர்.எஞ்சிய 96% மாணவர்களைப் பற்றி கல்வி அமைச்சு அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.

தொழினுட்பக் கல்லூரிகளைப் பொறுத்த வரையில் தரம் 3 ஐப் பூர்த்தி செய்யும் மாணவர் தொடக்கம் க.பொ.த உயர்தரம் சித்தியடைந்தவர்கள்வரை அவரவர் தகைமைக்கேற்ற கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வழிவகைகள் காணப்படுதல் சிறப்பம்சமாகும்.

வெளிநாடுகளில் நடைமுறைப்படுத்தப் படுவது போலவே நமது நாட்டிலும் கைத்தொழில் துறை அபிவிருத்திக்கும் பொருளாதாரத்துறை அபிவிருத்திக்கும் பொருந்துமாறு பாடசாலையை விட்டு விலகிச் செல்வோரை வாழ்க்கைத்தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்விப் பயிற்சியில் ஈடுபடுத்துவதற்கான செயற்திட்டங்களில் கல்வி அமைச்சு முக்கிய கவனம் செலுத்துவதுடன் இந்நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட முன் வர வேண்டும்.

தொழிநுட்பக் கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளை இணைத்துச் செயற்பட வைக்கும் நோக்குடன் திறன் விருத்தி வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சினால் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் “திறன்விருத்தி உதவியாளர்” (Skills Development Assistant) ஒருவர் வீதம் இத்துறையில் ஏற்கனவே முன்னனுபம் உள்ள பட்டதாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் இவர்கள் தமது பணிகளை திறம்பட முன்னெடுத்துச் செல்லவில்லை என்றே கூறவேண்டும்.
மேலும் தொழினுட்பக் கல்விப்பயிற்சி திணைக்களத்தினால் தொழினுட்பக் கல்லூரிகளில் “தொழில் வழிகாட்டல் ஆலோசகர்கள்” (Carrier Guidance and counseling officers) எனும் பதவி நிலையில் பட்டதாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதன் மூலம் தொழினுட்பக் கல்லூரிகளின் ஊடான விளைதிறனை அதிகரிக்கச் செய்தலே இவர்களின் தலையாய பொறுப்பாகும்.ஆனால் இவர்கள் கூட மாணவர்களை உற்பத்தி செய்யும் பிரதான நிறுவனம் பாடசாலை என்பதை உணர்ந்து செயற்படுவதாகத் தெரியவில்லை.

அத்தோடு அண்மைக் காலங்களில் கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு “ஆலோசகர்” (Councilor) என்னும் பதவி நிலையில் பட்டதாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.மாணவர்களின் பிரச்சினைகளை இனம் கண்டு தகுந்க ஆலோசனைகளை வழங்குவதுடன் உளநெருக்கீட்டிற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை சேவையை வழங்கி வழிநடத்துதலும் இவர்களின் பிரதான பணியாகும்.இவர்கள் தமது மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்குவதற்கும் முன்வருதல் வேண்டும்.

பாடசாலையை விட்டு இடைவிலகும் மாணவர்களையும் க.பொ.த சா/த மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் போதுமானளவு பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளாத மாணவர்களையும் தொழில்சார் கற்கை நெறிகளுக்கு அறிமுகம் செய்வதன் மூலம் மாணவர்களை நெறிப்படுத்த முடியும் என்பது திண்ணம்.

திறன்விருத்தி உதவியாளர்கள், தொழில் வழிகாட்டல் ஆலோசகர்கள், மற்றும் ஆலோசகர்கள் ஆகிய மூவரும் இணைந்து செயற்படுதன் மூலம் தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகளில் அதிகளவு மாணவர்களை ஈடுபடுத்தமுடியும் என்பது ஒருபுறம் இருக்க ஆசிரியர்களும் இப்பணியில் தம்மை இணைத்துக்கொள்ள முன்வரவேண்டும்.

மாணவர்களுக்கு கற்பித்தல்,பரீட்சைக்கு தயார்படுத்தல்,அவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் போது மனமகிழ்சியடைதல் என்பவற்றுடன் ஒரு ஆசிரியரின் பணி நிறைவடைந்துவிடுவதில்லை. அதனையும் தாண்டி ஆசிரியர்களின் பணி நீளுதல் வேண்டும் என்பதே ஒட்டுமொத்தக் கல்விச் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்பாகும்.ஆசிரியர்களும் இதனை உணர்ந்து செயற்பட முன்வரவேண்டும்.

ஒரு பிள்ளையானது தன் பெற்றோர்களுடன் செலவிடும் நேரத்தை விட ஆசிரியர்களுடன் செலவிடும் நேரமே அதிகமாகும்.மாணவர்களுடன் அதிகளவு தொடர்புகளை வைத்திருப்பவர்களும் ஆசிரியர்களே.எனவே ஆசிரியர்கள் மாணவர்களை சிறந்த பெறுபேறுகளை நோக்கி தயார்படுத்துவது மட்டுமின்றி போதியளவு பெறுபேற்றைப் பெற்றுக் கொள்ளாத மாணவர்களையும் வழிப்படுத்தி நெறிப்படுத்தலும் தமது கடமையே என்பதை உணர்ந்து செயற்படல் வேண்டும்.

இலங்கை முழுவதிலும் அமைந்துள்ள தொழினுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் வருடாந்தம் 70,000 மாணவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்.இம் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் 50,000 இனால் அதிகரிக்கக் கூடிய மனிதவள மற்றும் ஏனைய வளங்கள் இந்நிறுவனங்களில் காணப்படுகின்றது.இந் நிறுவனங்களின் தற்போதைய தேவை மாணவர்களின் தொகையை அதிகரித்தலே.

எனவே ஆசிரியர் சமூகம் தமது மாணவர்களை இந் நிறுவனங்களுடன் இணைத்து,அம்மாணவர்களை தொழிற் பயிற்சிகளை கற்கச் செய்வதன் மூலம் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருப்பது மட்டுமன்றி, இம் முயற்சியானது மாணவர் நலனையும் தாண்டி எமது நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் உறுதுணையாக இருக்கும் என்பதை புரிந்து செயற்படல் வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தர்களும் இப்பணியை செவ்வனே நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்ப்பதுடன்,இப்பொறுப்பை ஆசிரியர்களும் எடுத்துக் கொள்வதன் மூலம் இன்னும் சிறந்த பெறுபேறுகளை பெறமுடியும் என்பது எம் எல்லோரினதும் ஒட்டு மொத்த எதிர் பார்ப்பாகும்.


பின்குறிப்பு : இந்த கட்டுரை அகில இலங்கை ரீதியில் தமிழ் ஆசிரியர்களால் வெளியிடப்படும் "அகவிழி" சஞ்சிகையில் December 2007 ல் வெளியாகியது.

Sunday, March 2, 2008

சலனம்

எட்டரைக்கு இன்னும் பதினைந்து நிமிடங்களே இருந்த அவசரத்தில் மோட்டார் சைக்கிளின் வேகத்தை அதிகரித்தேன்.

திங்கட்கிழமைகளில் சீசிக்கு ‘சூறணவன்’ ஏறிவிடும்.

“சனி, ஞாயிறு வீட்ட நிண்டு திண்ட கொழுப்பு” என்ற பீயோன் கந்தசாமியின் திட்டு மறுக்கமுடியாத உண்மை.

மாதத் தொடக்கத்தில் ஒழுங்காய் வந்து ஓவர்ரைம் எல்லாம் கவர் பண்ணிய பிறகு கடமை, கண்ணியம், கட்டுப்பாடெல்லாம் காற்றில் பறந்து விடும். கயிறு எறிந்து தான் மனிசனைப் பிடிக்க வேண்டும்.

ஓவர்ரைம்கவர் பண்ண வருகின்ற நாட்களில் மட்டும் அற்ரெண்டன்ற் ரெயிஸ்ரரில் ஒரே இரத்தக் களரிதான். மீதி நாட்களில் எல்லாம் அற்ரெண்டன்ற் ரெயிஸ்ரர் ‘சிவனே’ என்றிருக்கும். பத்தரைக்கு அலுவலகம் வந்தாலும் கூட 8.31 என்று பயப்படாமல் சைன் பண்ணலாம்.

வெள்ளிக் கிழமை வீட்டுக்கு போகும்போது சம்பளம் கைக்கு வந்துவிட்டது. மாதச் செலவிற்கான பத்தாயிரம் ரூபாவை மனைவியிடம் கொடுத்த பிறகு பொக்கெற் மணியும் பெற்றோல் செலவுமான எனது மீதியில் (அரியஸ் வந்த ஆறாயிரத்தை அமுக்கி விட்டேன்) மனைவிக்கு ஒரு சாறியும் றோயல் காடினில் ஸ்பெசல் ஐஸ்கிறீமும் வாங்கிக் கொடுத்ததன் விளைவாக மூன்று நாட்களாக எனக்கு அடித்தது யோகம். ஹட்ரிக் சாதனை. இரவும் நித்திரை கொள்ள பன்னிரண்டு மணி தாண்டி விட்டது. ஏழரை மணிக்கு திடுக்கிட்டு முழித்தபோது, பக்கத்தில் படுத்து மாடு நித்திரையாய்க் கிடந்தாள். மற்றைய நாட்களில் இந்நேரம் முட்டைப் பொரியலின் வாசம் மெலிதாய் காற்றில் மிதந்து வரும்.

தட்டி எழுப்புவதற்காக கையைக் கொண்டு போனேன்.

‘பாவம் நித்திரை கொள்ளட்டும்’ என்ற எண்ணம் ஏற்பட தலையைத் தடவி “இண்டைக்கு பாண வேண்டுவம்” என்றேன்.

அவள் சந்தோஷத்துடன் திரும்பிப்படுத்தாள்.

கடைக்கு போய் வந்து வெளிக்கிட பதினைந்து நிமிஷம் லேற்றாகிவிட்டது. அரைறாத்தல் பாணும் கப்பல் வாழைப் பழமும் இத்தனை கனம் கனக்கும், என்று எனக்கு இன்றைக்குத்தான் தெரியும். மணிக்கூட்டு கோபுர சந்தியைக் கடக்கும் கணத்தில் புதிய ஸ்கூட்டி பெப்பில் வேகமாக என்னைக் கடந்த அந்த அழகியை (ஆசிரியைகள் மன்னிக்கவும்!) எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.

தோளில் தொங்கிய கான்ட்பாக்கும், பின்சீட்டில் கட்டப்பட்டிருந்த பேப்பர் கட்டும் “ரீச்சர் வாறா வழி விடுங்கோ” என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன.

‘எங்கயோ கண்ட மாதிரி இருக்குதே’ என்று யோசிக்கத் தொடங்க முன்; ஞாபகத்திற்கு வந்து விட்டாள்.

ஒன்பதாம் வகுப்பில் யாழ் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் மலர்விழி என்னுடன் படித்த நாட்களில் அவளின் தந்தை சுப்பையா எங்களுடன் படித்த எல்லாப் பெடியளுக்கும் மாமாதான். 1986ஆம் ஆண்டு திருகோணமலையிலிருந்து இடம் பெயர்ந்து வந்து அந்தப் பாடசாலையில் படித்தாள்.

பக்கத்து வளவுக்குள் கஸ்டப்பட்டு எறிந்து விழுத்திய மாங்காயை அவளிடம் கொடுத்து விடுவதில் எங்களிடையே நடக்கும் போட்டி இருக்கிறதே! அதை சொற்களில் வர்ணித்து விட முடியாது.அனேகமான நாட்களில் நான் கொண்டு வரும் மாங்காய்க்குத்தான் அவளிடம் கடி வாங்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

‘அட இவளா!’ என்ற ஆச்சரியத்துடன் சைட் கண்ணாடியில் முகத்தைப் பார்த்து என் அழகை உறுதிப்படுத்திக் கொண்டேன்;.

ஒன்பதாம் வகுப்பில் அவள் சொல்லாமல் கொள்ளாமல், வேறு பள்ளிக்கூடம் மாறிச் சென்ற போது

“லெவல் பிடிச்சவள்………. போய்த் துலஞ்சாள்” என்று மற்றப் பெட்டையள் சந்தோஷப்பட….. எனக்குள் இனம் புரியாத ஏதோ ஓர் உணர்வு. யாருக்கும் தெரியாமல் கலங்கிய கண்களை துடைத்துத் தனிமையில் அழுதிருக்கிறேன்.

அவளின் முகவரி எழுதிய டையரியும், கொட்டை கொட்டையான எழுத்தில் அவள் எழுதித் தந்த தீபாவளி காட்டும் இன்றும் கூட என் மனைவிக்குத் தெரியாமல் ஒழித்து வைத்திருக்கிறேன்.

A\L படித்தபோது, பல்கலைக்கழகத்தில், தற்போது வேலை செய்யும் அலுவலகத்தில் எத்தனையோ பெண்களைப் பார்த்து….பேசி…. பழகி….. ஆனாலும் ஏனோ அவளை மட்டும் என்னால் மறக்க முடிவதில்லை.

என் மனைவியைப் பெண் பார்க்கப் போனபோது கூட தமிழ் சினிமாப்படம் போல, ‘தேத்தண்ணி கொண்டு வந்து தருபவள் அவளாக இருக்கக்கூடாதா?’ என்ற எண்ணத்துடன் நிமிந்து பார்த்தேன்.

என் மனைவி (அப்போது செல்வி. அமுதினி வேதநாயகம்) குழந்தை முகமாய்ச் சிரித்தாள்;. அவளுக்காய் இவளை புறக்கணித்து காத்திருக்குமளவு பொறுமையில்லாமல் செல்வி வேதநாயகத்திற்கு திருமதி என்ற அந்தஸ்தை வழங்கினேன்.ஒன்றரை வருட திருமண வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தக் குறையையும் அவள் எனக்கு வைக்கவில்லை.

வவுனியா மகாவித்தியாலய வாசல் ‘U’ வளைவில் மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டு திருப்பி ஸ்கூட்டி பெப்பை பின் தொடர்ந்தேன்.

‘பின் சில்லு காத்துப் போய்விட்டது’ என்று சோட்லீவு போடும் எண்ணத்துடன் அவளை பின்தொடர்ந்து சென்று பாடசாலையை கண்டு பிடித்த பிறகு அலுவலகம் சென்றேன்.
எனக்கு வேலை ஓடவில்லை. ‘எப்போதடா 12.30 ஆகும்’ என்று காத்திருந்து அரைநாள் லீவு போட்டு பாடசாலைக்கு விரைந்தேன். எனது நல்ல காலம் பாடசாலை ஸ்ராப் மீற்றிங் தொடங்கும் ஆயத்தங்களில் மூழ்கி இருந்தது.

பீயோன் போய் சொன்னதும் என்னை நோக்கி வந்தவள் அடையாளம் காண முடியாமல்
உற்று நோக்கி………………..
ஆச்சரியத்தால் புருவங்களை உயர்த்தி…………………
முகம் நிறைய மலர்ச்சியைக் காட்டினாள்.

‘என்னைத் தெரிகிறதா?’ என்று புதிர் போட்டு விளையாடும் என் எண்ணத்தை

“அட……செல்வகுமார்……… என்னால நம்பேலாமல் கிடக்கு” என்ற அவளின் வார்த்தைகள் கலைத்தன.

“வாங்கோ கன்ரீனுக்க போயிருப்பம்”

‘எப்படி என்னை மறந்திருக்கமுடியும்’ என்ற சிந்தனையோட்டத்துடன் அவளைத் தொடர்ந்து சென்றேன்.

“காசி அண்ண…… சூப்பராய் ரண்டு ரீ போடுங்கோ” என்றவள் என்னை நோக்கி திரும்பி சிரித்தாள்;

ஐந்து வருடங்கள் முன்னே சந்தித்திருந்தால்;

‘ஆளே அடையாளம் தெரியவில்லை’

‘என்ன மாதிரி வளர்ந்து விட்டாய்’

என்றெல்லாம் கதைத்திருக்கலாம். காதருகே இளநரை எட்டிப்பார்த்து சுகம் விசாரிக்கும் வயதில் இது சரி வராது.

“அப்ப ………. எப்பிடி சுகம்?”

“நீங்கள் தான் சொல்ல வேண்டும்”

பத்து நிமிடங்களில் பத்து வருடஷங்களை சுருக்கமாய் பகிர்ந்து கொண்டோம். எனக்கு திருமணமானதை மட்டும் மறைத்து விட்டேன்.

கதைத்துக் கொண்டிருக்கும் போது தனக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதையும் பதிவுத் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருப்பதையும் தெரிவித்தாள்.

“கட்டாயம் நீங்கள் ………. கலியாண வீட்டுக்கு வரோணும்” என்றாள்.

‘கலியாணத்திற்கு இப்ப என்ன அவசரம்? கொஞ்சக்காலம் பொறுத்து இருந்திருக்கலாம்’ என்று மனதிற்குள் கொதித்தேன்.
நிச்சயம் அவளைக் கட்டாயப்படுத்தித்தான் இந்தக் கலியாணத்திற்கு சம்மதிக்க வைத்திருப்பார்கள். எவ்வளவு காலம் தான் அவளும் என்னைத் தேடி அலைவது? எது எப்படி நடந்தாலும் பரவாயில்லை. அவளுக்கு மறுவாழ்வு கொடுப்பதுதான் எனது முதல் கடமை என்று முடிவெடுத்துக் கொண்டேன்.

அவள் அடிக்கடி தனது கைக்கடிகாரத்தை பார்த்தபடிதான் என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தாள். பின்பு பொறுமையிழந்தவளாய்…….

“ஸ்கூல் பெல் அடிக்கப் போகுது. சோட்லீவு போட்டுட்டு வெளிக்கிடேக்கத்தான் நீங்கள் வந்தனியள்”
நான் அவளை உற்று நோக்கினேன்.

“உங்களக் கண்டதில சந்தோஷம். இண்டக்கு சாறி எடுக்கப் போறதுக்கு ‘அவற்ற’ வீட்ட வாறனெண்டு சொன்னனான். பார்த்துக் கொண்டிருப்பினம்.”

சண்டாளி சிரித்துக் கொண்டு சொல்ல என் எண்ணமெல்லாம் வெடித்துச் சிதறியது.

“சரி நானும் போட்டு வாறன். பிறகு சந்திப்பம்”

மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்தினேன். ஏனோ என் மனைவி மீது கோபம் கோபமாக வந்தது. இன்று வெள்ளணவே வீட்டுக்குச் சென்றது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும். ஆச்சரியத்துடன் என்னை வரவேற்ற அவள் மீது தேவையில்லாமல் எரிந்து விழுந்தேன். பாத்றூமிற்குள் சென்று கதவை அறைந்து சாத்தினேன்.

குளிர்ந்த நீர் உடம்பை நனைக்க நனைக்க கோபம் அடங்கியது. சாப்பாட்டு மேசையில் அமர்ந்தேன்.
-சம்பா அரிசிச் சோறு….
-கோழி இறைச்சிக் கறி….
-மாட்டீரல் பொரியல்……
-கத்தரிக்காய் வெள்ளைக்கறி….

எனக்குப் பிடித்த கொம்பினேசன் சமைக்கப்பட்டிருந்தது.
கிளாசில் வைக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் சலனமற்று தெளிவாக இருந்தது.

“பெட்றூமுக்கை சரியான வெக்க. பக்கத்து அறேக்க, பாஃனுக்கு கீழ பாயைப் போடு” என்று கண்சிமிட்டிய என் உத்தரவை நிறைவேற்றச் செல்கிறாள் என் மனைவி.

“அதிகம் சலனப் படுபவர்கள் ஆண்களா? பெண்களா?” என்ற சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத் தலைப்பு ஞாபகம் வர, என் உதடுகளின் மெல்லிய புன்னகை மலர்கின்றது.

(யாவும் கற்பனை????)

பின்குறிப்பு : இந்த கதை 09.12.2007 அன்று தினகரன் பத்திரிகையில் வெளியாகியது.

Wednesday, February 20, 2008

கைதிகள் or நகரப் பயணம்


குடிசை வீடு....
குப்பி விளக்கில் படிப்பு...
இடையிடையே வட்டமிட்டு செல்லும் விமானங்கள்...
ஆனாலும் வாழ்க்கை இனித்தது...!

நகரத்துக்கு வந்துவிட்டால் சந்தோசமாம்
நகரத்துக்கும் வந்தாயிற்று....
மாடிக் கட்டிடங்கள்...
பளிச்சிடும் மின்விளக்குகள்...

அத்துடன் புதிதாய்..?

சட்டைப்பையில் அனுமதிப்பத்திரம்...!
திறந்த வெளிக் கைதிகள் நாம்.

பின் குறிப்பு : நான் 1999 இல் வவுனிக்குளத்திலிருந்து (உங்களுக்கு தெரியாமல் இருப்பது நல்லதென்றே எண்ணுகிறேன்) வவுனியாவுக்கு வந்தபோது எழுதிய மிகச்சிறிய கவிதை இது.

இந்த கவிதையை புரிந்து கொள்ள நீங்கள் 2001 க்கு முற்பட்ட காலங்களில் வவுனியா மாநகரத்தில் வசித்திருக்க வேண்டும்...

Friday, February 15, 2008

அறுவடை நாள்


வானம் முழுவதும் மப்பும் மந்தாரமுமாக இருள் மண்டிக் கிடந்தது. உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த கனகலிங்கத்தார் நீண்ட பெருமூச்சொன்றை விட்டபடி எழும்பி இருந்தார்.பக்கத்துப் பாயில் படுத்திருந்த பாக்கியமும் நித்திரையில்லாமல் முழிப்பாகத்தான் கிடந்தாள்.

“பேசாமல் படுத்து நித்திரையைக் கொள்ளப்பா.எல்லாம் தல விதிப்படிதான் நடக்கும். நீ யோசிச்சு வருத்தக் காரனாகப் போறா”

அவர் பதில் ஏதும் சொல்லாமல் தலைமாட்டில் இருந்த தண்ணிச் செம்பை எடுத்துக் கொண்டு முற்றத்திற்குப் போனார்.வாயைக் கொப்பழித்த வாறே வானத்தை அண்ணாந்து பார்த்தார்.அது கரும் இருளாய்ப் பயம் காட்டியது. மருந்துக்குக் கூட நட்சத்திரங்களைக் காண முடியவில்லை.

அந்தக் கரும் இருள் இப்போது இரண்டு பெரும் அசுரர்களாக மாறியது. இரண்டு அசுரர்களும் முட்டி மோதத் தயாராக இருந்தார்கள். அவர்களின் கைகளில் இருக்கும் நீண்ட வாள்கள் ஒன்றையொன்று மோதி தேய்படும் போது உருவாகின்ற நெருப்பே மின்னலென்றும் அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் சத்தமே இடியென்றும் அவர்களில் தோற்றுப் போனவனின் கண்களிலிருந்து வடியும் கண்ணீரே மழையென்றும் குஞ்சியாச்சி சொன்ன கதை ஞாபகம் வந்தது.

“கடவுளே இந்த அசுரன்கள் சண்ட பிடிக்காமல் சமாதானமாப் போவேணும்”
தன் அறியாமையை எண்ணிய போது உதடுகளில் புன்னகை மலர்ந்தது.

“என்னப்பா சிரிச்சுக் கொண்டு வாறாய்”

“ஒண்டுமில்ல குஞ்சியாச்சி சொன்ன கதை ஒண்டு ஞாபகம் வந்தது”

“சரி..சரி பழங்கதையை துவங்காமல் படுத்து நித்திரயக் கொள்ளப்பா”

கணவனை உரப்பினாலும் அவளின் உள்மனமும் வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டுதானிருந்தது.

“என்ர சிவபுரத்தானே…..இண்டக்கு மழ வராட்டி அஞ்சு கொத்தரிசீல பொங்கிப் படைக்கிறன்”

இரண்டு கரிய நிற உருவங்கள் கனகலிங்கத்தாரை நோக்கி வருகின்றன. தூரத்தில் பார்க்கும் போது அவை மனித உருவங்களாகத் தான் காட்சியளித்தன.ஆனால் கிட்ட வரும்போதுதான் அவை பெரிய இராட்சத உருவங்கள் என்பது தெரிகின்றது. கனகலிங்கத்தார் பயத்தால் எழும்ப முயன்ற போது ஒரு உருவம் தனது கால்களில் ஒன்றை அவரது நெஞ்சில் வைத்து அழுத்துகின்றது.அவரால் மூச்சு விட முடியவில்லை. மெதுவாகத் தலையைத் திருப்பி மற்ற உருவத்தைப் பார்க்கின்றார். அந்;த உருவம் ஒரு கையால் பாக்கியத்தின் கழுத்தை நெரித்தபடி மற்றைய கையை அவரின் பேரப்பிள்ளைகளை நோக்கிக் கொண்டு போகின்றது. கனகலிங்கத்தாருக்கு எங்கிருந்தோ அசுர பலம் வருகின்றது.

“ஐயோ….அதுகள விடு…அதுகள விடு…”

என்று திமிறிக் கொண்டெழும்புகின்றார். உள் அறைக்குள் படுத்திருந்த சியாளினி எழும்பி ஓடி வந்து விறாந்தை லைட்டைப் போடுகின்றாள்.

“என்னப்பா? ஏன் சத்தம் போடுறியள்? கனவேதும் கண்டனியளே?”

குணவனின் சத்தத்தைக் கேட்டுப் பயந்த பாக்கியத்தின் கை கால் எல்லாம் உதறிக் கொண்டிருந்தது.

“என்னப்பா வாயைத் திறந்து சொல்லன்?”

“ஒண்டுமில்ல ஒரு கெட்ட கனவடி.சரியாப் பயந்து போனன்”

“நாசமாப் போறவனே நிம்மதியாப படனடா. மழ வந்து வயல அழிஞ்சா அழிஞ்சு போட்டுப் போகட்டும்…..உந்தத் தெய்வங்களையெல்லாம் கும்பிடுறது வீண்வேலை.ஒரு மனிசனை இப்பிடியே சோதிக்கிறது.”

பாக்கியம் தன் கோபத்தைத் தெய்வங்களின் மீது திருப்பித் திட்டித் தீர்த்தாள்.

“அப்பா சின்னண்ண காசு அனுப்புறனெண்டு சொன்னவனெல்லே. அவன் கட்டாயம் அனுப்புவன். நீங்கள் சுகமாய் இருந்தாத் தானே நாங்கள் சீவிக்கலாம். யோசியாமல் படுங்கோ”

இளையவள் தன் பங்குக்கு புத்திமதி சொல்லி விட்டுப் போனாள். அந்தக் குழந்தைகள் இரண்டும் எதுவுமே அறியாமல் நித்திரையாகக் கிடந்தார்கள்.

மூத்த மகள் பிரார்த்தனாவை முல்லைத்தீவில் ஒரு பெடியனுக்கு கட்டிக் கொடுத்த போது பாக்கியத்திற்கு அவ்வளவு திருப்தியில்லை.மகளை அருகில் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு.

“அடியே அது பொன் விளையுற பூமியடி.விவசாயி எண்டவன் சும்மா லேசுப்பட்ட ஆளில்லை.அவன் மண்ணப் பொன்னா மாத்திறவனடி.அவன் என்ர பிள்ளையை ராசாத்தி மாதிரி வச்சிருப்பன் பாரடி”

திருப்பதி கனகலிங்கத்தாரின் நம்பிக்கையை வீணாக்கவில்லை.தனக்குச் சொந்தமான வயலில் கடுமையாய் உழைத்து பிரார்த்தனாவை செல்வச் செழிப்புடன் தான் வைத்திருந்தான்.

விதியின் விளையாட்டின் முன்னால் அவன் தோற்றுப் போக வேண்டி நேர்ந்தது ஆண்டாணடு காலமாக எத்தனையோ மக்களுக்கு உணவையும் உழைப்பையும் தந்த கடல் அன்னை சீறிப் பாய்ந்ததில் திருப்பதியும் பிரார்த்தனாவும் அடித்துச் செல்லப் பட்டு பிணம் கூடக் கிடைக்கவில்லை.

கிளிநொச்சிப் பெரியாஸ்பத்திரியில் ஒன்றும் வவுனியா பெரியாஸ்பத்திரியில் ஒன்றும் என அவரின் பேரப்பிள்ளைகள் பல நாட்கள் கழித்து அவர்களின் கைகளில் கிடைத்தன.மகளையும் மருமகளையும் அந்தப் பிள்ளைகளின் முகங்களில்தான் கண்டு கொண்டிருக்கிறார்கள்.

வவுனியாவில் கொஞ்ச நாட்களாக யாரை யார் சுடுகிறார்கள் என்று தெரியாமல் தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப் பட்டபோது மூத்த மகனின் பிரேதம் குருமண்காட்டு ரெயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப் பட்டது.

அடுத்தடுத்து அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்க மனமுடைந்து இனி இந்த நாட்டில் உயிர் பிழைப்பது கஸ்ரம் என்று இந்தியா செல்ல முடிவெடுத்தார்கள். பொருள் பண்டம் காணி பூமி எல்லாவற்றையும் அகப்பட்ட விலைக்கு விற்று விட்டு மன்னார்க் கடலால் இந்தியா சென்ற போது இடையில் நேவியிடம் அகப்பட்டு கரைக்கு இழுத்து வரப் பட்டார்கள்.

“ஒயா ஒக்கம கொட்டித? தமில் னாடு யனவாத?”

என்று விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டது மட்டுமின்றி அவர்கள் தமிழ் நாட்டுக்கு கடத்திச் சென்ற காசு நகையெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டது. நேவிக்காரர் சுட்டபோது ஒன்றிரண்டு வள்ளங்கள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றன. அவற்றில் ஒன்றில் அவர்களின் இரண்டாவது மகனும் அகப்பட்டுக் கொண்டான்.

செய்வதறியாது திகைத்து நின்ற கனகலிங்கத்தார் பிறந்த மண்ணே தஞ்சம் என்று புதுக்குளம் வந்து சேர்ந்தார்.போவதற்கு வீடு வாசலுமில்லை. கடவுளை நம்பி சிவன்கோயில் மண்டபத்தில் போய் அமர்ந்து கொண்டார்.

“என்னடி பிள்ள? உள்ளுக்க வா.இனி இந்தக் கோயில்தான் தஞ்சம்”
அவள் தயங்கிக் கொண்டு நின்றாள்.

“என்னடி?கூப்பிட்டா வரமாட்டியே?” ;பளார்’ என்று கன்னத்தில் அறைந்தார்.

“இல்லயப்பா சுகமில்ல.உள்ளுக்க வரக்கூடாது”

“என்ர சிவபுரத்தானே.நீ இன்னும் உள்ளுக்கை இருக்கிறியோ?இல்லாட்டி வெறும் கல்லுத்தானோ?”
ஆனால் அந்த ஊர் மக்கள் இன்னும் மனிதர்களாகத் தான் இருந்தார்கள். கிட்டத்தட்ட அந்தக் கிராமமே திரண்டு வந்து விட்டது.

“என்ன கனகலிங்கம் நீயென்ன பிறத்தியானே? நானொருத்தன் உயிரோட இருக்கிறத மறந்திட்டியே!என்ன வீட்ட வா”-சண்முகம்.

“எடி பாக்கியம் நீயென்ன அனாதையோடி?கூடப் பிறந்தவன் நான் இல்லையோடி?”-செல்லத்துரை.

“சியாளி நீ என்ர வீட்ட வாடி”-சுகன்யா.
இப்படி ஆளாளுக்க கூப்பிட்ட போதும் கனகலிங்கம் அசைந்து கொடுக்கவில்லை.

“இருந்த காணி பூமி இ சாமான் சக்கெட்டெல்லாம் வித்துப் போட்டம்.நகை நட்டுக் காசையெல்லாம் நேவிக்காரன் கொண்டு போட்டான்.இனி நாங்கள் இனி நடுத்தெருவிலதான்”
பாக்கியம் பிரதட்டை செய்தாள்.

“கனகலிங்கம் நீ திமிர் பிடிச்சவன்.ஒருத்தற்ற வீட்டயும் போகமாட்டாய்.வா…வந்து உன்ர வளவுக்க இரு.வீட்டோட கிடக்கிற வயலச் செய்.அரிவு வெட்டேக்க வாடகையையும் குத்தகையையும் தா.இப்ப முதலில வளவுக்க போவம் வா”

வுpதானையார் கூப்பிட்ட போது மறுக்க முடியவில்லை.

வுpதானையார் அவருக்கு மச்சான் முறை. கனகலிங்கத்தாரின் வீட்டுடன் இருந்த இரண்டு ஏக்கர் வயல் இ கோயில் பக்கம் இருந்த ஒரு ஏக்கர் தோட்டக் காணி இ வடக்கு வாய்க்கால் பக்கம் இருந்க நான்கு ஏக்கர் வயல் எல்லாமுமாகச் சேர்த்து ஏழு இலட்சத்திற்கு அவர்தான் வாங்கியிருந்தர்.

“விதானைக்கு பத்து லச்சத்துக்கு மேல லாபம்.சொந்த மச்சான் எண்டும் பாக்காமல் அமுக்கிப் போட்டான்”
என்ற பேச்செல்லாம் அன்றுடன் அடிபட்டுப் போய்விட்டுது.

“கனகு எனக்குச் சரியான வேதினயாக் கிடக்கடா.ஏழு லச்சத்தையும் துலச்சுப் போட்டு வந்து நிக்கிறா.முழுக்காணியையும் திருப்பித் தரேலாது.வேணுமெண்டா வீடு கிடக்கிற நாலு பரப்பையும் எழுதித் தாறன்”
கனகலிங்கத்தாரின் கண்கள் கலங்கி விட்டன.

“வேண்டாம் மச்சான்.நீ இப்பிடிக் கேட்டதே காணும்.மனசில தெம்பில்லாட்டியும் உடம்பில தெம்பிருக்குதடா.வீட்டுக்குப் பின்னால் கிடக்கிற வயல மட்டும் செய்யுறன்.குத்தகய மட்டும் வேண்டாமெண்டு சொல்லக் கூடாது”
அந்த நேரத்திலும் கனகலிங்கத்தாரின் தன்மானம் விதானையாரை மெய்சிலிர்க்க வைத்தது.

ஒன்றிரண்டு நாள் செல்ல மெல்ல மெல்லக் கவலை கரைந்து வயலில் இறங்கி விட்டார். சேறும் சகதியுமாய் இருந்த மண்ணில் கால்கள் புதைந்த போது ஒரு இன்ப ஊற்றுப் பெருக்கெடுத்தது. அப்படியே அந்த மண்ணைக் கைகளால் அள்ளி முகர்ந்து பார்த்துஇகன்னங்களில் பூசிக்கொண்டார்.
ஆறு மாதங்கள் கடுமையாக உழைத்தார்.அந்த உழைப்பு நெல்மணிகளாய் காய்த்து முற்றிப் பாரம் தாங்க முடியாமல் தலை சாய்த்து நின்ற காட்சி அவரது உழைப்புக்கு மரியாதை கொடுக்க அவை தலை சாய்ந்திருப்பது போன்றிருந்தது.

பக்கத்துக் கொமினிக்கேசனுக்கு இளைய மகனிடமிருந்து ரெலிபோன் வருவதும் வழமையாகி விட்டிருந்தது. கடைசியாக ரெலிபோன் எடுத்தபோது தனக்கு சினிமாத் தியேட்டர் ஒன்றில் போஸ்டர் ஒட்டும் வேலை கிடைத்திருப்பதாகவும்இ பின்னேரம் ஆறு மணிக்கு முன்னர் ‘காம்ப்’ இற்கு சென்றுவிடவேண்டும் என்றும் சொல்லியிருந்தான்.

“இஞ்சேரப்பா இந்த முறை நல்ல விளைச்சல்.பூமித்தாய் மனம் வச்சிருக்கிறாள். பொங்கலுக்கு முன்னம் அரிவை வெட்டிப் போடோணும். முத்தத்தில பெரிய பானேல பொங்க வேணும். புக்கஇமோதகம்இவடை எண்டு அயலட்டை எல்லாத்துக்கும் குடுக்கோணும். குழந்தயளுக்கு எங்கட கஸ்டம் விளங்காதெல்லே”

பாக்கியம் தன்னை மறந்து கதைத்து விட்டு எங்கே கணவன் கோபித்துக் கொள்வாரோ என்று பயந்து “குழந்தயளுக்கு எங்கட கஸ்டம் விளங்காதெல்லே”
என்று புத்திசாலித்தனமாய் சேர்த்துக்கொண்டாள்.

“விதானையாற்ற குத்தகைக் காசை முதலில குடுக்கோணும்”

அரிவு வெட்டுஇசூடடிப்பு போன்ற வேலைகளுக்கு ஆட்களைச் சொல்லிவிட்டு பின்னேரம் வீட்டுக்கு வந்த போது கருமுகிற் கூட்டமொன்று மந்தாரம் போட்டது. கொஞ்ச நேரத்தில் கலைந்து விடும் என்றுதான் முதலில் நினைத்தார்.

வர வர இருள் கனத்ததோடு இரவுச் செய்தியின் போது “ இன்று வடக்குக் கிழக்கின் பல பாகங்களிலும் கடுமையாக மழை பெய்யும்” என்றும் அறிவித்தார்கள்.

வானிலை அறிக்கைகளில் கூட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தன.

எமது நாட்டு வானிலை அறிக்கைகள் பெரும்பாலும் எதிர்மாறாக இருப்பது வழக்கம். “இண்டக்கும் இந்தச் செய்தி பிழையா இருக்க வேணும்” என்று கடவுளை வேண்டினார். உழைப்பின் பயன் கைகளுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தின் விளைவு அது.

அந்த நீண்ட இரவு விடிந்த போது வானம் சற்று வெளித்திருந்தது.

“பாக்கியம் நான் போட்டு வாறன்”

தேநீர் கூடக் குடிக்காமல் வேலை செய்யும் ஆட்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக ஓட்டமும் நடையுமாய்ச் செல்லும் அவரைப் பார்க்க பாக்கியத்தின் கண்கள் குளமாகிவிட்டன.

“மனிசன்ர உழைப்பு ஒருநாளும் வீணாகாது” என்று பாக்கியத்திற்கு ஏற்பட்ட நம்பிக்கையைப் பொய்யாக்குவது போல முதலாவது மழைத்துளி அவளது உச்சந் தலையில் பாறாங்கல்லாய் விழுந்தது.

கனகலிங்கத்தார் திரும்பி வந்த போது பொங்குகின்ற முற்றம் வெள்ளக் காடாய்க் கிடந்தது.




பின்குறிப்பு : இந்த கதை 13.01.2008 அன்று தினக்குரல் பத்திரிகையில் வெளியாகியது.

என்னைப் பற்றி


காலை எழுந்தது முதல் இரவில் படுக்கைக்கு செல்லும் வரை கழுத்தை நெருக்கும் வேலைப் பளுக்களுக்கும் பொறுப்புக்களும் இடையே தமிழை மறந்து விடாது ஏதாவது கிறுக்கி விட வேண்டுமென துடிக்கின்ற ஒருவன்.....


நான் கிறுக்கத் தொடங்கி காலங்கள் கடந்து விட்டன. என் கிறுக்கல்களில் பல பாராட்டையும் பெற்றுவிட்டன. பல பத்திரிகைகளிலும் வந்துவிட்டன. ஆனாலும் நான் சிந்திக்கிறேன்...... இது போதுமா??? என் படைப்புகள் அனைவரையும் சென்றடைகின்றனவா? எனக்கு வெளிப்படையாகவே தெரிகிறது. நிச்சயமாக இல்லை. எனவேதான் நானும் இந்த வழியில் நுழைவதென முடிவெடுத்தேன்.இதோ நுழைந்தும் விட்டேன்.....


நான் இங்கு புதியவன்.ஆனாலும் எனக்கு தெரியும்.தமிழுலகம் எப்போதுமே படைப்பாளிகளை கைவிடுவதில்லை. நான் என்றுமே உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லயோ உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள். நிறைகளை விட குறைகளை விரும்புபவன் நான்.என்னைச் செதுக்க அவற்றால் தான் முடியும்......


இன்று முதல் வலைப்பூக்களில் தங்கள் படைப்புக்களை தூவும் ஆயிரக்கணக்கான கலைஞர்களில் நானும் ஒருவன்.....


நன்றிகள்