Friday, March 14, 2008

இன்றைய காலத்தின் தேவை தொழில்சார் கல்வி

இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பொருளாதார நிறைவு ஏற்படாமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று தொழில்கல்வி மற்றும் தொழில் பயிற்சி வளர்த்தெடுக்கப்படாமையே என்பது அனைவரினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.

பாடசாலைகளில் வாழ்க்கைத் தேர்ச்சி கல்வியினூடாக தொழிற்பயிற்சிகளை வழங்குவதன் பொருட்டு பாடவிதானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதும் அது நடைமுறையில் வெற்றியளிக்கவில்லை என்றே கூறவேண்டும். பாடசாலைகளில் வாழ்க்கைத் தேர்ச்சிக்கல்வி சரியான முறையில் வளர்த்தெடுக்கப் படவில்லை என ஏக்கப்படும் கல்விச் சமூகம் ஏனோ தொழில் பயிற்சி வழங்கும் நிறுவனங்களை மறந்து விடுகின்றது.

கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் பாடசாலைகளும்,திறன் விருத்தி வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களும் தம்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றனவே தவிர இரண்டையும் இணைத்து செயற்பட வைப்பதன் மூலம் கூடிய விளைதிறனைப் பெற்றுக்கொள்ள முடியம் எனச் சிந்திப்பவர் யாருமில்லை.

தரம் 1ல் அனுமதி பெறும் மாணவர்களில் ஏறத்தாழ 4% இனரே பல்கலைக் கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுகின்றனர்.எஞ்சிய 96% மாணவர்களைப் பற்றி கல்வி அமைச்சு அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.

தொழினுட்பக் கல்லூரிகளைப் பொறுத்த வரையில் தரம் 3 ஐப் பூர்த்தி செய்யும் மாணவர் தொடக்கம் க.பொ.த உயர்தரம் சித்தியடைந்தவர்கள்வரை அவரவர் தகைமைக்கேற்ற கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வழிவகைகள் காணப்படுதல் சிறப்பம்சமாகும்.

வெளிநாடுகளில் நடைமுறைப்படுத்தப் படுவது போலவே நமது நாட்டிலும் கைத்தொழில் துறை அபிவிருத்திக்கும் பொருளாதாரத்துறை அபிவிருத்திக்கும் பொருந்துமாறு பாடசாலையை விட்டு விலகிச் செல்வோரை வாழ்க்கைத்தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்விப் பயிற்சியில் ஈடுபடுத்துவதற்கான செயற்திட்டங்களில் கல்வி அமைச்சு முக்கிய கவனம் செலுத்துவதுடன் இந்நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட முன் வர வேண்டும்.

தொழிநுட்பக் கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளை இணைத்துச் செயற்பட வைக்கும் நோக்குடன் திறன் விருத்தி வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சினால் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் “திறன்விருத்தி உதவியாளர்” (Skills Development Assistant) ஒருவர் வீதம் இத்துறையில் ஏற்கனவே முன்னனுபம் உள்ள பட்டதாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் இவர்கள் தமது பணிகளை திறம்பட முன்னெடுத்துச் செல்லவில்லை என்றே கூறவேண்டும்.
மேலும் தொழினுட்பக் கல்விப்பயிற்சி திணைக்களத்தினால் தொழினுட்பக் கல்லூரிகளில் “தொழில் வழிகாட்டல் ஆலோசகர்கள்” (Carrier Guidance and counseling officers) எனும் பதவி நிலையில் பட்டதாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதன் மூலம் தொழினுட்பக் கல்லூரிகளின் ஊடான விளைதிறனை அதிகரிக்கச் செய்தலே இவர்களின் தலையாய பொறுப்பாகும்.ஆனால் இவர்கள் கூட மாணவர்களை உற்பத்தி செய்யும் பிரதான நிறுவனம் பாடசாலை என்பதை உணர்ந்து செயற்படுவதாகத் தெரியவில்லை.

அத்தோடு அண்மைக் காலங்களில் கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு “ஆலோசகர்” (Councilor) என்னும் பதவி நிலையில் பட்டதாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.மாணவர்களின் பிரச்சினைகளை இனம் கண்டு தகுந்க ஆலோசனைகளை வழங்குவதுடன் உளநெருக்கீட்டிற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை சேவையை வழங்கி வழிநடத்துதலும் இவர்களின் பிரதான பணியாகும்.இவர்கள் தமது மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்குவதற்கும் முன்வருதல் வேண்டும்.

பாடசாலையை விட்டு இடைவிலகும் மாணவர்களையும் க.பொ.த சா/த மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் போதுமானளவு பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளாத மாணவர்களையும் தொழில்சார் கற்கை நெறிகளுக்கு அறிமுகம் செய்வதன் மூலம் மாணவர்களை நெறிப்படுத்த முடியும் என்பது திண்ணம்.

திறன்விருத்தி உதவியாளர்கள், தொழில் வழிகாட்டல் ஆலோசகர்கள், மற்றும் ஆலோசகர்கள் ஆகிய மூவரும் இணைந்து செயற்படுதன் மூலம் தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகளில் அதிகளவு மாணவர்களை ஈடுபடுத்தமுடியும் என்பது ஒருபுறம் இருக்க ஆசிரியர்களும் இப்பணியில் தம்மை இணைத்துக்கொள்ள முன்வரவேண்டும்.

மாணவர்களுக்கு கற்பித்தல்,பரீட்சைக்கு தயார்படுத்தல்,அவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் போது மனமகிழ்சியடைதல் என்பவற்றுடன் ஒரு ஆசிரியரின் பணி நிறைவடைந்துவிடுவதில்லை. அதனையும் தாண்டி ஆசிரியர்களின் பணி நீளுதல் வேண்டும் என்பதே ஒட்டுமொத்தக் கல்விச் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்பாகும்.ஆசிரியர்களும் இதனை உணர்ந்து செயற்பட முன்வரவேண்டும்.

ஒரு பிள்ளையானது தன் பெற்றோர்களுடன் செலவிடும் நேரத்தை விட ஆசிரியர்களுடன் செலவிடும் நேரமே அதிகமாகும்.மாணவர்களுடன் அதிகளவு தொடர்புகளை வைத்திருப்பவர்களும் ஆசிரியர்களே.எனவே ஆசிரியர்கள் மாணவர்களை சிறந்த பெறுபேறுகளை நோக்கி தயார்படுத்துவது மட்டுமின்றி போதியளவு பெறுபேற்றைப் பெற்றுக் கொள்ளாத மாணவர்களையும் வழிப்படுத்தி நெறிப்படுத்தலும் தமது கடமையே என்பதை உணர்ந்து செயற்படல் வேண்டும்.

இலங்கை முழுவதிலும் அமைந்துள்ள தொழினுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் வருடாந்தம் 70,000 மாணவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்.இம் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் 50,000 இனால் அதிகரிக்கக் கூடிய மனிதவள மற்றும் ஏனைய வளங்கள் இந்நிறுவனங்களில் காணப்படுகின்றது.இந் நிறுவனங்களின் தற்போதைய தேவை மாணவர்களின் தொகையை அதிகரித்தலே.

எனவே ஆசிரியர் சமூகம் தமது மாணவர்களை இந் நிறுவனங்களுடன் இணைத்து,அம்மாணவர்களை தொழிற் பயிற்சிகளை கற்கச் செய்வதன் மூலம் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருப்பது மட்டுமன்றி, இம் முயற்சியானது மாணவர் நலனையும் தாண்டி எமது நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் உறுதுணையாக இருக்கும் என்பதை புரிந்து செயற்படல் வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தர்களும் இப்பணியை செவ்வனே நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்ப்பதுடன்,இப்பொறுப்பை ஆசிரியர்களும் எடுத்துக் கொள்வதன் மூலம் இன்னும் சிறந்த பெறுபேறுகளை பெறமுடியும் என்பது எம் எல்லோரினதும் ஒட்டு மொத்த எதிர் பார்ப்பாகும்.


பின்குறிப்பு : இந்த கட்டுரை அகில இலங்கை ரீதியில் தமிழ் ஆசிரியர்களால் வெளியிடப்படும் "அகவிழி" சஞ்சிகையில் December 2007 ல் வெளியாகியது.

0 comments: