Tuesday, April 1, 2008

மனிதம் தோற்பதுண்டோ!

காலைக்கடன்களைப் பொறுத்தவரையில், மற்றவர்களை விட ராசனுக்கு ஒரு வேலை அதிகம் இருக்கிறது.

மலசலகூடம் சென்று வந்த பின் முகம் கழுவக் கிணற்றடிக்கும் போக முன்னர் இவ் வேலையை முடித்து விடுவான்.

வவுனியாவில் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ள திருட்டுச் சம்பவங்களின் பின்னர், இரவில் மோட்டார் சைக்கிள்கள் கராஜ் இனைத் தாண்டி உள் விறாந்தையில் இடம் பிடிக்க தொடங்கியிருந்ததன.

உள் விறாந்தைகளில் நித்திரை கொள்ளும் பேரன் பேத்திகள் இப்போது வெளி விறாந்தைக்கு இடம் மாற்றம் பெற்றிருந்தனர்.

துவிச்சக்கர வண்டிகள், இரவில் ஒன்றாகச் சேர்த்து சங்கிலிகளால் கட்டப்பட்டு, ஒற்றுமையாக இருக்கக் கற்றுக்கொண்டுள்ளன.

ராசன் 6 மணிக்கெல்லாம் அலாரம் இல்லாமலே எழும்பி விடுவான். இரவிரவாக கேட்கத் தொடங்கியுள்ள ஷெல் சத்தங்களை எண்ணிக் கொண்டிருந்த பேத்திக்கிழவி காலையில்தான் உறங்கிக் கொண்டிருக்கும்.

கிழவியின் நித்திரையைக் குளப்பி விடாதபடி உள் விறாந்தையிலிருந்து தனது சிவப்பு நிற CD-Dawn மோட்டார் சைக்கிளை கவனமாக உருட்டிக்கொண்டு முற்றத்திற்கு வருவான்.

இவன் முற்றத்திற்கு வருகின்ற நேரம், பக்கத்து வீட்டடியில் English Personal Class கொடுக்கும் மாஸ்டரின் ‘கோண்’ சத்தம் தினமும் கேட்கும்.

பிளாஸ்டிக் வாளியில் குளிர்ந்த தண்ணீரை அள்ளிக் கொண்டு வந்து, தோய்த்துக் காய்கின்ற துணியை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து தனது மோட்டார் சைக்கிளை கவனமாய், ஒவ்வொரு பகுதி பகுதியாக துடைப்பான்.

மற்றவர்களைப் பொறுத்தவரை மோட்டார் சைக்கிள் என்பது ஒரு வாகனம். இவனைப் பொறுத்தவரை அவனது முழுக்குடும்பத்தினதும் ஒட்டுமொத்த உழைப்பு. அதனை பாதுகாக்க வேண்டியது தனது தலையாய கடமையாகக் கருதினான்.

“கம்பஸ் முடிச்ச எத்தினை பெடியள் வேல இல்லாம இருக்கிறாங்கள். உனக்கெதுக்கு கம்பஸ். அதுவும் பீ.ஏ படிப்பு. கொக்காவுக்கும் முப்பது தாண்டப்போகுது. அவளையும் ஒருத்தன்ர கையில பிடிச்சுக் குடுக்க வழியில்லாம கிடக்கு. நீ படிச்சது காணும். ஒரு வேல தேடுறது எனக்கு நல்லதாப்படுது”

அப்பா யோசனை சொல்கிறாரா?அல்லது உத்தரவு போடுகின்றாரா? என்பது புரியாத போதும் தனது குடும்பத்தின் இன்றைய நிலையை உணர்ந்து, அவன் அந்த வேலையில் சேர்ந்திருந்தான்.

அரச சார்பற்ற நிறுவனமொன்றில் ‘கேட்செக்குரிட்டி’ வேலை. ஓவ்வொரு தடவையும் வாகனம் உள்ளே வரும் போதும் வெளியே போகும் போதும் திறந்து திறந்து மூடவேண்டும்.அந்த நிறுவனத்திற்குப் பெரியவனான அந்த வெள்ளைக்காரன் கக்கூசுக்குப் போவதென்றாலும் தனது வதிவிடத்திற்குத்தான் சென்று வருவான்.

வேலைக்குப் போகும் ஒரு நாளுக்கு நானூறு ரூபா என்பது அவனின் குடும்பத்தை பொறுத்தவரை மிகப் பெரிய வருமானம்.

வேலைக்குப் போன தொடக்கத்தில் தன் ‘புஷ்’ சைக்கிளில் தான் போய் வந்தான். அப்பாவால் செல்லமாக ‘றலிக்குதிரை’ என்று அழைக்கப்படும் அந்த சைக்கிள் அப்பா பாரிசவாதத்தால் படுத்த படுக்கையாகிவிட்ட பிறகு இவனின் கைக்கு மாறியிருந்தது. அவனது A\L படிப்புக்கும், பின்பு வேலைக்குச் செல்வதற்கும் அது தான் ஆஸ்தான வாகனமாக இருந்தது.

காலையில் எழும்பி பத்து கிலோமீற்றர் தூரம் சைக்கிளில் மிதிக்க முள்ளந்தண்டு கொதிக்கத் தொடங்கிவிடும். பிறகு எட்டு மணி தொடக்கம் ஐந்து மணி வரைக்கும் கேற்றில் நிற்க கால்களும் வலிப்பெடுக்கத் தொடங்கும். வீட்டுக்கு வந்தால் உடனே நீட்டி நிமிர்ந்து படுக்க வேண்டும்.

“அவனுக்கென்ன வயது போட்டுதே! இளந்தாரிப்பிள்ளை.எப்பிடிச் சுறுண்டு போனான்” என்ற அம்மாவின் புலம்பல் ஆறுதலை விட அரியண்டத்தையே அதிகம் தந்தது.

அப்பா தான் இந்த மோட்டார் சைக்கிள் வாங்கும் யோசனையை சொன்னார். இருபதாயிரத்து சொச்சம் புகையிலை செய்யும் போது வங்கியில் போட்ட காசையும் கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.

- தங்கச்சியின் சாமத்தியச் செலவிற்கென்று அம்மா வைத்திருந்த முக்கால் பவுண் சங்கிலி
- அக்கா சட்டை தைத்துக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்த காசு
- பேத்திக் கிழவியின் ஒரு சோடி தூக்கணத்தோடு
- தன் நண்பனிடம் கடன்பட்டது என்று பொய் சொல்லிய அவனது வங்கிக் கணக்கில் இருந்த பணம்

எல்லாமுமாக சேர்ந்து CD-Dawn ஆக மாறியிருந்தன.

*******************

இன்று திங்கட்கிழமை. பொதுவாக திங்கட்கிழமைகளில் பிரதம எழுதுவினைஞருக்கு ‘சூறணவன்’ ஏறிவிடுவது வழக்கம். எனவே அலுவலகத்திற்கு விரைவாகச் சென்றுவிட வேண்டுமென்று நேற்றே எண்ணியிருந்தான்.
அவன் வேலைக்கு வெளிக்கிட்ட போது
“இந்தா தம்பி…. இந்த சீட்டுக்காசை கனகம் அக்காற்ற குடுத்திட்டுப்போ…. பின்னேரமானா கழிவில்லாமல் முழுக்காசும் குடுக்கோணும்”

என்று தாய் சொன்னதை மறுக்கமுடியாததால் இன்று வழமையை விட பத்து நிமிடங்கள் தாமதமாகி விட்டது.

காலை வேளையில் ஸ்ரேஷன் றோட்டால் பயணம் செய்வது சரியான கஷ்டம். பள்ளிக்கூடப் பிள்ளைகளால் நிரம்பி வழியும். மன்னார் றோட்டால் குருமன்காட்டுச் சந்தியின் ஊடாகப்போனால் அலுவலகத்தை இலகுவாக அடைந்து விடலாம்.

குருமன்காடு என்பது 1990களில் உண்மையிலேயே வெறும் காடுதானாம். இப்போது அது வவுனியாவின் முக்கிய நகரமாக வளர்ந்திருந்தது. ‘குட்டிஜெனிவா’ என்று சொல்லுமளவுக்கு எல்லா அரசசார்பற்ற நிறுவனங்களும் இப்பகுதியிலேயே அமைந்திருக்கின்றது.

காளிகோயில் சந்தியைக் கடக்கும் போதுதான் அதனை அவதானித்தான்.

கொழுகொழுவென்று வளர்ந்திருந்த சிறிய நாய்க்குட்டியொன்று நடுரோட்டில் அங்குமிங்கும் பார்த்து மிரண்டுகொண்டு நின்றது. தன்தாயை தவறவிட்டு எப்படியோ ரோட்டிற்கு வந்துவிட்டது.

ராசன் பொதுவாகவே பிராணிகளில் இரக்ககுணம் உள்ளவன். அதிலும் நாய்க்குட்டியென்றால் அதன் மீது தனி அன்பு அவனுக்கு.

மோட்டார் சைக்கிளின்; வேகத்தைக் குறைத்து ஓரமாக நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தான். மரங்கள் மட்டுமே பச்சையாக இருந்தன.

‘அப்பாடா நல்ல காலம்’ என்று சைக்கிளை நிறுத்திவிட்டு நாய்க்குட்டியை நோக்கி ஓடிச்சென்று கைகளில் தூக்கிக்கொண்டான்.

“இந்த வாகன நெரிசலில் ஏன் றோட்டுக்கு வந்தாய். ஏதும் வாகனம் இடிச்சு சாகவெல்லோ போறாய்”

என்று நாய்க்குட்டிக்கு சொல்லியவாறே கோயில் வாசல் வரை சென்று அதனை பத்திரமாக இறக்கிவிட்டான். அந்த சிறிய நாய்க்குட்டி வாலை ஆட்டி தன் நன்றியை தெரிவித்தது.

கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி தன்மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி வந்த போது அங்கே நான்கைந்து இராணுவத்தினர் அதனை சுற்றி வளைத்து நின்றனர்.

“ஏய் இந்த இடத்தில் வாகனம் நிறுத்தக் கூடாது என்று தெரியாதா?”
அவன் பதில் சொல்ல முன்னம் ஒருத்தனின் துவக்குப்பிடி ராசனின் பிடரியைப் பதம் பார்த்தது.

கடைவாசல்களிலும், வீதியோரங்களிலும் வாகனம் நிறுத்தக்கூடாது என்று புதிதாக பிறப்பிக்கப்பட்ட சட்டம் பின்னர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த போதும் இராணுவத்தினர் அவ்வப்போது அதனை கடைப்பிடிக்கத்தான் செய்கின்றனர்.அவர்களை யாரும் கேட்க முடியாது.அவர்கள் நினைத்தால் ராசனை அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்யவும் முடியும்.அந்த மோட்டார் சைக்கிளை கொண்டு சென்று தபாற்கந்தோருக்கு முன்னால் உள்ள வெளியில் கருவாடு காயப் போடவும் முடியும்.

தன் பிடரியைப் பொத்தியபடி நிலத்தில குந்தியிருக்கும் ராசன் மனிதம் தோற்பதை கண்கூடாக கண்டான்.

அவன்மட்டுமல்ல …. நாமும்தான் தினம் தினம் கண்டுகொண்டிருக்கின்றோம்.

(யாவும் கற்பனை)




பின்குறிப்பு : 25.11.2007 அன்று தினக்குரல் பத்திரிகையில் இந்த கதை வெளியாகியது.

0 comments: