Tuesday, August 25, 2009

அவர்கள் அப்படித்தான் !



அந்தச் செய்தி கிடைத்ததிலிருந்து அலுவலகம் முழுவதும் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

“சேர் எங்கட ஒபிசிலிருந்து எத்தின பேரச் செலக்ட் பண்ணியிருக்கிறாங்கள்?”
“பொறுங்கோ பாப்பம். கடிதம் ஏ.ஓற்றத்தான் கிடக்கு”

நான் மெதுவாக ஏ.ஓவின் அறையை எட்டிப் பார்த்தேன். மேசையின் மேல் கடிதம் படபடத்துக் கொண்டிருந்தது.

“என்ன செல்வம்? ஆராம் செலக்ட் பண்ணுப் பட்டது?”
“தெரியேல சேர்”

அவனிடமிருந்து ஒரு கதையை எடுப்பதை விட கல்லிலிருந்து நார் உரித்து விடலாம். உயர் அதிகாரிக்கு எக்ஷ்ரென்ஷன் கிடைத்ததிலிருந்து, சீ.சீயின் மகள் மூன்று மாதமாய் ‘சுகமில்லாமல்’ இருப்பது வரை அனைத்தையும் தெரிந்து கொண்டு எதுவுமே தெரியாத மாதிரி நடிப்பதில் அவனை மிஞ்ச வேறு யாராலும் முடியாது.

“இவனுக்குத் தான் பீயோன் எண்ட நினப்புக் கொஞ்சமும் இல்ல”
“சத்தம் போடாதயுங்கோ. பிறகு ஏ.ஓற்றப் போட்டுக் குடுத்திடுவான்”
“சந்திரிக்கா அம்மையார் 40000 பேருக்கு வேல குடுத்தாலும் குடுத்தார். அண்டயோட graduates இன்ர மதிப்பெல்லாம் போட்டுது”

பட்டதாரிகளுக்கான மதிப்பும் மரியாதையும் அலுவலகங்களில் குறைந்ததென்னவோ உண்மைதான். பல உயர் மட்ட அதிகாரிகளுக்கு இவர்களின் பதவிப் பெயர் கூடச் சரியாகத் தெரியாது.

- Graduate Trainee
- Graduate Assistance
- Assistance Graduates

இப்படி இல்லாத பெயர்களால் அவர்களைக் குறிப்பிட்ட போதும் தட்டித் தவறிக்கூட சரியான பதவிப் பெயரை அவர்கள் வாய் உச்சரிக்காததற்குக் காரணமும் இல்லாமல் இல்லை.

ஐம்பத்தேழு வயதைக் கடந்தும் கூட பிடித்த கதிரையை ‘மரப் பொந்தைப் பற்றிப் பிடித்த உடும்பைப் போல’ பிடித்துக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட மறதிக் குணத்தைத் தவிர வேறென்ன காரணத்தைச் சொல்ல முடியும்?

காலை நேரப் பிரசங்கம் முடிந்து கன்ரீனில் இருந்து ஏ.ஓ புறப்பட்டுவிட்டார்.
மணமேடையிலே மணமகளுக்காகக் காத்திருக்கும் மாப்பிள்ளைபோல, ஏ.ஓவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்.

லைப்ஃரரிக்குக் கிட்ட வந்த ஏ.ஓ ஐ திடீரென்று காணவில்லை. மர்மமாய் மறைந்து விட்டார். இந்நேரம் மனிஷன் அன்றைய தினசரிப் பத்திரிகைகளில் மூழ்கியிருப்பார். தலைப்புச் செய்தியில் தொடங்கி, மரண அறிவித்தல்களைத் தாண்டி, இப்பத்திரிகை எங்கே? எப்போது? யாரால்? அச்சிட்டு வெளியிடப்பட்டது என்பது வரை பார்த்து முடிக்க எப்படியும் பத்துமணி தாண்டும்.

அந்த அலுவலகத்தில் கடமை புரியும் அனேக உத்தியோகத்தர்கள் இலங்கை தொழிநுட்பக் கல்விச் சேவையைச் சேர்ந்தவர்கள். முகாமைத்துவ உதவியாளர்; சேவையை சேர்ந்த இரண்டு மூன்று பேரைத் தவிர, நான்கைந்து பட்டதாரிகள் கடமையாற்றுகின்றோம். எம்மை விட நான்கு காவலாளிகள், ஒரு பீயோன் இவ்வளவு பேரையும் சேர்த்து ஒரு இருபது பேரைத் தாண்டாது.

“இவளவு பேற்றயும் பேர்ஷனல் பயில மெயின்ரனன்ற் பண்ணுறது லேசான வேலயே?” என்று புறுபுறுக்கும் சப்ஜெக்ட் கிளார்க் ஒருபுறம்,

“பதினெட்டாம் தேதிக்குப் பிறகு ஒருத்தரும் எனக்குக கிட்ட வரக்கூடாது பேசிப் போடுவன்” எனும் எக்கவுண்ட்ஸ் கிளார்க் ஒருபுறம்,

“கிடக்கட்டும் பாப்பம்” என்று எப்போதும் ஒரே பதிலைச் சொல்லும் உயரதிகாரி ஒருபுறம்,

இவர்களுக்கிடையில் அகப்பட்டு கடமை புரிவதென்றால் அதற்கொரு தனி ரெயினிங் எடுக்க வேண்டும்.

ஒரே சம்பள நிலையில் எல்லாப் பட்டதாரிகளையும் வைப்பதற்காக பல்வேறு பதவிகள் உருவாக்கப்பட்டபோது எமக்கு “Training Assistant” என்று நாமகரணம் சூட்டப்பட்டது. எம்மையும் குறிப்பிட்ட சேவைக்குள் உள்ளீர்ப்புச் செய்வார்கள் என்பது நம்பிக்கையின் உச்சக் கட்டம்.

“ஆ…ஏ.ஓ சேர் வாறார்”
நான் சட்டென்று எழுந்து, அவர் என்னைக் கண்டு கொள்ளும் படியாக ‘சுவாமியின் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தன் போல’ நின்று கொண்டேன்.

“குட்மோனிங் சேர்”
“குட்மோனிங்”

கதிரையில் அமர்ந்ததும் கோவைகளில் மூழ்கி விடுகிறார். நான் அவரின் கடைக்கண் பார்வைக்காகக் காத்து நின்று, கால் கடுத்ததும், வராத இருமலை வரவழைத்து இருமினேன்.

“ஆங் என்ன சொல்லும்? முதலில கதிரேல இரும். பேந்து வெளீல போய் எங்கள மதிக்கிறாங்கள் இல்ல எண்டு சொல்லுவியள்”

நான் பௌவியமாக, பெண் பார்க்க வந்த இனந்தெரியாத கூட்டத்தின் நடுவே அமர்ந்திருக்கும் பொம்பிளை போல அமர்ந்திருந்தேன்.

“சேர் அந்த ரெயினிங்கிற்கு அப்பிளை பண்ணினனாங்கள். மற்ற டிஸ்ரிக்குகளில லிஸ்ற் வந்திட்டுதாம். அதுதான்…..”

“ஓமோம். ஒரு கடிதம் வந்ததுதான். அத சேரிட்டப் போட்டுட்டன்”
நான் சட்டென்று மேசையைப் பார்த்தேன். கடிதத்தைக் காணவில்லை.

“எதுக்கும் நீர் சேர் வந்தாப் பிறகு கதயும்”

பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு எப்படிப் பொய் சொல்கிறார்.அந்தக் கடிதத்திற்காகத்தான் நான் காவல் நிற்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டு ஒரு நொடிக்குள் அதனை மறைத்து விட்ட அவரின் ‘முன் அனுபவத்தை’ அந்த நேரத்தில் என்னால் வெளிப்படையாகப் பாராட்ட முடியாததற்காக இறைவனை நொந்து கொண்டேன்.

“அப்ப சரி சேர். நான் சேர் வந்தாப்பிறகு கதக்கிறன்”

மூன்று வருடங்கள் முடிவடைவதற்குள் அந்தப் பயிற்சி நெறியை நிறைவு செய்தால் சேவையில் உள்ளீர்ப்புச் செய்வதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களே இப் பயிற்சி நெறியில் இணைத்துக் கொள்ளப் படுவார்கள். இந்த வருடம் ஓரிருவருக்காவது சந்தர்ப்பம் கிடைத்தால் அது நல்லதுதானே!

“சேர் வாறார்….சேர் வாறார்”
வெளிக்கேற்றில் சேரின் மோட்டார் சைக்கிள் வருவதைக் கண்டதும் எனது சக உத்தியோகத்தர் ஓடி வந்தார்.
“மச்சான் சேர் வந்தவுடன போய்க் கதப்பம். ஏ.ஓ தான் உதவாத மனிஷன். சேர் நல்லவர்”
“குட்மோனிங் சேர்”
“குட்மோனிங்”

சேர் தனது சீட்டில் இருக்க முன்னர், ஏ.ஓ எங்களை முந்திக் கொண்டு போய் சேருக்கு முன்னால் போடப் பட்ட கதிரையில் அமர்கின்றார். அவரின் கைகளில் சில கோவைகள் இருக்கின்றன.

இருவரும் ஏதேதோ விஷயங்களை டிஷ்கஸ் பண்ணுகிறார்கள்.

- சேரின் மகன் லண்டன் போய்ச் சேர்ந்தது.
- ஏ.ஓவின் மகளுக்குப் பிள்ளை பிறந்தது.
- சேரின் வயல் நன்றாக விளைந்தது.
போன்ற முக்கியமான விஷயங்கள் கடும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டன.

ஏ.ஓ எழுந்ததும், சேர் கன்ரீனுக்கு வெளிக்கிட முன்னம், நான் முந்திக் கொண்டேன்.
“எக்ஷ்கியூஸ் மீ சேர்”
அவர் நிமிர்ந்து ‘சொல்லும்’ என்பது போலப் பார்த்தார். நான் விடயத்தை ஒப்புவித்தேன்.

“அது தம்பி உவங்கள் உப்பிடித்தான். தங்கட ஆக்களின்ர வேலயெண்டா விழுந்தடிச்சுச் செய்வங்கள். எங்கட அலுவலத் திரும்பியும் பாக்கமாட்டான்கள்”

“இல்ல சேர் திருகோணமல, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில எல்லாம் தமிழாக்களயும் செலக்ட் பண்ணியிருக்குதாம்”

“எங்களுக்கின்னும் கடிதம் வரேல. வந்தாப் பிறகு பாப்பம்”
“இல்ல சேர் கடிதம் வந்ததாம்”

ஏ.ஓ கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுச் செல்கிறார். நான் ஆவலாக என் காதுகளைத் திறந்து வைத்திருக்கின்றேன்.

“சுந்தரமூர்த்திதான் செலக்ட் பண்ணுப் பட்டிருக்கிறார்”
“இது அநியாயம் சேர். அவர் ஏற்கனவே சேவிஷில இருக்கிறார்”
“விசர்க்கத கதயாதயும். நாங்களே தெரிவு செய்யுறது? டிப்பாட்மென்ற்தான் தெரிவு செய்யுறது”
“அது சரி சேர். மற்ற இடங்களில graduates ஐயும் தெரிவு செய்திருக்கினமாம்”
“அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்யேலாது. நீர் அடுத்த வருஷம் அப்பிளை பண்ணிப் பாரும்”

இந்தச் செய்தி ஒரு சிலரை திகைக்கச் செய்ய, சிலரை சந்தோஷப் படுத்தியது.

“இப்ப ரெயினிங்கிற்கு அவசரமில்ல. நான் நாப்பத்தஞ்சு வயதுக்குப் பிறகுதான் போனனான்”
“செல்வரட்ணம் போன வருஷம் கிடைச்சும் போகேலயெல்லே?”
“ஏனாம்?”
“மனிஷிக்கு முதுகுக் குத்தெண்டு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டு திரிஞ்சவர்”
“சுந்தரமுர்த்தி சேர் போறதும் சந்தேகம்தான்”
“ஓமோம் ….மனுஷனுக்கு யாழ்பாணம் போகாமல் இருக்கேலாது”
“பட்டதாரிப் பிள்ளயள் ஒருத்தருக்கும் கிடைக்கேலை பாவங்கள்”

இந்த சம்பாஷனைகளின் நடுவே பட்டதாரிப் பிள்ளைகளையும் இழுத்தது நக்கலுக்கா, நையாண்டிக்கா, அல்லது உண்மையான அக்கறையா தெரியவில்லை.

“தம்பி நீர் யோசியாதயும். அடுத்த வருஷமும் போகலாம்”

“உவங்கள் உப்பிடித்தான். தமிழற்ற அப்ளிகேஷன் எண்டதும் கிளிச்சுப் போட்டிருப்பாங்கள்”

“அதில்ல. இந்த ரெயினிங் முடிச்சா சேர்விஷில அப்சோ பண்ணுற சான்ஸ் கூடவாம்”

“உதெல்லாம் விஷர்க்கத. எல்லா இடத்திலயும் இன்புழுவென்ஷ்தான் வேல செய்யுது”

நான் எப்படியும் இந்த ரெயினிங்கிற்கு செல்வதென்று முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். நல்லவேளையாக என் சிங்கள நண்பியொருத்தி அமைச்சில் வேலை செய்தாள்.

“ஹலோ ஹவுத கத்தாக்கறண்ணே?”
“மம செல்வராகவன். வவுனியா இந்தலா கத்தாக் கறண்ணே. விஜிதா இன்னவாத?”
“ஹோல்ட் ஒன்”
சில நிமிட மௌனத்தின் பின்,
“ஹலோ விஜிதா கியர்”
நான் அரைகுறைச் சிங்களத்தில்சொல்லி முடித்தேன்.
“செல்வா மங் செக்கறண்ணங். ஒயா விநாடி பகக் பஸ்ஸறட்ட ஹோல் கறணவாத?”
“போமஸ் துதி”
“எவ்வளவு?”
“இருநூறு ரூபா”

தொலைபேசிக் கட்டணத்தைக் கொடுத்து விட்டு ஜந்து நிமிடம்; கழித்து மீண்டும் போன் எடுத்தேன். எமது அப்ளிகேஷன் அமைச்சுக்கு போய்ச் சேரவில்லை என்ற செய்திதான் கிடைத்தது.

‘உவங்கள் உப்பிடித்தான். கிழிச்சுப் போட்டிருப்பாங்கள்’

ஏதோவோர் உள்ளுணவர்வால் உந்தப்பட்டு திணைக்களத்திற்கு கோல் எடுத்தேன்.

“ஹலோ மம செல்வராகவன். வவுனியா இந்தலா கத்தாக்கறண்ணே…..” விடயத்தை ஒப்புவித்ததும்,
“பொட்டக்கிண்ட. மங் செக்கறண்ணங்”

ஐந்து நிமிடம் கழித்து அந்த மேலதிகாரி எனக்குப் போன்பண்ணி எமது அப்ளிகேஷன் திணைக்களத்திற்கும் கிடைக்கவில்லையென்ற செய்தியைச் சொன்னார். நான் அவசரமாக சேரிடம் ஓடினேன்.

“சேர் எங்கட அப்ளிகேசன் டிபார்ட்மெண்ட்டிற்கு கிடக்கேலயாம்”

“ஓம் தம்பி. இஞ்ச வேல பிஸீல பொவேட் பண்ண மறந்திட்டன்”

நான் மெல்ல மெல்ல அதிர்ந்து போய் சிலையாக நின்றேன்.

(யாவும் கற்பனையே)