Sunday, March 2, 2008

சலனம்

எட்டரைக்கு இன்னும் பதினைந்து நிமிடங்களே இருந்த அவசரத்தில் மோட்டார் சைக்கிளின் வேகத்தை அதிகரித்தேன்.

திங்கட்கிழமைகளில் சீசிக்கு ‘சூறணவன்’ ஏறிவிடும்.

“சனி, ஞாயிறு வீட்ட நிண்டு திண்ட கொழுப்பு” என்ற பீயோன் கந்தசாமியின் திட்டு மறுக்கமுடியாத உண்மை.

மாதத் தொடக்கத்தில் ஒழுங்காய் வந்து ஓவர்ரைம் எல்லாம் கவர் பண்ணிய பிறகு கடமை, கண்ணியம், கட்டுப்பாடெல்லாம் காற்றில் பறந்து விடும். கயிறு எறிந்து தான் மனிசனைப் பிடிக்க வேண்டும்.

ஓவர்ரைம்கவர் பண்ண வருகின்ற நாட்களில் மட்டும் அற்ரெண்டன்ற் ரெயிஸ்ரரில் ஒரே இரத்தக் களரிதான். மீதி நாட்களில் எல்லாம் அற்ரெண்டன்ற் ரெயிஸ்ரர் ‘சிவனே’ என்றிருக்கும். பத்தரைக்கு அலுவலகம் வந்தாலும் கூட 8.31 என்று பயப்படாமல் சைன் பண்ணலாம்.

வெள்ளிக் கிழமை வீட்டுக்கு போகும்போது சம்பளம் கைக்கு வந்துவிட்டது. மாதச் செலவிற்கான பத்தாயிரம் ரூபாவை மனைவியிடம் கொடுத்த பிறகு பொக்கெற் மணியும் பெற்றோல் செலவுமான எனது மீதியில் (அரியஸ் வந்த ஆறாயிரத்தை அமுக்கி விட்டேன்) மனைவிக்கு ஒரு சாறியும் றோயல் காடினில் ஸ்பெசல் ஐஸ்கிறீமும் வாங்கிக் கொடுத்ததன் விளைவாக மூன்று நாட்களாக எனக்கு அடித்தது யோகம். ஹட்ரிக் சாதனை. இரவும் நித்திரை கொள்ள பன்னிரண்டு மணி தாண்டி விட்டது. ஏழரை மணிக்கு திடுக்கிட்டு முழித்தபோது, பக்கத்தில் படுத்து மாடு நித்திரையாய்க் கிடந்தாள். மற்றைய நாட்களில் இந்நேரம் முட்டைப் பொரியலின் வாசம் மெலிதாய் காற்றில் மிதந்து வரும்.

தட்டி எழுப்புவதற்காக கையைக் கொண்டு போனேன்.

‘பாவம் நித்திரை கொள்ளட்டும்’ என்ற எண்ணம் ஏற்பட தலையைத் தடவி “இண்டைக்கு பாண வேண்டுவம்” என்றேன்.

அவள் சந்தோஷத்துடன் திரும்பிப்படுத்தாள்.

கடைக்கு போய் வந்து வெளிக்கிட பதினைந்து நிமிஷம் லேற்றாகிவிட்டது. அரைறாத்தல் பாணும் கப்பல் வாழைப் பழமும் இத்தனை கனம் கனக்கும், என்று எனக்கு இன்றைக்குத்தான் தெரியும். மணிக்கூட்டு கோபுர சந்தியைக் கடக்கும் கணத்தில் புதிய ஸ்கூட்டி பெப்பில் வேகமாக என்னைக் கடந்த அந்த அழகியை (ஆசிரியைகள் மன்னிக்கவும்!) எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.

தோளில் தொங்கிய கான்ட்பாக்கும், பின்சீட்டில் கட்டப்பட்டிருந்த பேப்பர் கட்டும் “ரீச்சர் வாறா வழி விடுங்கோ” என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன.

‘எங்கயோ கண்ட மாதிரி இருக்குதே’ என்று யோசிக்கத் தொடங்க முன்; ஞாபகத்திற்கு வந்து விட்டாள்.

ஒன்பதாம் வகுப்பில் யாழ் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் மலர்விழி என்னுடன் படித்த நாட்களில் அவளின் தந்தை சுப்பையா எங்களுடன் படித்த எல்லாப் பெடியளுக்கும் மாமாதான். 1986ஆம் ஆண்டு திருகோணமலையிலிருந்து இடம் பெயர்ந்து வந்து அந்தப் பாடசாலையில் படித்தாள்.

பக்கத்து வளவுக்குள் கஸ்டப்பட்டு எறிந்து விழுத்திய மாங்காயை அவளிடம் கொடுத்து விடுவதில் எங்களிடையே நடக்கும் போட்டி இருக்கிறதே! அதை சொற்களில் வர்ணித்து விட முடியாது.அனேகமான நாட்களில் நான் கொண்டு வரும் மாங்காய்க்குத்தான் அவளிடம் கடி வாங்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

‘அட இவளா!’ என்ற ஆச்சரியத்துடன் சைட் கண்ணாடியில் முகத்தைப் பார்த்து என் அழகை உறுதிப்படுத்திக் கொண்டேன்;.

ஒன்பதாம் வகுப்பில் அவள் சொல்லாமல் கொள்ளாமல், வேறு பள்ளிக்கூடம் மாறிச் சென்ற போது

“லெவல் பிடிச்சவள்………. போய்த் துலஞ்சாள்” என்று மற்றப் பெட்டையள் சந்தோஷப்பட….. எனக்குள் இனம் புரியாத ஏதோ ஓர் உணர்வு. யாருக்கும் தெரியாமல் கலங்கிய கண்களை துடைத்துத் தனிமையில் அழுதிருக்கிறேன்.

அவளின் முகவரி எழுதிய டையரியும், கொட்டை கொட்டையான எழுத்தில் அவள் எழுதித் தந்த தீபாவளி காட்டும் இன்றும் கூட என் மனைவிக்குத் தெரியாமல் ஒழித்து வைத்திருக்கிறேன்.

A\L படித்தபோது, பல்கலைக்கழகத்தில், தற்போது வேலை செய்யும் அலுவலகத்தில் எத்தனையோ பெண்களைப் பார்த்து….பேசி…. பழகி….. ஆனாலும் ஏனோ அவளை மட்டும் என்னால் மறக்க முடிவதில்லை.

என் மனைவியைப் பெண் பார்க்கப் போனபோது கூட தமிழ் சினிமாப்படம் போல, ‘தேத்தண்ணி கொண்டு வந்து தருபவள் அவளாக இருக்கக்கூடாதா?’ என்ற எண்ணத்துடன் நிமிந்து பார்த்தேன்.

என் மனைவி (அப்போது செல்வி. அமுதினி வேதநாயகம்) குழந்தை முகமாய்ச் சிரித்தாள்;. அவளுக்காய் இவளை புறக்கணித்து காத்திருக்குமளவு பொறுமையில்லாமல் செல்வி வேதநாயகத்திற்கு திருமதி என்ற அந்தஸ்தை வழங்கினேன்.ஒன்றரை வருட திருமண வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தக் குறையையும் அவள் எனக்கு வைக்கவில்லை.

வவுனியா மகாவித்தியாலய வாசல் ‘U’ வளைவில் மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டு திருப்பி ஸ்கூட்டி பெப்பை பின் தொடர்ந்தேன்.

‘பின் சில்லு காத்துப் போய்விட்டது’ என்று சோட்லீவு போடும் எண்ணத்துடன் அவளை பின்தொடர்ந்து சென்று பாடசாலையை கண்டு பிடித்த பிறகு அலுவலகம் சென்றேன்.
எனக்கு வேலை ஓடவில்லை. ‘எப்போதடா 12.30 ஆகும்’ என்று காத்திருந்து அரைநாள் லீவு போட்டு பாடசாலைக்கு விரைந்தேன். எனது நல்ல காலம் பாடசாலை ஸ்ராப் மீற்றிங் தொடங்கும் ஆயத்தங்களில் மூழ்கி இருந்தது.

பீயோன் போய் சொன்னதும் என்னை நோக்கி வந்தவள் அடையாளம் காண முடியாமல்
உற்று நோக்கி………………..
ஆச்சரியத்தால் புருவங்களை உயர்த்தி…………………
முகம் நிறைய மலர்ச்சியைக் காட்டினாள்.

‘என்னைத் தெரிகிறதா?’ என்று புதிர் போட்டு விளையாடும் என் எண்ணத்தை

“அட……செல்வகுமார்……… என்னால நம்பேலாமல் கிடக்கு” என்ற அவளின் வார்த்தைகள் கலைத்தன.

“வாங்கோ கன்ரீனுக்க போயிருப்பம்”

‘எப்படி என்னை மறந்திருக்கமுடியும்’ என்ற சிந்தனையோட்டத்துடன் அவளைத் தொடர்ந்து சென்றேன்.

“காசி அண்ண…… சூப்பராய் ரண்டு ரீ போடுங்கோ” என்றவள் என்னை நோக்கி திரும்பி சிரித்தாள்;

ஐந்து வருடங்கள் முன்னே சந்தித்திருந்தால்;

‘ஆளே அடையாளம் தெரியவில்லை’

‘என்ன மாதிரி வளர்ந்து விட்டாய்’

என்றெல்லாம் கதைத்திருக்கலாம். காதருகே இளநரை எட்டிப்பார்த்து சுகம் விசாரிக்கும் வயதில் இது சரி வராது.

“அப்ப ………. எப்பிடி சுகம்?”

“நீங்கள் தான் சொல்ல வேண்டும்”

பத்து நிமிடங்களில் பத்து வருடஷங்களை சுருக்கமாய் பகிர்ந்து கொண்டோம். எனக்கு திருமணமானதை மட்டும் மறைத்து விட்டேன்.

கதைத்துக் கொண்டிருக்கும் போது தனக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதையும் பதிவுத் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருப்பதையும் தெரிவித்தாள்.

“கட்டாயம் நீங்கள் ………. கலியாண வீட்டுக்கு வரோணும்” என்றாள்.

‘கலியாணத்திற்கு இப்ப என்ன அவசரம்? கொஞ்சக்காலம் பொறுத்து இருந்திருக்கலாம்’ என்று மனதிற்குள் கொதித்தேன்.
நிச்சயம் அவளைக் கட்டாயப்படுத்தித்தான் இந்தக் கலியாணத்திற்கு சம்மதிக்க வைத்திருப்பார்கள். எவ்வளவு காலம் தான் அவளும் என்னைத் தேடி அலைவது? எது எப்படி நடந்தாலும் பரவாயில்லை. அவளுக்கு மறுவாழ்வு கொடுப்பதுதான் எனது முதல் கடமை என்று முடிவெடுத்துக் கொண்டேன்.

அவள் அடிக்கடி தனது கைக்கடிகாரத்தை பார்த்தபடிதான் என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தாள். பின்பு பொறுமையிழந்தவளாய்…….

“ஸ்கூல் பெல் அடிக்கப் போகுது. சோட்லீவு போட்டுட்டு வெளிக்கிடேக்கத்தான் நீங்கள் வந்தனியள்”
நான் அவளை உற்று நோக்கினேன்.

“உங்களக் கண்டதில சந்தோஷம். இண்டக்கு சாறி எடுக்கப் போறதுக்கு ‘அவற்ற’ வீட்ட வாறனெண்டு சொன்னனான். பார்த்துக் கொண்டிருப்பினம்.”

சண்டாளி சிரித்துக் கொண்டு சொல்ல என் எண்ணமெல்லாம் வெடித்துச் சிதறியது.

“சரி நானும் போட்டு வாறன். பிறகு சந்திப்பம்”

மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்தினேன். ஏனோ என் மனைவி மீது கோபம் கோபமாக வந்தது. இன்று வெள்ளணவே வீட்டுக்குச் சென்றது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும். ஆச்சரியத்துடன் என்னை வரவேற்ற அவள் மீது தேவையில்லாமல் எரிந்து விழுந்தேன். பாத்றூமிற்குள் சென்று கதவை அறைந்து சாத்தினேன்.

குளிர்ந்த நீர் உடம்பை நனைக்க நனைக்க கோபம் அடங்கியது. சாப்பாட்டு மேசையில் அமர்ந்தேன்.
-சம்பா அரிசிச் சோறு….
-கோழி இறைச்சிக் கறி….
-மாட்டீரல் பொரியல்……
-கத்தரிக்காய் வெள்ளைக்கறி….

எனக்குப் பிடித்த கொம்பினேசன் சமைக்கப்பட்டிருந்தது.
கிளாசில் வைக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் சலனமற்று தெளிவாக இருந்தது.

“பெட்றூமுக்கை சரியான வெக்க. பக்கத்து அறேக்க, பாஃனுக்கு கீழ பாயைப் போடு” என்று கண்சிமிட்டிய என் உத்தரவை நிறைவேற்றச் செல்கிறாள் என் மனைவி.

“அதிகம் சலனப் படுபவர்கள் ஆண்களா? பெண்களா?” என்ற சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத் தலைப்பு ஞாபகம் வர, என் உதடுகளின் மெல்லிய புன்னகை மலர்கின்றது.

(யாவும் கற்பனை????)

பின்குறிப்பு : இந்த கதை 09.12.2007 அன்று தினகரன் பத்திரிகையில் வெளியாகியது.

0 comments: