Thursday, July 16, 2009

நான் கண்ட கனவு !

ஏகாந்திர வெளியொன்றினூடாக சொர்க்கத்தை நோக்கிய என் பயணம் தொடர்கின்றது. நான் எனது சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் விரைந்து கொண்டிருக்கிறேன். ஆங்காங்கே வானுயர்ந்து நிற்கின்ற மரங்களின் கனத்த மௌனம் ஒரு பயப்பிராந்தியை உண்டாக்குகிறது. எதிர்ப்படுகிறவர் முகமெல்லாம் “ஏனடா இந்தப் பக்கம் போகிறாய்?” என்று கேட்காமல் கேட்பது போன்ற ஆச்சரிய ரேகை.

‘பிக்கப்’ ஒன்று மின்னல் வேகத்தில் என்னைக் கடந்து செல்கிறது. NP HK 4004. ஓகோ இதில் செல்பவன் என் பிரதேசத்தை சேர்ந்தவன்! அவனைப் பின் தொடரும் நோக்கத்துடன் மோட்டார் சைக்கிளின் வேகத்தை அதிகரிக்கிறேன். அந்த வாகனத்தின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. அப்படியொரு வேகம்!

‘வேற்றுக்கிரக மனிதனாக இருப்பானோ?’ அல்லது……
‘பேய் பிசாசாக இருக்குமோ?’
ஏழு மணிக்குப் பிறகு வெளிக்கிட்டிருக்கலாம். இந்த மாதிரி எண்ணங்கள் தோன்றாது இருந்திருக்கும்.

இராட்சத சீப்புக்களால் காட்டு மரங்களை சீவி, உச்சி பிரித்து, வகிடெடுத்தது போன்ற, அகலம் குறைந்த தார் வீதி கண்ணுக்கெட்டிய தூரம்வரை நீண்டு பரந்து செல்கிறது. காட்டுக்குள்ளிருந்து ஒலிக்கும் பறவையினங்களின் ‘கீச் கீச்’ ஒலி மகிழ்வையன்றி கிலியையே தருகிறது.

எருமை மாட்டுக் கூட்டமொன்று ஆடி அசைந்து நடந்து வீதியைக் கடக்கிறது. நான் சட்டென ‘பிறேக்’கைப் பிடிக்க, ஓர் எருமை மாடு நின்று நிதானித்து என்னை முறைத்துப் பார்க்கிறது.

ஒரு காலத்தில் பச்சை வயல் வெளிகளாய் இருந்த இடமெல்லாம் காய்ந்து கருகி வெட்டை வெளியாய் கிடக்கிறது. வாய்க்கால் வழியே தண்ணீர் சலசலவென்று பாய்ந்தோடுகிறது. நீர் வளம் கொழிக்கின்ற பூமி. அப்படியானால் வாழைத் தோட்டங்களாலும், தென்னை மரங்களாலும் நிறைந்திருக்க வேண்டுமே! ஏதோ காரணங்களால் எல்லாம் வெட்ட வெளியாய் விரிந்து கிடக்கிறது.

ஒரு வேளை இஸ்ரேல் உருவாக முன்னர் பாலஸ்தீனமும், எரித்திரியா உருவாக முன்னர் எதியோப்பியாவும், இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் யப்பானும் இப்படித்தான் இருந்திருக்குமோ?

அதோ அங்கே மனிதர்களின் நடமாட்டம். பச்சையுடையணிந்து ஏதோ புரியாத மொழியில் பேசுகிறார்கள். கைகளில் இயந்திரத் துப்பாக்கி. என்னைப் பார்த்ததும் அவர்களில் ஒரு பதட்டமும் பயமும் தொற்றிக் கொள்கிறது. விரல்கள் சுடும் வில்லில் தயாராக இருக்கிறது. நானும் என் காற்சட்டைப் பையைத் தொட்டுப் பார்க்கிறேன். எல்லாம் தயாராக இருக்கிறது. தேசிய அடையாள அட்டை, திணைக்கள அடையாள அட்டை, இன்னும் ஏதேதோ அடையாள அட்டைகள்.

இப்போது ஏதோவொரு குடிமனை அண்மிக்கிறது. பெண்கள் சிலர் பற்றிக் லுங்கிகளை மார்புக்குக் குறுக்கே கட்டியிருக்கிறார்கள். நீரோட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கட்டுகள் தளர்ந்து, மார்பின் அழகுகள் தெரிவதைக் கூடக் கவனிக்காமல் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும் வாலைக் குமரிகளும் பெண்களும், இயந்திரத் துப்பாக்கி வைத்திருந்தவனின் மொழியில் பேசிச் சிரிக்கிறார்கள். இந்த இயற்கை அழகில் மயங்கி, வேகத்தை குறைத்த நான், இயந்திரத் துப்பாக்கிக்காரனின் நினைவு வந்ததும் வேகத்தை அதிகரிக்கிறேன்.

பேரூந்தொன்று புழுதியைக் கிளப்பிக் கொண்டு பின்னால் வருவது கண்ணாடியில் தெரிகிறது. தலைக் கவசத்தை இழுத்து சரி செய்தபடி வேகத்தை இன்னும் அதிகரிக்கிறேன்.

இப்படியொரு வனாந்திரத்தைத் தாண்டி எங்கே சொர்க்கம் இருக்கப் போகிறது?
“இடப் பிரச்சினை இல்லை….”
“சுகாதாரப் பிரச்சினையில்லை…”
“மக்களுக்கு மகிழ்வான வாழ்க்கை காத்திருக்கிறது….”
எங்கேயோ, எப்போதோ கேட்ட ஞாபகம் இருக்கிறது.

திடீரென வீதி இரண்டு பக்கமும் திரும்புகிறது. நான் திகைத்து நிறுத்த ஒரு இயந்திரத் துப்பாக்கிக்காரன் அருகே வருகிறான். நான் தயாராக மறைத்து வைத்திருந்த அடையாள அட்டையை எடுக்கிறேன். அவன் புரிந்து, வலப்பக்கம் செல்லுமாறு சைகை காட்டினான்.

ஒன்றிரண்டு கட்டடங்கள். ஓரிருவரின் நடமாட்டம். பின்னர் மீண்டும் வனாந்தர வெளிகள்……..? ஓ….இங்கிருந்த வனாந்தர வெளிகளைக் காணவில்லையே…..!

உயர்ந்து வளர்ந்து நின்ற பாலை மரங்களும், முதிரை மரங்களும், வீரை மரங்களும் எங்கே? ஒன்றையும் காணவில்லை.

ஏராளமான பச்சையும், வெளுப்பு நிறமும் கலந்த கனரக வாகனங்கள். காவலரணங்கள். பலர் பச்சை அரைக் காற்சட்டையுடன், தோளில் துவாயுடன் பல் துலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கேயெங்கே சொர்க்கம் இருக்கப் போகிறது? போதும் இனி விழித்து விடலாமோ என்ற எண்ணமேற்படுகிறது……. வேண்டாம் இந்தக் கனவின் முடிவைப் பார்த்து விடலாம்…….. மீண்டும் கண்களை மூடிக்கொள்கிறேன்.
அதோ…. அங்கே….. ஆயிரம் ஏக்கர் காடுகளையும் காணவில்லை.
என்ன நடந்தது?

அங்கேயிருந்த...
புள் இனங்கள் எங்கே?
மயில்கள் எங்கே?
மான்கள் எங்கே?
மரை இனங்கள் எங்கே?
யானைகள் எங்கே?
சிறுத்தைகள் கூட இருந்ததாகச் சொன்னார்களே?
பண்டார வன்னியன் காலத்திலிருந்தே அவை இங்கேதானே வாழ்ந்து வந்தன. அவை எங்கே சென்றிருக்கும்?

ஓ….கொடிய நச்சுப் பாம்புகள் கூட இங்கிருந்தனவே? அவை எங்கே சென்றிருக்கும்? வாழ்ந்த இடத்தைவிட்டு அதிக தூரம் செல்லும் வழக்கம் பாம்புகளிடம் இல்லையே? அப்படியானால் அவை இங்கேதான் எங்காவது சுற்றிக் கொண்டிருக்குமா?

மோட்டார் சைக்கிள் விரைகிறது. மாபெரும் யுத்தப் பிரதேசம் கண் முன்னால் விரிகிறது. யப்பான் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘அமெரிக்கன் பேஸ்’ போன்றிருக்கிறது. யப்பான் போன்றுதான் இங்கும் மக்களின் விருப்பம் கேட்கப்பட்டிருக்க மாட்டாது. காவலரண்களும், சிப்பாய்களும் பயத்தை ஏற்படுத்த விழித்து விடலாமா என்ற எண்ணமேற்படுகிறது. மீண்டும் இன்னும் கொஞ்சம் பார்த்து விடலாம் என்ற எண்ணமே வெல்கிறது.


அதோ அங்கே என்ன சனக்கூட்டம்? வரிசையாகக் காத்திருக்கிறார்கள்? ஒவ்வொருவர் கைகளிலும் பைகள். நெஞ்சின் ஏக்கங்கள் முகங்களில்…… எதிர் பார்ப்புகளாய்….. தேங்கியிருக்கிறது. நானும் அவர்களில் ஒருவனாய் இணைந்து கொள்கிறேன்.

அவர்களின் பைகளை நோட்டம் விடுகிறேன். ஆடம்பரப் பொருட்களா அவை? ஊகூம்….பாண், பருப்பு, கருவாடு, முருங்கைக்காய், தேயிலை, பால்மா, மண்ணெண்ணெய். ‘உணவுப் பிரச்சனை இல்லை’ எங்கோ கேட்ட ஞாபகம் இருக்கிறது. நான் மட்டும்தான் வெறும் கையனாக நிற்கிறேன். பரவாயில்லை. தேவைப்பட்டால் விழித்து விடலாம் தானே!

பல மணிநேரக் காத்திருப்பின் பின், இளம் யுவதிகள் சிலர், அன்ன நடையென அடியெடுத்து வைத்து வருகிறார்கள். அவர்கள் என் தாய்மொழியைப் பேசுகிறார்கள். அவர்களின் முகத்தில் புன்னகை ஒளி வீசுகிறது. மக்களை அண்மித்ததும், தமது முகங்களைக் கடுப்பாக்கிக் கொள்கிறார்கள். மற்றப் பக்கம் பார்த்து விறைப்பாக அமருகிறார்கள்.

“பார்வையாளர்களுக்கு பின் பக்கத்தைக் காட்டக் கூடாது”

அந்த நேரத்திலும் ஒரு இளைஞன் ‘பகிடி’ விடுகின்றான். பலரின் முகத்தில் புன்னகை தோன்றி மறைகின்றது.

‘நகைச்சுவையுணர்வும், நண்பர்களும் இருந்திராவிட்டால் எப்போதோ நான் இந்தப் பூமியை விட்டு மறைந்திருப்பேன்’ யாரோ ஒரு அறிஞன் எவ்வளவு பொருத்தமாகச் சொல்லியிருக்கிறான்.

அங்கே யார்? நான் பார்த்த இயந்திரத் துப்பாக்கி மனிதர்கள்…. வெறுங்கைகளோடு… நிராயுத பாணிகளாய்….. காத்திருந்த மக்கள் கூட்டம் தயாராகி முண்டியடிக்கிறது.

ஒருவரையொருவர் முந்திச் செல்லும் முயற்சி….
காலை வாரும் முயற்சி…..
காட்டிக் கொடுக்கும் முயற்சி….
எல்லாம் நடக்கிறது.
சீ என்ன மனிதர்கள் இவர்கள்…….? எப்போது திருந்துவார்கள்? அல்லது திருந்தவே மாட்டார்களா? முழித்துவிட எண்ணமேற்படுகிறது……ஆனால்…..கண்களை மூடிக்கொள்கிறேன்.

இப்போது ஒவ்வொருவராக பெயர், ஊர், விலாசம் கேட்டுப் பதியப்படுகிறது. கையடக்கத் தொலைபேசிகளும் பறிக்கப்படுகின்றன. நானும் வாயில் வந்த சில விபரங்களைக் கொடுத்து ‘டோக்கன்’ பெற்றுக் கொள்கிறேன்.

புத்தம் புதிய முள்ளுக் கம்பியினால் நெருக்கமாக வரிந்து, அமைக்கப்பட்ட ஒற்றையடிப் பாதையினூடாக உடம்பில் காயமேற்படாதவாறு இலாவகமாக நடந்து அந்தக் காவலரணுக்குள் நுழைகின்றேன்.

கைகளை மேலே உயர்த்தச் சொல்லி, உச்சி முதல் உள்ளங்கால்வரை ஒரு தடவல். பின்…. உள்ளங்கால் முதல் உச்சிவரை ஒரு தடவல். இந்த நுட்பமான ‘தடவல்’ முறையை என் மனைவிக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும்.
‘தமிழரின் பாரம்பரிய உள்ளாடையான கோவணத்தைக் கைவிட்டது எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது’ என்ற எண்ணமேற்பட என் உதடுகளில் புன்னகை மலர்கிறது. அவன் முறைத்துப் பார்த்ததை பொருட்படுத்தாமல் ‘றோட்டை’ விரைவாகக் கடக்கிறேன்.

ஓ….என்ன அது? அங்கே மக்கள் கூட்டமொன்று முட்கம்பி தடுப்புக்கப்பால், முண்டியடித்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் முகங்களில் உறவுகளைத் தேடும் ஆவேசம்! யார் இவர்கள்? எந்த நாட்டின் போர்க்கைதிகள்? அவர்கள் பேசுகின்ற மொழி எனக்குப் பழக்கமான மொழியாக இருக்கிறதே? ஓ…. அது என் தாய்மொழி. அப்படியானால் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? எங்கிருந்து கொண்டு வந்து இப்படி அடைக்கப்பட்டுள்ளார்கள்?

முட்கம்பித் தடுப்புக்கப்பால் ஒரு இளைஞர் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு ஆவேசமாய்க் கத்துகிறது.
“அண்ண ஆரத் தேடோணும்…?”
“பெயரயும் நம்பரயும் தந்தால் கூட்டியந்துவிட நூறு ரூவாய்”
“கூட்டியந்தாப் பிறகு காசத் தாங்கோ”
“அலவுண்ஸ் பண்ணீக்க அம்பது ரூவாய்”

யார் இவர்கள்..? புரியவில்லை. எனக்கு முன்னால் வந்தவர்கள் அந்த இளைஞர்கள் நீட்டிய தாளில், பெயரையும் ஏதேதோ நம்பரையும் எழுதிக் கொடுக்கிறார்கள்.

அவர்கள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளெனப் பறந்தோடுகிறார்கள். கொடுத்தவர்கள் முகங்களில் ஏக்கங்கள்….. எதிர்பார்ப்புகள்…. தவிப்புக்கள்.... அப்பட்டமாய்த் தெரிகிறது.

“சேர் ஆரத் தேடோணும்?” ஒரு இளைஞன் அதட்டலாகக் கேட்க, நான் சற்று விலகி, மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடி நிற்கிறேன். அந்த உறவுகளுக்கிடையிலான உரையாடல்களைச் செவிமடுக்கும் ஆவல் என் மனதின் ஒரு மூலையில் எட்டிப்பார்க்கிறது.

“அண்ண குழந்தக்கு ஏதன் வேண்டவெண்டு போட்டான். அண்ணி மடீல வச்சுக் கொண்டிருந்தவா. வெளிச்சம் வர சின்ன ஓட்டதான் கிடந்தது. படீரெண்டு வெடிச்சத்தம் கேக்க அண்ணி ரத்த வெள்ளத்தில மயங்கிப் போய்க் கிடக்கிறா. சின்னவன் துண்டு துண்டா சிதறிப் போய்க் கிடக்கிறான்”


வெளியேயிருந்து கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண் இறையவனின் கருணையை எண்ணியோ என்னவோ அந்த இடத்திலேயே ‘பிரதட்டை’ செய்கிறாள்.

இன்னொரு பக்கம் பார்வையைத் திருப்புகிறேன். “அம்மா செத்தது கூட எனக்குத் தெரியாதடி தங்கச்சி” ஒரு தமக்கை நெஞ்சு விம்மி வெடிக்கிறாள். கட்டிப் பிடித்து அழக்கூட முடியாத சோகம். ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை ஓராயிரம் அம்புகளாய்த் தைத்து ரணகளமாக்குகிறது.

அங்கே இன்னொரு தாய் கம்பியினூடாக கைகளை நுழைத்து கர்ப்பிணியான தன் மகளுக்கு ‘பணிஸ்’ ஊட்டுகிறாள். அவள் வயிற்றில் இருக்கும் அந்தப் பாலகன் - இந்த கேடுகெட்ட உலகத்தைப் பார்க்க முன்னரே - தன் தந்தையை இழந்து விட்டதை அவளின் வெறுமையான நெற்றி பறை சாற்றுகிறது. அவளது கண்களோ தண்ணீர்ப் பஞ்சத்தை போக்கும் முயற்சியில் தாராளமாய் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இரண்டு முதியவர்கள் முள்ளுக் கம்பிகளுக்கூடாக கைகளை நீட்டி, ஒருவரையொருவர் பற்றியவாறு நிற்கிறார்கள். வெளியே நிற்பவரின் கண்கள் நீரைச் சொரிய, உள்ளேயுள்ளவர் “தம்பி… தம்பி…“ என்கிறார். ஆனால் அவரைப் பார்த்தால் ஓரு பத்து வயது அதிகமாய் இருப்பார் போலத் தெரிகிறது.


ஒரு இளைஞன் ஆவேசமாகக் சொல்கிறான். “நீ கையெழுத்துப் போடாதயண…நான் வெளீல வந்தாப் பிறகு எல்லாத்தயும் கவனிக்கிறன்” அந்தப் பெண்ணும் ஆமோதிப்பது போலத் தலையாட்டுகிறாள்.


அங்கே ஓரு மூலையில்….யார் அது? ஒரு கணவனும் மனைவியும் போலத் தெரிகிறதே! நான் இங்கிதம் கெட்டு அதனையும் செவி மடுக்கின்றேன். இருவரினதும் திருமணம் ஒரு பங்கருக்கருகே மரத்தடியில் நடந்த ஒருநாளில், திடீரென குண்டு மழை பொழியத் தொடங்கியதாம். திசைக்கொருவராய் சிதறியோடிய போது அவன் அவளையும், அவள் அவனையும் பிரிந்து தவறவிட்டு விட்டார்களாம். இப்போது தினம் தினம் முள்ளுக் கம்பியினூடாக சந்தித்துக் கொள்ளும் பாக்கியம் கிடைத்துள்ளதாம்.

அங்கே என்ன சல சலப்பு? பார்வையைத் திருப்புகிறேன். பதின்மூன்று வயது மதிக்கத் தக்க சிறுமியொருத்தி, இரண்டாய் மடிந்து கீழே குந்தியிருந்து “ஐயோ….. அம்மா….” என்று கத்துகிறாள். புரியாத இள வட்டம் சுற்றி வளைக்க, அந்தத் தாய் பட்ட வேதனை…… இந்த உலகத்திலேயே எவரும் அனுபவித்திருக்க மாட்டார்கள்.


இன்னொரு புறத்தில், ஒரு தாய். முப்பத்தைந்து வயதிருக்கலாம். குழந்தையை கம்பி வேலிக்கு மேலால் தூக்கி, ஒரு முதியவரிடம் கொடுக்கிறாள்.

குழந்தையைப் பார்க்கும் போது
அந்தப் பிஞ்சு வயிறு
ஒட்டி உலர்ந்து….
என் நெஞ்சு வெடித்து….
நெலோமியின் ‘ஐந்து மணியாச்சா…..’ கவிதை வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.
அந்த முதியவர் குழந்தையை கட்டியணைத்து தன் முத்தத்தாலும், கண்ணீராலும் நனைக்கிறார். பேரனாக இருக்க வேண்டும்.

பச்சையுடையணிந்தவன் அந்த முதியவரை ஏதோ சொல்லி மிரட்டுகிறான். அவர் கெஞ்சும் விழிகளால் அவனை மன்றாட்டமாகப் பார்க்கிறார். அவன் பொருட்படுத்தாமல் ஒற்றையடி முட்கம்பிப் பாதையின் ஓரத்திற்கு அவரை இழுத்துக் கொண்டு வந்து விடுகிறான்.

பிள்ளையைக் கொடுத்த தாய் பதட்டமடைகிறாள். அவள் “அப்பா பிள்ளையைத் தாங்கோ” என்று கையை நீட்டிக் குளற…… முதியவர் அவன் பிடியை உதறி…… ஓடி வந்து, பிள்ளையை கம்பி வேலிக்கு மேலால் கொடுக்கிறார். அந்த அவசரத்தில் பிள்ளையின் காலில் முள்ளுக்கம்பி கீறிக் கிழித்து….அந்தப் பிஞ்சுப் பாலனின் இரத்தம் நிலத்தில் சிந்தி, பூமி செந்நிறமாகிறது.

ஐயோ வேண்டாம் இந்தக் கொடுமை என்று மற்றப் பக்கம் திரும்புகின்றேன். என் கண்களிலிருந்து தெறித்து விழுகின்ற கண்ணீரைப் பார்த்த ஒரு இளைஞன், “ஆர அண்ண தேடோணும்….காசில்லாட்டியும் பரவாயில்லை” என்கிறான்.

நான் முடிவு செய்து விட்டேன். வேண்டாம் இந்தக் கனவு. கனவென்றால் ஒரு இன்பம் ஊற்றெடுக்க வேண்டும். மனது ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும். ஒரு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க வேண்டும். நெஞ்சில் வேதனையையும், சொல்லவொணாத் துன்பத்தையும் கொடுப்பதென்றால் அந்தக் கனவே தேவையில்லை.

கண்களைத் திறக்க முயற்சிக்கிறேன். முடியவில்லை. பக்கத்தில் கையை நீட்டித் தேடுகிறேன். என் மனைவியையும் காணவில்லை. இது என்ன கொடுமை? நான் எங்கே இருக்கிறேன்? நான் கண்டது கனவில்லையா? உறுதிப் படுத்துவதற்காக என்னை நானே கிள்ளிப் பார்க்கிறேன்.

“ஆனந்தக் குமாரசாமி இடைத்தங்கல் நிவாரணக் கிராமம் உங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற அறிவித்தல் பலகை கண்களில் பளிச்சிடுகிறது.

2 comments:

சுபானு said...

இதயங்கள் கனக்கின்றது.. வரிகளில் உணர்வுகளின் வலிகளும் கனதியும் அருமை..

Mahalingam Nireshkumar said...

நன்றி சுபானு. மிக நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் முதல் துளியுடன் நான். இதனை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க உங்கள் உதவியை எதிர் பார்க்கிறேன்.