Monday, July 20, 2009

சதுரங்கம்

சிவா

“சிவா கண்டுக்குட்டி அவிட்டுப்போட்டுது.ஒருக்கா வந்து பிடியடா”
அடி வளவுக்க கிடக்கிற மாட்டுக்கொட்டில்ல இருந்து அம்மா கூப்பிடுறா.
“ஓமம்மா வந்திட்டன்”
நான் ஓடிப்போனன்.அம்மா சொம்பு நிறயப் பாலோட குந்திக்கொண்டிருந்து மாட்டின்ர மடியத் தட்டிக்கொண்டிருக்கிறா.கண்டுக்குட்டி அம்மான்ர முதுகுக்கு மேலால எட்டிப்பால் குடிக்கப் பாக்குது.
“ஏய்…ஏய்…இஞ்சால வா”
நான் கயித்தில பிடிச்சுக் கொற கொறவெண்டு இழுத்தந்து முருங்க மரத்தில கட்டினன்.

“எட சிவா.கோழிக்குஞ்சுக்கு விற்றமின் சீ எடுத்தர மறந்து போனன்.ஒருக்கா….”
செல்லமக்கா சொல்லி முடிக்க முதல் நான் பேணியத் திறந்து குளிசையை அள்ளிக்கொண்டு போய்க் குடுத்தன்.

“எட சிவா……சயிக்கிள் காத்துப்போச்சு. ரூசனுக்கு நேரம் போகுது. முன் வீட்டில போய்ப் பம்மை வேண்டிக்கொண்டு வாடா”
“சரியண்ண”
நான் பம்மைக் கொண்டந்து குடுக்கேக்கதான் ஐயா நித்திரயால எழும்புறார்.
“தம்பி இஞ்ச வா.உந்த நெருப்புப் பெட்டியை எடுத்துத்தாடா” எண்டுறார்.
“எனக்கு நேரம் போச்சுது”
“நான் உவன் சிவாவக் கேட்டனான்”
வீட்டில எல்லாருக்கும் என்னிலதான் நல்ல விருப்பம்.எல்லாரும் என்னட்டத்தான் வேல கேப்பினம்.

“சிவா சம்போ முடிஞ்சுதடா.மொட்டயன்ர கடக்குப் போய் வேண்டிக்கொண்டாறியே”
“நீ சும்மா இரடி புள்ள. பள்ளிக்கூடத்துக்கு நேரம் போப்போகுதெல்லே”
ஐயா அக்காவ உரப்புறார்.அக்காவப்பாக்கப் பாவமாக் கிடக்கு.நான் பொட்டுக்கால பூந்தோடிப்போய் வேண்டிக் கொண்டந்து குடுக்க அக்கா கெட்டிக்காறனெண்டு சொல்லுறா.

“சிவா இஞ்ச வாடா.இந்தா தேத்தண்ணி.குடிச்சிட்டு பாலுவயும் மீனாவயும் எழுப்பு”
மீனா சின்னத்தங்கச்சி. பேசாமல் எழும்புவள். பாலு அழுது குளறிக்கொண்டுதான் எழும்புவன். அவன எழுப்பத்தான் எனக்குச் சரியான பயம். வேணுமெண்டு காலாலயும் உதைவன்.

“சிவா பள்ளிக்கூட வான் வரப்போகுது”
ஐயா உரப்புறார்.நான் விறுவிறெண்டு எல்லா வேலயயும் செய்யுறன்.சாப்பாட்டுப் பெட்டீக்க இடியப்பத்தப் போட்டு மூடி,தண்ணிப் போத்திலயும் நிரப்புறன்.

“சிவா என்ர சப்பாத்தக் கண்டனியோடா”
கட்டிலுக்கு கீழ பூந்து சப்பாத்த எடுத்துப் பாலுவிட்டக் குடுக்கவும் வாசலில வான் கோணடிக்குது. புத்தக வாக்கயும் தண்ணிப் போத்திலயும் எடுத்துக்கொண்டோடுறன். பாலுவும் மீனாவும் வானுக்க ஏறிக் கதவ சாத்தினவுடன கண்ணாடீக்கால கையக் காட்டீனம். ஒருநாளும் இல்லாமல் இண்டக்கெனக்கு கண் எல்லாம் கலங்கிப் போச்சுது.

மீனாட்சி

எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.அண்டக்கு நவராத்திரி நாலாம் பூசை. அப்பூன்ர காலத்தில இருந்து நாலாம் பூச நாங்கள்தான் செய்யுறனாங்கள். நாலாம் பூசயெண்டா வேப்பங்குளத்துச் சனம் எல்லாம் நிறம்பி வழியும். புக்க,கடல,அவல்,மோதகம்,வட எண்டு அள்ளி அள்ளிக் குடுப்பம். அத வாங்குறதுக்கெண்டும் ஏழை எளியதுகள் கஷ்டப் பட்ட சனங்கள் எல்லாம் வாறதுமுண்டு.
பூசை முடிய இரவு பத்துப் பதினொரு மணியாகும். ஒவரு ஜனாதிபதியும் ஆட்சிக்கு வந்தோடண கொஞ்சக் காலத்துக்கு சண்டை சச்சரவு இல்லாமல் கிடக்கிறதும், சமாதானப் பேச்சு வார்த்தை நடக்கிறதும் வழமைதானே. அப்ப சந்திரிக்கா அம்மையார் ஆட்சிக்கு வந்த நேரம்.
சிறியன்ரி நவராத்திரிப்பாட்டு பாடிக்கொண்டிருக்கேக்க சின்னப் பெட்டையொருத்தி ஒரு துவாயில சுத்தினபடி குழந்தயொண்ட கொண்டந்து தூணுக்குப் பக்கத்தில கிடத்திப் போட்டு சாமி கும்பிட்டுக் கொண்டு நிண்டவள். ‘சின்ன வயதில பிள்ளப் பெத்துப் போட்டு பாவம் ஆத்தலயுது’ எண்டு நினச்சுக்கொண்டு நிண்டன். திடீரெண்டு பாத்தாப் பெட்டயக் காணேல. குழந்த தன் பாட்டில விரலச் சூப்பிக்கொண்டு படுத்திருக்குது.

“இஞ்சேரப்பா அதில குழந்தயக் கிடத்தின பெட்டயக் காணேல”
மனிஷன முழங்கையால இடிக்கிறன்.
“அவள் உங்கினேக்க சுத்திக்கும்பிட்டுக் கொண்டு நிப்பள்.நீ பேசாமல் உன்ர அலுவலப் பாரன்”
எனக்கெண்டா மனம் கேக்கேல.அங்கமிஞ்சயும் சுத்திப் பாத்துக் கொண்டு நிக்கிறன்.பூச முடிஞ்ச பிறகும் அவளக் காணேல. நான் கோயிலெல்லாம் சுத்தித் தேடிக்கொண்டு வந்திட்டன்.அவள் பெட்டயக் காணேல. மனிஷனெண்டா என்ன நெருப்பு மாதிரிப் பாத்துக் கொண்டு நிக்குது. குழந்தயப் கிட்டப் போய்த் தொட்டுப்பாத்தன்.
“ஆம்பிளப் பிள்ளயப்பா”
“கெதியாத் தூக்கிக் கொண்டு வாடி”

சிவலிங்கத்தார்

உவன் சிவாவ நினச்சா வயிறு பத்தி எரியுது.என்ர புள்ள என்ர வீட்டிலயே வேலக்காறன் மாதிரி வளருறான்.வெளீல எப்பிடிச் சொல்லுறது. அண்டக்கு அந்தப் பெட்ட எவளவு கெஞ்சினாள்.

பொன்னம்பலத்தான் கொண்டந்த கசிப்புச் செய்த வேலதான்.மில்லில வேல முடிஞ்சு எல்லாரும் போட்டினம்.பெட்ட மட்டும் உள்ளுக்க கிடக்கிற அரிசி தீட்டுற மிசினடீல கிடந்த தவிட்டக் கூட்டி அள்ளிக்கொண்டு நிண்டாள்.

மீனாட்சியும் அஞ்சாறு நாளா வீட்டில இல்ல. தேப்பன் சாகக் கிடக்குதெண்டு செட்டிக்குளம் போட்டாள்.வெறிதலக்கேறிப்போய் நான் அவளுக்குக் கிட்டப்போய் அவளப்பிடிச்சிழுத்தன்.அவள் திகைச்சுப்போய் திரும்பிப்பாத்தாள். என்ர எண்ணம் விளங்கினோட கையெடுத்துக் கும்பிட்டாள்.
“ஐயா வேண்டாமய்யா.நான் உங்கட பிள்ள மாதிரி ஐயா”
கையெடுத்துக் கும்பிட்டு, ஆத்தேலாமல் என்னோட மல்லுக்கட்டியும் பாத்தாள்……….

அவள் பேந்து வேலக்கும் வாறேல.'உதுகள் உப்பிடித்தானெண்டு’ நானவள மறந்தே போனன்.

பேந்தொருநாள் எங்கட மில்லுக்குப் பின்வளவு கிணத்துக்க ஆரோ விழுந்து செத்துப் போய்க் கிடக்கினம் எண்டு சனம் எல்லாம் ஓடிச்சுது.நானும் போய் எட்டிப் பாத்தன்.அவள்தான் செத்துப் போய்க் கிடக்கிறாள்.உரிச்சு வச்சு என்ர மூத்தவள் போலத்தான் கிடக்குது.எனக்குத் தலயச் சுத்திக்கொண்டு வருது.மெதுவா வந்து ஒரு மர நிழலில நிண்டிட்டன்.

“என்னய்யா தலயச் சுத்துதோ”
திடுக்கிட்டுப் போய்த் திரும்பிப் பாத்தா முத்தன் நிக்கிறான்.
“ஓமடா தலயச் சுத்திக்கொண்டு வருகுது. வெய்யில் சுட்டுப் போட்டுதடா”
“இல்ல ஐயா.என்ர பிள்ளக்கு செய்த அநியாயத்துக்குத்தான்……..”
“என்னடா கதக்கிறா…..எனக்கொண்டும் விளங்கேல”
“நடிக்காதையுங்கோ ஐயா. நடிக்காதையுங்கோ. அவள் மில்லுக்க வேலக்கு போமாட்டன் எண்டு சொல்லேக்கயும்,நீங்கள் அடிக்கடி விசாரிக்கேக்கயும் எனக்கொண்டும் விளங்கேல. இப்ப எல்லாம் விளங்கிப் போச்சுது”
“என்னடா விசர்க்கத கதக்கிறா?”
“எனக்கும் விசர்தான்.அவளுக்கும் விசர்தான். விசரில்லாட்டி கயித்தால கட்டிக்கட்டி மறச்சு வச்சிருந்து பிள்ளயப் பெத்து எறிஞ்சு போட்டு வருவளே.ஆசுபத்திரீல வேல செய்யுற கந்தன் கண்டு சொல்லேக்க எனக்கு உயிரே போட்டுது”
‘நீ நல்ல இருக்கமாட்டா. உன்ர வம்சம் தளைக்காது’ எண்டு மண்ண அள்ளிப் போட்டுத் திட்டுறான்.
“டேய் முத்தன் சத்தம் போடாதயடா.எவளவு காசு வேணுமெண்டாலும் தாறன்”
அவன் ஆவேசமாப் பாத்த பார்வ தாங்கேலாமல் நான் தலயக் குனிஞ்சு கொண்டு நிக்கிறன்.
“காசென்னய்யா காசு. நான் எவளவு காசு தந்தா மீனாட்சிய…..” சொல்ல வந்ததை சொல்லாமல் திடீரெண்டு தலேல அடிச்சுக்கொண்டு குழறுறான்.
“என்ன மன்னிச்சுக் கொள்ளுங்கோ அம்மா. மன்னிச்சுக் கொள்ளுங்கோ.தெரியாமல் சொல்லிப் போட்டன். உங்கட கையால போட்ட சோத்த எத்தின நாள்த் திண்டிருப்பன்”
“டேய் முத்தன் அழாதயடா…..”
“போங்கோ ஐயா.போங்கோ. இதில நிக்காமல் போங்கோ”
“ஒருத்தரிட்டயும்…?”
“சொல்ல மாட்டன் ஐயா. உங்களுக்காக இல்ல.மீனாட்சி அம்மாவுக்காக.நாங்கள் ஏழை எளியதுகள் ஐயா நன்றி மறக்கமாட்டம்”
நான் மெல்ல மெல்ல நடந்து மில்லடிக்கு வாறன்.
“ஓமாம். காளி கோயிலடீலதான் கிடத்திப் போட்டு வந்தவளாம்”
ஆரோ கதச்சுக் கொண்டு போக எனக்குப் பகீரெண்டு நெஞ்சு வலிச்சுது.

செல்வராகவன்

மதவாச்சிப் பாதையூடாக கொழும்புக்குப் போய் வருவதென்றால் உயிர் போய் வரும்.ஆனால் இந்தமுறை பயணக்களைப்பு கொஞ்சங்கூடத் தெரியவில்லை.கடந்த மூன்று நாட்களும் நடந்த செமினாறில் அறிந்த விடயங்கள் மனதைப் பாரமாக அழுத்திக் கொண்டிருந்தன.

மூன்று வருஷமாகப் பிரதேச செயலகத்தில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தராக வேலை செய்து பெற்ற அனுபவத்தை விட இந்தச் செமினார் பல அனுபவங்களைத் தந்திருந்தது.அந்த வெள்ளைக்காரன் எவ்வளவு அருமையாக விளங்கப் படுத்தினான்.

சிறுவர்கள் என்றால் யார்?
அவர்களுக்குள்ள உரிமைகள் என்ன?
கட்டாயமாக வழங்கப்படவேண்டிய உரிமைகள் என்ன?
சிறுவர் உரிமைகள் மறுக்கப்பட்டால் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் என்ன?
ஒவ்வொரு விடயத்தையும் விளங்கப்படுத்தினான்.
மூன்றாம் நாள் மதிய உணவின் பின்னர் காட்டப்பட்ட வீடியோப் படக்காட்சிகள் வாழ்நாளில் மறந்துவிட முடியாதவை.வெவ்வேறு நாடுகளில் சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளிகளாகவும், பாலியல் தொழிலாளிகளாகவும் நடத்தப்படுகின்ற கொடுமைகளைச் சித்தரிக்கும் காட்சிகள், பலபேரைக் கண்கலங்கி அழ வைத்துவிட்டன.அந்தக் காட்சிகள் மனதில் வைராக்கியத்தையும் தந்திருந்தன.

வீட்டிற்கு வந்து இறங்கியதும் வழமைபோலவே விசாரணைகள்,உபசரிப்புகள்.
”எப்பிடியடா பிரயாணம்.சுகமா இருந்ததே?”
என்ற தேவையில்லாத கேள்விகள். சாப்பிடும்போது அம்மாவுக்கு மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.
“எணயம்மா…சிவலிங்கத்தாற்ற மில்லில வேல செய்யுற சிவா வேண்டி வளத்த பிள்ளயோண?”
“ஓமடா.காளி கோயிலடீல ஆரோ கிடத்திப் போட்டுப்போக மீனாட்சி கண்டு தூக்கிக் கொண்டு வந்தவா.ஏனடா?”
“ஒண்டுமில்ல சும்மா கேட்டனான்”

என்ன செய்யுறதெண்டாலும் அம்மாவுக்குத் தெரியாமல்தான் செய்ய வேண்டும். அம்மாவுக்குத் தெரிந்தால் ‘ஆத்தாவே…அம்மாளே…’ என்று சத்தம் போட்டுக் காரியத்தைக் கெடுத்து விடுவா.

நான் இரகசியமாகக் காரியங்களைச் செய்யத் தொடங்கினேன்.மன்னார் கொன்வென்ற்றுடன் தொடர்பு கொண்டு அட்மிஷன் தொடர்பாக விசாரித்தேன்.சம்மந்தப்பட்ட மேலதிகாரிகள், பொலிஸ் ஆகியோரிடம் அனுமதியைப் பெற்றுக்கொண்டேன்.
குறித்த ஒருநாளில் பொலிஸ், கொன்வென்ரைச் சேர்ந்த சிஸ்ரேர்ஸ் இரண்டு பேர், ஒன்றிரண்டு மேலதிகாரிகளுடன் திடீரென்று சிவலிங்கத்தாரின் மில்லில்போய் இறங்கினேன். சிவா கிணத்தடியில் தண்ணித் தொட்டியைக் கழுவிக்கொண்டு நிண்டான்.
“இல்ல ஐயா உவர் பொய் சொல்லுறார். நாங்கள் அவன எங்கட பிள்ளபோலத்தான் வளக்கிறம்”
“நான் ஏன் பொய் சொல்லப் போறன்? வர்ற வழீல விசாரிச்சனாங்கள்தானே சேர்? சனம் என்ன சொன்னதெண்டு உங்கட காதால கேட்டனீங்கள்தானே!”
“அப்ப ஏனம்மா அவனப் பள்ளிக்கூடம் விடேல?”
மீனாட்சி அம்மா மௌனமாக நிக்கிறா.

“தம்பி இஞ்ச வாரும். உம்மட பேர் சிவாதானே?”
அவன் பதில் சொல்லாமல் முழுசிக் கொண்டு நிற்கிறான்.
“இந்தா இந்த அன்ராக்களோட போய் நிண்டு படிக்கிறீரே? அவ உமக்குப் பாடம் சொல்லித் தருவினம், புது உடுப்பு வாங்கித் தருவினம். வோல் எல்லாம் விளயாடலாம். நல்லாப் படிக்கலாம்”
“இல்ல நான் இஞ்சதான் நிக்கப்போறன்”
“பாத்தியளே ஐயா அவனுக்கு இஞ்ச நிக்கத்தான் விருப்பம். நாளக்குத் துவக்கம் அவனப் பள்ளிக்கூடம் விடுறம்”
ஒரு அதிகாரியின் மனம் மாறத் தொடங்கியது.
“என்ன செல்வராகவன். என்ன செய்வம்?”
“இல்ல சேர் இஞ்ச சரிவராது. இவ இஞ்ச அவனிற்ற நல்லா வேல வாங்கிப் பழகிட்டினம். அவயால அவன வேல ஏவாமல் இருக்கேலாது. இஞ்ச நிண்டா அவனும் சரியாப் படிக்கமாட்டான்”
மற்றைய அதிகாரிகள் என்னுடன் உடன் பட்டதால் அவனைக் கொன்வென்ற்றிற்கு அனுப்பும் முடிவில் மாற்றமேற்படவில்லை.

சிவா “நான் போமாட்டன்” என்று அழுது அடம் பிடிக்கத் தொடங்கினான். செல்லம் அக்கா ஒரு வாக்குக்க அவன்ர காச்சட்ட, சட்டுகளப் போட்டுக்கொண்டோடிவந்து குடுக்கிறா. நான் அவனப் பலாத்காரமா வானுக்க ஏத்துறன்.
அவன் திமிறி வெளீல எட்டிப் பாத்து
“பாலுவுக்கும் மீனாவுக்கும் சொல்லுங்கோ” எண்டுறான்.
எனக்குக் கண் எல்லாம் கலங்கிப் போச்சு. வான் புளுதியக் கிளப்பிக் கொண்டு வெளிக்கிட்டுது.

அவன்ர எதிர்காலம் நல்லா அமையும் எண்ட நம்பிக்கையோட நானும் வெளிக்கிட்டன். திடீரெண்டு கிணத்தடீல பரபரப்பு. திரும்பிப் பாத்தால் சிவலிங்கத்தார் நெஞ்சைப் பொத்திக்கொண்டு விழுந்து கிடக்கிறார்.
’சம்பளம் இல்லாத வேலைக்காரன் போய்விட்ட அங்கலாய்ப்பு’ என்ற எண்ணத்துடன் நான் வீடு நோக்கி நடக்கத்தொடங்கினேன்.

0 comments: