வாசிப்புப் பழக்கமானது தற்போதைய காலத்தில் மிக வேகமாக அருகி
வருகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள்
சொல்லப்படுகின்றபோதும் அவற்றில் எந்தவொரு காரணமும் ஆமோதித்து ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதன்று.
ஏனெனில் ‘வாசிப்பை’ தவிர்த்து ஒரு மனிதனின் வாழ்வு
நிறைவுடையதாக அமைய முடியாது.
வாசிப்பு
என்றால் என்ன? என்ற வினாவுக்கான
தேடல் மிகப் பரந்தது. வாசிப்பு
என்பது ஒரு விஞ்ஞான ரீதியிலான
செயற்பாட்டுக்கு ஈடானது. முக்கியத்துவமானது. அதனால்
தான் “வாசிப்பு ஒரு செயன்முறை” யாகக்
கருதப்படுகின்றது.
வாசிப்பு
: வாசிப்பு என்பது எழுத்துக்கள், குறியீடுகளிலிருந்து கருத்தொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான சிக்கலான அறிவு சார்ந்த செயன்முறையாகும்.
இது – மொழிப் பயன்பாட்டினைப் போன்று
- தொடர்பாடலை மேற்கொள்ளவும், தகவல்களையும் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்ளவும் பயன்படுகின்ற, வாசகருக்கும் - எழுத்துக்களுக்கும் இடையிலான சிக்கலான ஒரு இடைத்தொடர்பாகும். இது
வாசகரது முன்னறிவு, மொழியறிவு, அனுபவம், உளப்பாங்கு,
ஆகியவற்றால் சமூக கலாச்சார நிலைமைகளுக்கேற்ப ஒழுங்குபடுத்தப்படுகிறது.
வாசிப்புச்
செயன்முறையை வெற்றிகரமாக்குவதற்கு தொடர்ச்சியான பயிற்சி, அப்பயிற்சியில் விருத்தி புத்துருவாக்க சிந்தனை, ஆக்கத்திறன், சிக்கலான விடயங்களை பகுப்பாய்வு செய்யும் திறன் என்பன
அவசியமாகும்.
வாசிப்பு என்பதற்குக்
கொடுக்கப்பட்ட மேற்படி வரைவிலக்கணத்திலிருந்தே வாசிப்பின் முக்கியத்துவத்தை
எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றதல்லவா!
வாசிப்புப்
பழக்கமானது தற்பொழுது மிக வேகமாக அருகி
வருகின்றது. வாசிப்புப் பழக்கத்தைக் குறைப்பதில் அல்லது முற்று முழுதாக
இல்லாதொழிப்பதில் இலத்திரனியல் ஊடகங்களும், இலத்திரனியல் சாதனங்களும் அளப்பரிய பங்கினை ஆற்றி வருகின்றன
என்பது மிக வருத்தத்திற்குரிய, மறுக்க முடியாத ஓர்
உண்மையாகும்.
தற்போதைய
கால கட்டத்தில் திரைப்படங்கள், தொடர் நாடகங்கள், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் என
ஒரு பக்கமாகவும் இலத்திரனியல் பத்திரிகைகள், இலத்திரனியல் சஞ்சிகைகள், இலத்திரனியல் புத்தகங்கள் என ஒரு பக்கமாகவும்
இணையம், முகநூல், ருவிற்றர்
என ஒரு பக்கமாகவும் மும்
முனைத் தாக்குதலிலிருந்து தப்பித்து ஒரு மனிதன் வாசிக்க
வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலிருக்கின்றான்.
இலத்திரனியல்
ஊடகங்களையோ அல்லது இலத்திரனியல் சாதனங்களையோ
குறைத்து மதிப்பிடுவதோ, குறை காண்பதோ, பரிகாசம் செய்வதோ இக் கட்டுரையின்
நோக்கம் அல்ல!
எனவே இவை எவ்விதமாக வாசிப்புப்
பழக்கத்தைக் குறைத்து வருகின்றன அல்லது இல்லாதொழிக்கின்றன என்பதை
ஆராய்வதும் இங்கு அவசியமாக அமையவில்லை.
வாசிப்பு
என்னும் பொழுது பெரும்பாலும் புத்தகங்கள்,
பத்திரிகைகள், சஞ்சிகைகள் சார்ந்த
வாசிப்பே கருதப்படுகின்றது. மின்னல்; வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் உலகில் அன்றாட நிகழ்வுகள்
தொடக்கம் ஆழமான ஆய்வுகள் வரை
பல வகையான தகவல்களை அறிந்து
கொள்வதற்கும், அறிவை இற்றைப்படுத்திக் கொள்வதற்கும், நல்ல பண்புகளை வளர்த்து உன்னதமான மனிதனாக மாறுவதற்குத் தேவையான
உற்சாகத்தையும் ஊக்கத்தையும் பெற்றுக் கொள்வதற்கும் பத்திரிகைகள்,
சஞ்சிகைகள், நூல்கள் அளப்பரிய
பங்களிப்பினைச் செய்து வருகின்றன.
நல்ல நூல்கள் நம் கையிலிருந்தால்
அவை எமக்கு அரவணைக்கும் தாயாக,
தைரியமூட்டும் தந்தையாக, கருத்துக்களைப்
பகிர்ந்து கொள்ளும் நண்பனாக, சிறந்ததொரு வழிகாட்டியாக இருக்கும்.
எம்மில்
மறைந்திருக்கும் ஆற்றல்களைக் கண்டு பிடிப்பதற்கும், தெளிவான சிறந்த அறிவைப்
பெற்றுக் கொள்வதற்கும் வாசிப்புப் பழக்கம் மிக முக்கியமானது.
கலைகளைப் படிப்பதும் ஒரு கலைதான். அக்கலைகள்
அனைத்தையும் ஒருங்கே கொண்ட கலைதான்
வாசிப்புக்கலை.
வாசிப்புத்திறன்
மிக்க மாணவன், பேச்சுத்திறன் மிக்கவனாகவும், ஞாபக சக்தி மிக்கவனாகவும், விடயங்ளை புரிந்து கொள்ளும்
ஆற்றல் மிக்கவனாகவும், பொது அறிவு மிக்கவனாகவும் விளங்குவான்
என்பது ஆய்வுகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. பிற்காலத்தில் அவன் அறிவாற்றல் மிக்கவனாகவும்,
வாழ்வில் மேம்பட்டவனாகவும்
விளங்குவான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
உலகமறிந்த
சில உன்னத மனிதர்களின் வாழ்வில்
நடந்த சில சம்பங்களைப் பார்ப்போமாக
இருந்தால், வாசிப்புப் பழக்கமே அவர்கள் தங்கள்
வாழ்வில் அவ்வாறான உன்னதமான நிலையையடைந்து, உலக வரலாற்றின் சில பக்கங்களைத் தமக்குச்
சொந்தமாக்கிக் கொள்ள உந்து சக்தியாக
இருந்தது என்பது தெளிவாகும்.
இந்திய
சுதந்திரத்திற்கு முக்கிய பங்காற்றிய மாவீரன்
பகவத்சிங் தூக்கில் இடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பதாகக்
கூடப் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தானாம்.
மகாத்மா
காந்தியிடம் “உங்களுக்கு ஒரு கோடி ரூபாய்
கிடைத்தால் என்ன செய்வீர்கள்?” என்று
கேட்கப்பட்டபோது “மிகச்
சிறந்த நூலகம் ஒன்றை அமைப்பேன்”
என்றாராம்.
“யாருமற்ற
தனிமைத் தீவில் தள்ளி விடப்பட்டால்
என்ன செய்வீர்கள்?” என்று ஜவஹர்லால் நேருவிடம்
கேட்கப்பட்ட போது “புத்தகங்களுடன் சந்தோசமாக
வாழ்க்கை நடத்துவேன்” என்றாராம்.
நெல்சன்
மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் சிறைச்சாலைக்கு சென்றிருந்த ஒரு அரசியல் பிரமுகர்
“உங்களுக்கு என்ன சலுகைகள் சிறைச்சாலையில்
வேண்டும்?” என்று கேட்டபோது “புத்தகங்கள்
படிப்பதற்கு அனுமதித்தால் போதும்” என்றாராம். “மகாத்மா
காந்தியின் சத்திய சோதனையைப் படித்த
பின்புதான் கறுப்பின விடுதலைக்காக போராடும் எண்ணமே எனக்கு உதித்தது”
என்ற நெல்சன் மண்டேலாவின் கூற்றும்
இங்கு கவனிக்கத்தக்க ஒன்றே!
“மனிதனது
கண்டுபிடிப்புக்களில் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு
எது?” என்று ஐன்ஸ்டீனிடம் கேட்கப்பட்ட
பொழுது “புத்தகங்கள்தான்!” என்றாராம்.
நீண்டு
செல்லும் பட்டியலிலும் பார்க்க அப்பட்டியல்கள் தருகின்ற
பாடங்களே உற்று நோக்கத் தக்கவை.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தாம்
பிறந்ததற்கான நன்றிக் கடனை தமது
நாட்டிற்கோ, தமது இனத்திற்கோ அல்லது உலகத்திற்கோ அதியுச்ச
அளவில் திருப்பிச் செலுத்தி இவ்வுலக வரலாற்றில் இடம்பிடித்தவர்கள்.
அவ்வாறானவர்கள் வாசிப்புத் தொடர்பாகக் கொண்டிருந்த சிந்தனைகள் வாசிப்பின் முக்கியத்துவத்தை எமக்கு எடுத்தியம்பவில்லையா?
வாசிப்பதால்
மனிதன் பூரணமடைகின்றான்,
ஒரு புத்தகத்தைத் திறக்கும் போது உலகின் ஒரு
ஜன்னலைத் திறக்கிறோம்,
புத்தகம்
என்பது பையில் சுமந்து செல்லும்
ஒரு பூந்தோட்டம் (சீனப் பழமொழி),
புதிய புத்தகத்தை வாசிக்கும்போது புதிய நண்பன் ஒருவனைச்
சந்திக்கின்றோம். அதை மீண்டும் மீண்டும்
வாசிக்கும்போது நீண்ட கால நண்பனைச்
சந்திக்கின்றோம் (சீனப்
பழமொழி),
ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள்.
அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய
முட்டாள் (அரேபியப் பழமொழி) ,
போன்ற உலகப் பழமொழிகள் பலவும்
வாசிப்பின் முக்கியத்துவத்தை சுட்டி நிற்பதை அவதானிக்க
முடிகிறது.
இவ்வாசிப்பின்
முக்கியத்துவம் இலங்கை அரசினாலும் உணரப்பட்டு,
வாசிப்புப் பழக்கத்தை
ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பரந்தளவில் மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுவாக
முக்கியமான நிகழ்வுகள் ஒரு நாள் மாத்திரமே
(சர்வதேச தினங்கள் யாவும் இதற்குச் சான்றாகும்)
கொண்டாடப்படுவது வழமையானது. ஆனால் வாசிப்பின் முக்கியத்துவம்
கருதி இலங்கையில் ஒக்ரோபர் மாதம் முழுவதும் வாசிப்பு
மாதமாகப் பிரகரணப்படுத்தப்பட்டிருப்பதே வாசிப்பின் முக்கியத்துவத்திற்கு சிறந்த சான்றாகும்.
இவ்வாசிப்புப்
பழக்கத்தை சிறு வயதிலிருந்தே கட்டியெழுப்புதல்
அவசியமானது. வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதென்பது ஒரு குழந்தைக்கு உணவு
உண்ணக் கற்றுக் கொடுப்பதற்கு ஈடானது.
குழந்தைக்கு உணவு உண்பதற்கு கற்றுக்
கொடுக்கும் வித்தையை நன்கு கற்றுத் தேர்ந்தவர்
ஒரு தாயே! அதே போன்று
வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதில் ஒவ்வொரு ஆசிரியரும் வித்தகராக
இருத்தல் அவசியம்.
ஆரம்பத்திலேயே
குறிப்பிடப்பட்டது போல வாசிப்பு என்பது
ஒரு செயன்முறை. இச் செயன்முறையையை ஒரு
ஒழுங்கான முறையிலேயே செயற்படுத்த வேண்டும்.
ஒரு குழந்தை பேசக் கற்றுக்
கொள்ளும் போதே வாசிக்கவும் பழக்குதல்
வேண்டும். ஆரம்பத்தில் படங்கள் மட்டும் கொண்ட
புத்தகங்களை வழங்குதல், பிள்ளை எழுத்துக்களைத் தெரிந்து கொண்ட பின்னர் படங்களையும்
பெயர்களையும் கொண்ட புத்தகங்களை அறிமுகம்
செய்தல், சித்திரக் கதைப் புத்தகங்களை அறிமுகம்
செய்தல், சிறிய புத்தகங்களை அறிமுகம் செய்தல் என்றவாறாக இச்
செயன்முறை விருத்தி செய்யப்பட வேண்டும்.
இச்செயன்முறை
மூலம் வாசிப்புப் பழக்கத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே ஆரம்பித்துப் பின்னர் படிப் படியாக
அதிகரிக்கச் செய்து, வாசிப்புப் பழக்கம் மிக்க சமுதாயம்
ஒன்றை உருவாக்குவதன் மூலம் ஒரு சமுதாயத்தையே
நல்வழிப்படுத்தலாம்.
உறவினர்
வீடுகளுக்குச் செல்லும் போது பிஸ்கட் பெட்டிகளைக்
கொண்டு செல்வதற்குப் பதிலாகப புத்தகங்களைக் கொண்டு
செல்லும் பழக்கம் எம்மிடையே ஏற்படவேண்டும்!
பிறந்தநாள்
பரிசாகவும் நினைவுப் பரிசாகவும் புத்தகங்களை வழங்குகின்ற ஒரு சமுதாயம் எம்மிடையே
தலை தூக்க வேண்டும்!
அப்போதுதான்
மனிதனின் அறிவுத் தேடல் நிறைவு
செய்யப்பட்டு, எமது சிறார்களும்இ இளைஞர் - யுவதிகளும் தவறான வழியில் செல்வதிலிருந்து
தடுத்து நிறுத்த முடியும்.
எனவே நாம் ஒவ்வொருவரும் வாசிப்புப்
பழக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, குறைந்து செல்லும் வாசிப்புப் பழக்கத்திலிருந்து மீண்டெழுந்து, வாசிப்பில் ஈடுபடுவதும், மற்றையவர்களை ஈடுபட வைப்பதும் காலத்தின்
தேவையாகும். இது நம் ஒவ்வொருவரினதும்
சமுதாயக் கடமையுமாகும்.
0 comments:
Post a Comment