Tuesday, November 8, 2016

யாழ் பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம் - நிறுவுனர் நினைவுப் பேருரை 2016

நாடி வரும் பக்தர் கூட்டம் தேடிவரும் வரம் எல்லாம் வாரி வழங்கி அருள் பாலித்துக்கொண்டிருக்கும் வழக்கம்பரை அம்பாளின் பாதார விந்தங்களைப் பணிந்து…….
யாழ் பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவிற்கும் பாடசாலையின் நிறுவுனர் அமரர் முருகேசு கந்தையா அவர்களின் நினைவு நிகழ்விற்கும் தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கும் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பாடசாலையின் முதல்வர் திருமதி .சுலபாமதி அவர்களே!
இந்நிகழ்விற்கான ஆசியுரையை வழங்கி அமர்ந்திருக்கும் வணக்கத்திற்குரிய சிவஸ்ரீ ஸ்ரீரங்கநாதக் குருக்கள், வழக்கம்பரை அம்மன் ஆலயம் அவர்களே!
இந்நிகழ்வின் முதலாம் அமர்விற்கு பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த திரு கு.சிவகுமார், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர், ஆரம்பக் கல்விப் பிரிவு, வலிகாமம் கல்வி வலயம் அவர்களே!
இந்நிகழ்வின் இரண்டாம் அமர்விற்கு பிரதம விருந்தினராக வருகை தந்திருக்கும் செல்வி .இராதா, உதவிக்கல்விப் பணிப்பாளர், தமிழ், வலிகாமம் கல்வி வலயம் அவர்களே!
சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் திரு .துரைசிங்கம், தொழினுட்ப உத்தியோகத்தர் அவர்களே!
நிகழ்விலே கலந்து கொண்டிருக்கும் என்றும் என் அன்பிற்கும் மதிப்பிற்குரிய பாடசாலையின் ஆசிரியர்களே!
பெற்றோர்களே! நலன் விரும்பிகளே! பாடசாலை சமூகத்தினரே!
என் அன்பான மாணவர்களே!
உங்கள் அனைவருக்கும் எனது இந்நேர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
இன்றைய நிகழ்வில் பாடசாலையின் ஸ்தாபகர் அமரர் முருகேசு கந்தையா அவர்களை நினைந்து  பேருரை ஆற்றுமாறு எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய பாடசாலையின் அதிபர் என்னிடம் வினயமாகக் கேட்டபோது எந்தவிதமான மறுப்புமின்றி உடனடியாகவே அவர் இட்ட பணியை நான் ஏற்றுக் கொண்டேன். ஏனெனில் நான் கற்ற பாடசாலையில் மீண்டும் ஒருமுறை கால் பதிக்கக் கிடைத்த இவ்வரிய சந்தர்ப்பத்தை தவறவிட நான் விரும்பவில்லை.
1980 ஆம் ஆண்டில் பாலர் வகுப்பில் நான் இப்பாடசாலையில் அனுமதி பெற்றபோது முன்பள்ளிக்கு சென்ற அனுபவம் எனக்கு இருக்கவில்லை. (பிற்பட்ட காலத்தில் பாலர் வகுப்பு என்ற பிரயோகம் நீக்கப்பட்டு தரம் 1 என அழைக்கப்பட்டது) ஒரு தாய் தன் பிள்ளையை அரவணைப்பது போல மெய்கண்டான் மாதா என்னை அரவணைத்துக் கொண்டாள்.
பாலர் வகுப்பில் எனக்குப் பாடம் கற்பித்த ஆச்சிப்பிள்ளை ரீச்சரை  இன்னொரு அம்மாவாகவே நான் கண்டேன். அத்தனை அன்பாகவும் பாசமாகவும் என்னை வழி நடாத்தினார். முன்பள்ளிக்கு சென்ற அனுபவம் இல்லாத காரணத்தினால் பாடசாலைக்கு வந்தவுடனேயே அழத்தொடங்குவது என் வழக்கமாக இருந்தது. ஒரு தாய் தன்பிள்ளையை அரவணைப்பது போல என்னை அரவணைத்து கொஞ்சம் கொஞ்சமாக கல்வியறிவை ஊட்டிய அந்த ஆசிரியரை என் உயிர் உள்ளவரை என்னால் மறக்க முடியாது.
பிற்காலத்தில் பாடசாலை மட்டத்திலும், கொத்தணி மட்டத்திலும் கோட்ட மட்டத்திலும் நான் பல சாதனைகளை நிலை நாட்டுவதற்தான அடித்தளத்தை இட்ட ஆச்சிப்பிள்ளை ரீச்சரை இவ்விடத்தில் நன்றியுடன் நினைத்து கைகூப்பி வணங்கி நிற்கின்றேன்.
1980 ஆம் ஆண்டில் முன்பள்ளிக்குச் சென்ற அனுபவம் இல்லாமல் பாலர் வகுப்பில் இப்பாடசாலையில்  இணைந்து கொண்ட நான், இன்று ஓர் ஆசிரிய கல்வியியலாளராக, இதுவரை ஏறத்தாழ 2000 ஆசிரியர்களை உருவாக்குவதில் பங்களிப்புச் செய்தவனாக உங்கள் முன் நிற்க முடிகின்றதென்றால் மெய்கண்டான் மாதாவின் மடியில் எனக்கொரு இடம் கிடைத்ததுதான் காரணம். அவ்வாறானதொரு கீர்த்தியும் மகத்துவமும் இப்பாடசாலைக்கு இருக்கின்றது.
அவ்வாறான கீர்த்தி மிக்க ஒரு பாடசாலையை 1925 ஆம் ஆண்டில் உருவாக்கிய மகான், பேரறிஞர் அமரர் முருகேசு கந்தையா அவர்களின் உயரிய சிந்தனையும் தீர்க்க தரிசனமும் எத்தகைய சிறப்பு மிக்கதாக இருந்திருக்க வேண்டும். அத்தகைய உயர்வு மிக்க மகானின் நினைவுப் பேரூரையை ஆற்றுவதற்கு நான் எத்தகைய பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
ஒரு பாடசாலை ஸ்தாபகரின் நினைவுப் பேருரையில் அப்பாடசாலையின் வரலாறு, அதன் நிறுவுனர் அப்பாடசாலையை உருவாக்குவதற்கு உந்து சக்தியாக அமைந்த காரணிகள், பின்னணிகள் என்பன தொடர்பான கருத்துக்களை முன்வைப்பது ஒவ்வொரு வருடமும் நடைபெறுவதுதான். இருந்தாலும் கூட  அது தவிர்க்கப்பட முடியாத ஒரு விடயமாகும். அந்த வகையில் நானும் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.

யாழ் பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் :
எமது தாய் நாடு ஆங்கிலேயரது ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில், ஆங்கிலேய அரசின் பேராதரவுடன் கிறிஸ்தவ பாதிரிமார்கள் வேகமாகவும், விவேகமாகவும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பிக் கொண்டிருந்த காலத்தில், அழிந்து கொண்டிருந்த சைவத்தையும் தமிழையும் அழிவிலிருந்து மீட்டெடுத்துக் கட்டிக்காத்த பெருமை நல்லை நகர் ஆறுமுகநாவலரையே சாரும். தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் சைவத்திற்கும் தமிழிற்கும் அர்ப்பணிந்து வாழ்ந்த ஆறுமுக நாவலர் பெருமானின் சைவ சமயப் பிரசாரங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தின் கிராமங்கள் தோறும் பாடசாலைகள் தோன்றக் காரணமாக அமைந்திருந்த காலம் அது!
அந்த வகையில் சைவத்தைப் பேணும் நோக்குடன் வழக்கம்பரை அம்மன் கோவிலின் கிழக்கு வீதியில்மேலை நாட்டு சைவப்பிரகாச வித்தியாசாலைஎன்னும் பெயருடன் ஒரு சைவப் பாடசாலை சபாபதி நாவலர் என்பவரால் ஊர் மக்களின் உதவியுடன் நிறுவப்பட்டது. சில மாதங்களில் சபாபதி நாவலர் அவர்கள் தென்னிந்தியா செல்ல வேண்டிய சூழ்நிலையேற்பட்டது. அந்த வேளையில் சூறாவளியின் தாக்கத்திற்கு இப்பாடசாலை முகம் கொடுக்க நேர்ந்தது. அதன் பின்னர் அப்பாடசாலையின் தளபாடங்களை எடுத்து வந்து அம்பலவாணர் என்பவரின் வளவிலே இப்பாடசாலையைத் திரும்பவும் நடாத்தினார்கள் என்பதை அறிய முடிகின்றது. இப்பாடசாலையை திரும்பவும் நடாத்தியர் மேற்குறிப்பிட்ட சபாபதி நாவலரா? அம்பலவாணர் என்பவரா? அல்லது ஊர் மக்களா? என்பதை அறியமுடியவில்லை. சில காலங்களில் இப்பாடசாலையும் இயங்க முடியாத சூழ்நிலையேற்பட்டு நிறுத்தப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில்தான் எமது மெய்கண்டான் பாடசாலையின் ஸ்தாபகர் மு.கந்தையா பெரியோரின் உயரிய எண்ணமும் சிந்தனையும் வெளிப்படத் தொடங்கியது.
சம காலத்தில் ஆங்கிலம் கற்பதற்கு வசதியாக திருவாளர் கனகரத்தினம் முதலியாரினால் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அங்கு அதிபராகக் கடமையாற்றிய சு.சிவபாதசுந்தரனாரிடம் கல்வி கற்று அவரது சைவப்போதனைகளால் கவரப்பட்டவர்தான் எங்கள் கந்தையாப் பெரியோர் அவர்கள்.
அதிக உயரமில்லாத தோற்றம், அளவான உடலமைப்பு, புன்னகை தவளும் வதனம், சிந்தனை தவளும் நெற்றி, எப்போதும் விபூதி தரித்து சந்தணம் இட்டிருப்பார். வெள்ளை வெளேர் எனக் கதர் வேட்டி, தலைப்பாகை,சுறுசுறுப்பான நடை என்பன இவரது அடையாளங்கள். இவர் ஒரு மிகச் சிறந்த சைவசமயத்தவராக மாத்திரமன்றி சிறந்த ஒரு தமிழ்க் குடிமகனாகவும் வாழ்ந்தார் என்றே குறிப்பிடவேண்டும்.
எமது பிரதேசத்தில் இருந்த ஒரேயொரு சைவப்பாடசாலையும் நிறுத்தப்பட்ட பின்னர், எமது பிரதேசத்தில் சைவப் பாடசாலையொன்று இல்லையே என்ற குறை அவரது மனதில் எழுத்தது. எமது சைவப் பிள்ளைகள் சைவச் சூழலில் சைவப் பற்றுடைய ஆசிரியர்களினால் வழிப்படுத்தப்பட்டால் தாய்மொழிப் பற்றும் சைவப் பற்றும் மிக்க மாணவர் சமுதாயத்தை உருவாக்கலாம் என்று அவர் வலுவாக நம்பினார்.

வீடுதோறும் கலையின் விளக்கம்,
வீதிதோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் ,
நகர்கள் எங்கும் பலபல பள்ளி,
தேடு கல்வியிலாதொரு ஊரை
தீயினுக்கிரையாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதம் என் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்

என்ற பாரதியின் கூற்று அவரின் மனதில் ஆளமாகப் பதிந்திருந்தது.
இந்த நேரத்தில் மலாய் நாட்டிற்கு சென்று உத்தியோகத்தராக கடமையாற்றும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது. மலாய் நாட்டிற்கு சென்று கடமை புரிந்த போதும் அவரது கொள்கையும் சிந்தனையும் அணுவளவும் மாற்றமடையவில்லை. மலாய் நாட்டில் கடமை புரிந்த தமது கிராமத்தைச் சேர்ந்த பெரியோர்களை ஒன்று திரட்டித் தனது கொள்கைகளையும் சிந்தனைகளையும் எடுத்துரைத்தார். அவரது தெளிந்த சிந்தனையும் உயரிய நோக்கமும் எல்லோரையும் ஒன்றிணையச் செய்துமலாயா வித்தியா சங்கம்உருவாகக் காரணமாக அமைந்து. திருவாளர் முருகேசு கந்தையா அவர்கள் இச்சங்கத்தின் செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
1925 இல் தனது கிராமத்திற்கு வந்த கந்தையாப் பெரியோர் பெரியோர்களையும் நண்பர்களையும் ஒன்று திரட்டி தனது எண்ணத்தையும் சிந்தனையையும் வெளிப்படுத்தினார். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு திடசங்கற்பம் பூண்டனர். கிராமத்தவரின் உதவியுடன் திருவாளர் முருகேசு கந்தையாவிற்கு சொந்தமான நிலத்தில் 60 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட தென்னோலையால் வேயப்பட்ட மண் சுவர் கட்டிடமாக எமது பாடசாலை தோற்றம் பெற்றது. தனது குருநாதராகிய சு.சிவபாதசுந்தரனாரின் வழிகாட்டலுடனும் மலாயா வித்தியா சங்கத்தின் அனுமதியுடனும்மெய்கண்டான் பாடசாலைஎன்னும் பெயரை எம் பாடசாலைக்குச் சூட்டினார்.
04.09.1925 அன்று கரவணவாயைச் சேர்ந்த திரு வே.முருகேசு என்பவரை தலைமை ஆசிரியராகக் கொண்டு  9 பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கப்பட்டு, 65 மாணவர்களுக்கு நாட் பாடம் நடாத்தப்பட்டது. உதவி ஆசிரியர்களாக திரு .ஆசைப்பிள்ளை, திருமதி .சின்னாச்சிப்பிள்ளை ஆகியோர் பணி புரிந்தனர். பின்னர் திரு .சுப்பிரமணியம் அவர்களும் உதவி ஆசிரியராக இணைந்து பணி புரிந்ததாக அறிய முடிகின்றது. ஆரம்பத்தில் 3ம் வகுப்புவரை மட்டுமே நடைபெற்றது. பின்னர் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 4ம், 5ம், 6ம் வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நேரத்தில் திருவாளர் முருகேசு கந்தையா அவர்கள் இல்லற வாழ்வில் இணைந்து, மீண்டும் மலாய் நாட்டிற்கு சென்றார். அவர் மலாய் நாட்டிற்கு சென்ற போது திரு .மாதவர் என்பவரிடம்  மெய்கண்டான் பாடசாலையின் பொறுப்புக்களை ஒப்படைத்திருந்தார். மலாய் நாட்டிற்கு சென்ற கந்தையாப் பெரியோர் மலாய் சங்கத்தினர் மூலமாக நிதியை திரட்டி திரு .மாதவரிடம் அனுப்பி வைத்தார். 8 மாதங்கள் வரை  அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பளம் மலாய் சங்கத்தினராலேயே வழங்கப்பட்டது.
1926 இல் அரசின் உதவி நன்கொடை பெறும் நோக்கத்துடன் பாடசாலையானது சைவ வித்தியா விருத்திச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாண்டில் அரசினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் மாணவர்கள் 70% சித்தி பெற்றமை அப்போது பெரும் சாதனையாகக் கருதப்பட்டது. இத்தகைய உயரிய திறமை வெளிப்பாட்டினால் இப்பாடசாலை தொடர்ந்தும் உதவி நன்கொடை பெறுகின்ற வாய்ப்பைப் பெற்றது.
1927 இல் அரசினர் பரீட்சையில் கிடைத்த 85% சித்தியானது இப்பிரதேசத்திலே கல்வித் தரம் மிக்க சிறந்ததொரு சைவப் பாடசாலையாக இப்பாடசாலையைப் பெயர் பெறச் செய்தது.
1927 இல் தாபகர் முருகேசு கந்தையா அவர்கள் சுகவீனமுற்ற நிலையில் தனது தாய் நாட்டிற்குத் திரும்பி வந்தார். இரண்டு வருடங்கள் கூட நீடிக்காத இல்லற வாழ்க்கையுடன் அவர் தனது லௌதீக வாழ்க்கையை நிறைவு செய்து 1927 வைகாசியில் இறையடி சேர்ந்தார்.
நல்லவர்களை இறைவன் விரைவாகத் தன்னுடன் அழைத்துக் கொள்வார் என்பது சைவ சமயத்தவரின் நம்பிக்கை. இறைவன் எமது பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையை தாபிப்பதற்காகத்தான் திருவாளர் முருகேசு கந்தையா அவர்களை இந்த உலகிற்கு அனுப்பி வைத்தானோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
அதன் பின்னரான பாடசாலையின் வளர்ச்சிப் போக்கினை சுருக்கமாகவேனும் நோக்குதல் இங்கு  அவசியமாகின்றது.
1930 இல் புதிய கட்டடம் கட்டப்பட்டதுடன் 8ம் வகுப்பு வரை (J.S.C) வகுப்புக்களை நடாத்த அரசாங்கம் அனுமதியளித்தது. அடுத்த ஆண்டுகளில் S.S.C வரையான வகுப்புக்களுக்கு அனுமதி கிடைக்கப்பெற்று 1937  இல் பலர் சித்தியடைந்தனர்.
1945ம் ஆண்டு தொடக்கம் 1970 வரை தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் அதிபராகக் கடமையாற்றிய செ.ஸ்ரீநிவாசன் அவர்களது காலம் இப்பாடசாலையின் பொற்காலம் எனக் கருதப்படுகிறது. இவரது காலப்பகுதியில்தான் இப்பாடசாலை பல புதிய கட்டடங்களின் தோற்றம், பரீட்சைப் பெறுபேறுகளில் உயர்ச்சி எனப் பல துறைகளிலும் வளர்ச்சி பெற்றது.
1950ம் ஆண்டு வெள்ளி விழாவைக் கொண்டாடிய இப்பாடசாலையானது 1957இல் 680 மாணவர்கள், 23 ஆசிரியர்களைக் கொண்டதாக வளர்ச்சி பெற்றது. 1962 இல் மெய்கண்டான் மகா வித்தியாலயம் என்ற உயரிய அந்தஸ்தினைப் பெற்றது. இன்றுவரையும் மகாவித்தியாலயமாக வியத்தகு சாதனைகளுடன் மிளிர்ந்து வருகின்றது.
1977 இல் திரு மு.நவரத்தினம் அவர்கள் அதிபராக கடமையாற்றியபோது 6ம் தரத்திற்கு மேற்பட்ட வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது.
1981 இல் திரு.வே.கனகநாயகம் அவர்கள் அதிபராக கடமையாற்றியபோது மாணவர்கள் கழுத்துப்பட்டி அணியும் வழக்கத்தையும் ஏற்படுத்தினார்.
1986 இல் அதிபர் .இராசநாயகம் காலத்தில் பாடசாலையின் மணிவிழாவானது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
1990 தொடக்கம் 2003 வரை அதிபராக கடமையாற்றிய திரு கா.நடராசா அவர்களின் காலம் இப்பாடசாலையின் வரலாற்றில் இன்னொரு பொற்காலம் ஆகும்.
இவரது காலத்தில் மெய்கண்டான் பாடசாலையானது தமிழ் மொழித் தினப் போட்டிகள், ஆசிரியர் தினப் போட்டிகள், விஞ்ஞான வினாடி வினாப் போட்டிகள் எனப் பல போட்டிகளில் கொத்தணி மட்டத்திலும், கோட்ட மட்டத்திலும் பல சாதனைகளைப் படைத்தது.
பாடசாலையின் 65 வருடகால வரலாற்றில் சிறந்த பெறுபேறாக, 1990 .பொ. சாதாரண தரப் பரீட்சையில் (அப் பரீட்சை நாட்டுப் பிரச்சினைகள் காரணமாக 1991 இல் நடைபெற்றது) ஒரு மாணவன் 6 அதி விசேட சித்திகளைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
அதிபர் திரு கா.நடராசா அவர்களின் இன்னொரு காத்திரமான பணி யாதெனில் 2001 இல் .பொ. உயர் தர கலை, வர்த்தக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டமையாகும். இதனால் இப்பாடசாலை 1C  பாடசாலையாகத் தரம் உயர்ந்தது.
2003 இன் பின்னர் பாடசாலையானது திரு வி.நடராசா, திரு .சந்திரசேகரன், திரு சு.கணேசதாசன் உட்பட 3 அதிபர்களினால் வழி நடாத்தப்பட்டு தற்போது அதிபர் திருமதி .சுலபாமதி அவர்களினால் மிகச் சிறப்பாக வழி நடாத்தப்படுகின்றது.
இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை கடமையாற்றிய, கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற (மொத்தமாக 21 பேர்) அதிபர்கள் அனைவரும் இப்பாடசாலையின் தாபகர் அமரர் முருகேசு கந்தையாh அவர்களின் உயரிய சிந்தனையை மதித்து செயற்பட்டு வருகின்றமை இங்கு மெச்சத் தக்க விடயமாகும்.
அறிவொளி பரப்பி, அரிய பல சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இவ்வறிவாலயம் வாழும்வரை அமரர் முருகேசு கந்தையா அவர்களின் நினைவுகள் நிலைத்திருக்கும்.

எண்ணிய முடிதல் வேண்டும்!
நல்லவே எண்ணல் வேண்டும்!
திண்ணிய நெஞ்சம் வேண்டும்!
தெளிந்த நல்லறிவு வேண்டும்!

என்னும் பாரதியின் கூற்றுக்கமைய திருவாளர் முருகேசு கந்தையா அவர்களினால் பண்ணாகம் கிராமத்தில் அமைக்கப்பட்ட இப்பாடசாலையானது இன்னும் பல துறைகளிலும் வளர்ச்சி பெற்று .பொ. உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம், தொழினுட்பம் ஆகிய துறைகளையும் உள்ளடக்கி ஒரு மிகச் சிறந்த பாடசாலையாக, கல்லூரியாக வளர்ச்சி பெற வேண்டும் என்று  இறைவனை பிரார்த்தித்துக்கொள்கின்றேன்.

இப்பாடசாலை உருவாக்கிய ஆளுமைகள் :
இப்பாடசாலை உருவாக்கிய ஆளுமைகள் தொடர்பாகக் குறிப்பிட எண்ணிய போது பெரும் மலைப்பாக இருந்தது. 91  வருடகால வரலாற்றில் இப்பாடசாலை எத்தைனையோ பல ஆளுமைகளை இந்த சமுதாயத்திற்கும், நாட்டுக்கும் வழங்கியுள்ளது. அவர்கள் அனைவரினதும் பெயர் குறிப்பிட்டு இங்கு உரையாற்றுவதாக இருந்தால் அதற்கான நேரம் போதாது. அதைவிடவும் ஒரு முக்கியமான பிரச்சினை என் மனதில் எழுந்தது. அவர்களின் பெயர்களைப் பட்டியல் இட்டுப் பேசும் போது, ஒரு சிலரின் விபரங்களைத் தவற விட்டுவிடுவேனோ என்ற பயமும் தொற்றிக் கொண்டது. எனவே நான் படித்த காலத்தில் என்னுடன் கூடப் படித்த ஒரு சிலரின் பெயரை இங்கு குறிப்பிடலாம் என எண்ணுகின்றேன்.

இன்றைய மாணவரின் நடத்தைகள் :
        உணவு, உடை, சுகாதாரம்
        சினிமாவின் தாக்கம்
        தொழினுட்ப வளர்ச்சியின் செல்வாக்கு
        சேமிப்புப் பழக்கம் இல்லாமை

நிறுவுனர் நினைவுப் பேருரை செய்தி :
        உலகளாவிய ரீதியிலான யாழ் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைக்கப்படுதல்.
        பாடசாலைக்கென தனியான இணையத் தளத்தினை உருவாக்கி உலகம் முழுவதும் பரந்துள்ள பாடசாலை சமூகத்தினரை இணைத்தல்.
        அமரர் முருகேசு கந்தையா அவர்களின் 6 அடி உருவச்சிலை அமைத்தல்

முடிவுரை :
நிறுவுனர் நினைவுப் பேருரையை நிறைவு செய்யும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மீண்டும் ஒரு முறை இப்பாடசாலையின் தாபகர் அமரர் முருகேசு கந்தையா அவர்களின் பாரிய பணியினை எம் மனக் கண்களில் நிறுத்தி, அன்னாரின் உயரிய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் நாம் தொடர்ந்தும் செயற்படுவோம் என உறுதி கூறிக் கொள்வோம்.
மேலும் இந்த தன்னலமற்ற பாரிய பணியைச் செய்த தாபகர் முருகேசு கந்தையா பெரியவரை மட்டுமன்றி அவரது குடும்பத்தினரையும், அவரது வழித் தோன்றல்களையும் ஒவ்வொரு வருடமும் அழைத்து, கௌரவப்படுத்தி எமது நன்றியறிதல்களை வெளிப்படுத்துவது சாலப் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகின்றேன்.
இறுதியாக நிறுவுனர் நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்கான இவ்வரிய சந்தர்ப்பத்தை தந்த பாடசாலைச் சமூகத்திற்கும் குறிப்பாக பாடசாலையின் அதிபர் திருமதி .சுலபாமதி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி வணக்கம்.

1 comments:

Mahalingam Nireshkumar said...

யாழ் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் வரலாற்றினை ஓரளவிற்கு தேடி அறிந்து நினைவுப் பேருரையில் சமர்ப்பித்திருந்தேன். இப்பாடசாலை தொடர்பான தகவல்களைத் தேடுபவர்களுக்கு இவ்வாவணம் உதவியாக இருக்கும் என நம்புகின்றேன்.