“சேர் உங்களப் ப்ரின்ஷிப்பல் வரட்டாம்”
வகுப்பறையில் மும்முரமாய்ப் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பீயோன் வந்து சொன்னான்.
“இந்த மனிஷனுக்கு ஒரு மண்ணும் தெரியாது.நேரம் காலம் தெரியாமல் கூப்பிடும்.இதுக்குத்தான் சொல்லுறது படிப்பிச்சு அனுபவம் உள்ளவன் ப்ரின்ஷிப்பலா வரோணுமெண்டு”
எனது முணுமுணுப்பின் அர்த்தம் முழுமையாக விளங்காத போதும் நான் ப்ரின்ஷிப்பலை பேசுகின்றேன் என்பது மாணவர்களுக்கு விளங்கியிருக்க வேண்டும்.அவர்கள் எல்லோரும் மௌனமாய் இருந்தார்கள்.
பீயோன் வழமை போலவே புன்சிரிப்புடன் தலையைக் குனிந்து கொண்டு சென்றான்.
‘இந்த றாஸ்கலை முதலில துலைக்க வேணும்.இவன்தான் எல்லாரையும் போட்டுக் குடுக்கிறது’
மனதுக்குள் கறுவிக் கொண்டே பின் தொடர்ந்தேன்.
“என்ன சேர்…எட்டரைக்குள்ள ரெலிபோன் வந்திட்டுது போல”
கன்ரினுக்குள் இருந்து கனகலிங்கம் மாஸ்டரின் குரல் கேட்டது.
‘கூப்பிட்டவுடன போகக் கூடாது.கொஞ்ச நேரம் பாத்துக் கொண்டிருக்கட்டும்‘ என்ற எண்ணத்துடன் நானும் கன்ரீனுக்குள் நுழைந்தேன்.
“பாருங்கோ சேர்.இரண்டாம் பாடம் இப்பதான் துடங்கினது.அதுக்குள்ள வரட்டாம்”
கனகலிங்கம் மாஸ்டரை மெதுவாகப் பேச்சுக்குள் இழுத்து விட முயன்றேன்.
“ஓம் தம்பி அனுபவம் இல்லாத ஆக்களைப் ப்ரின்ஷிப்பலாப் போட்டா இப்பிடித்தான் பள்ளிக் கூடம் நடக்கும்”
கனகலிங்கம் மாஸ்டரும் எனது கருத்தையே கொண்டிருப்பது எனக்குச் சற்று உற்சாகம் அளித்தது.
“முந்தி இருநத அதிபர் எவ்வளவு நல்லாப் பள்ளிக் கூடம் நடத்தினவர். இவனப் போட்டதில இருந்து தலயிடிதான்”
ஆத்திரத்தில் வார்த்தை தவறாக வந்ததும் சட்டென்று நிறுத்தி சுற்று முற்றும் பார்த்தேன்.கனகலிங்கம் மாஸ்டர் என் தோள்களைத் தட்டி
“கோபப் படாதையும் தம்பி.முந்தியெண்டா பத்துப் பதினஞ்சு வரியம் ரீச்சரா இருந்தாத்தான் உபஅதிவரா வந்து பேந்து அதிபரா வரலாம்.இப்ப SLEAS பாஸ் பண்ணினவுடன ப்ரின்ஷிப்பலாப் போடுறாங்கள்.அவங்களுக்கு ஒரு நாசமும் தெரியாது”
“ஓம் சேர் தமிழும், கிண்டுக்கல்ச்சரும் படிச்சுப் போட்டு அஞ்சாம் வகுப்பு ஸ்கொலஷிப் மாதிரி சோதின பாஸ் பண்ணினவுடன பெரியாக்களோ இவங்கள்”
“என்ன ப்ரின்ஷிப்பலப் பற்றிக் கத நடக்குது போல”
ஆதித்தியன் சேரும் கன்ரினுக்குள் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார்.
“ஓம் சேர்…இந்த மனிஷன் வந்தாப் பிறகு நடக்கிற சீர் கேடுகளைப் பற்றிக் கதச்சுக் கொண்டிருக்கிறம்”
“கண்ட கண்ட நேரத்தில எல்லாம் ஆள விட்டுக் கூப்பிடுறதால எங்கட படிப்பிப்பு வேலயெல்லே குழம்புது”
“இவர் மட்டுமில்லயாம் இந்த முறை SLEAS இல எடுபட்ட எல்லாரும் இப்பிடித்தான் துள்ளிக்குதிக்கிறாங்களாம்”
“ஏனாம் அப்பிடி?”
“ஒரு வேலயயும் பிற்போடக்கூடாது.உடனேயே செய்து முடிக்கோணும் எண்டு ரெயினிங்கில சொல்லிக் குடுத்தவயாம்”
“அப்ப O\L சோதின எடுக்கிற பிள்ளயளுக்கு முதலாம் தவணேலயே எல்லாத்தயும் படிப்பிச்சு விட்டாச் சரியோ”
ஏல்லோரும் வாய் விட்டுச் சிரிக்க ப்ரின்ஷிப்பலை மட்டம் தட்டி விட்ட திருப்தியுடன்
“அப்ப சரி நான் போய் என்னெண்டு கேட்டுக் கொண்டு வாறன்”
நான் அதிபரின் அலுவலக வாயிலை அடையவும் இரண்டாம் பாடம் முடிந்து பெல் அடிக்கிறது.
“குட் மோனிங் சேர்”
“குட் மோனிங்…..இருங்கோ”
“சேர் வரச் சொன்னனீங்களாம்”
“ஓம் சேர்.அடுத்த வருஷம் A\L எக்ஸ்சாம் எடுக்கிற பெடியளின்ர அலுவலா உங்களோட கதக்க வேணும்”
“என்ன சேர்? சோல்லுங்கோ?”
“தங்கட Batch எல்லாரும் சேர்ந்து ரூர் போகப் போகினமாம்.ஸ்ரூடன்ட் யூனியன் மூலமாப் பெமிஷன் கேட்டுக் கடிதம் எழுதியிருக்கினம்.இப்ப இருக்கிற நிலமேல இது அவசியமே சேர்”
கடிதத்தை என் முன்னால் தள்ளி வைத்தார்.நான் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். ப்ரின்ஷிப்பலை எதிர்க்க இறைவனால் கொடுக்கப் பட்ட இந்த சந்தர்ப்பத்தை இழக்க நான் தயாராக இல்லை.
“கற்றல் புறச் செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேணும் சேர்.தனியப் பிள்ளயளப் பூட்டி வச்சுக் கொண்டிருந்து படிப்பிச்சாக் காணாது”
“அது எனக்கும் தெரியும் சேர்.இப்ப கொஞ்சம் நாட்டு நிலம மோசமாக் கிடக்கு.குண்டு வெடிப்பு……..கிளைமோர் எண்டு…..பிள்ளயளின்ர பாதுகாப்ப பாக்கவெல்லே வேணும்”
“உப்பிடிப் பாத்தா நாங்கள் ஒண்டுமே செய்யேலாது.நாட்டுப் பிரச்சினையைப் பற்றி யோசிக்காமல் செய்ய வேண்டியதைச் செய்யத்தான் வேணும்”
“அது சரி சேர். இப்ப பிரச்சின கொஞ்சம் மோசமாவெல்லே கிடக்கு”
“உங்களோட என்னால உடன் படேலாது சேர்.பிரச்சினயெண்டு பாத்துப் படிக்காமல் விட்டிருந்தா நீங்கள் B.A பட்டதாரியாகவோ நான் Bsc சிறப்புப் பட்டதாரியாகவோ வந்திருக்கேலாது”
அதிபரை விட நான் Qualification கூடியவன் என்பதைப் பொருத்தமான சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டினேன்.
“அப்ப முடிவா என்ன சேர் சொல்லுறியள்?”
“பிள்ளயளின்ர உரிமேல அளவுக்கதிகமாத் தலயிடக் கூடாது சேர். ரூர் போக ஒழுங்கு படுத்திக் குடுக்கிறதுதான் நல்லது”
“சரி.இன்னும் நல்லா யோசிப்பம்.கடைசிப் பாடம் ஸ்ராப் மீற்றிங் வச்சுக் கதப்பம்”
நான் நேராக நூலகம் நோக்கிச் சென்றேன்.நான்கைந்து பேர் கைகளில் அன்றைய தினசரிப் பத்திரிகையை வைத்திருந்தபடி கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
“இஞ்ச பாருங்கோவன். செல்வராகவன் சேரும் லைஃப்ரரிக்கு வாறார்”
நான் லைஃப்ரரிக்கு செல்வது குறைவுதான்.பாடம் இல்லாத நேரத்தில் ஸ்ராஃப் றூமில் புத்தகமும் கையுமாக இருந்து விடுவேன்.அதிபரிடமிருந்து கிடைத்த தகவலையும் அதனை நான் எதிர்த்ததையம் மற்றவர்களிடம் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வக் கோளாறினால் லைஃப்ரரிக்கு சென்றேன்.
“தெரியுமோ சங்கதி? A\L பெடியள ரூர் போக விடாமல் மறிக்கப் போறாராம்”
“இவற்ற அட்டகாசம் தலக்கு மேல போகத் துவங்கிட்டுது.போன சரஸ்வதி பூசையையும் பெரிசாச் செய்ய விடாமல் மறிச்சுப் போட்டார்” – செல்வநாயகம் சேர்.
“அது பரவாயில்ல சேர். 'ரீச்சர் இண்டக்கு தேவாரம் பாடுங்கோ’ எண்டு என்னயெல்லே மாட்டிவிட்டுட்டார்.மாட்டன் எண்டு சொன்னதுக்கு ‘ரீச்சர்ஸ்தான் முன் மாதிரியா நடக்க வேணும்.அப்பதான் பிள்ளயள் பின்பற்றி நடக்கும்’ எண்டு உத்தரவெல்லே போட்டவர்” – வாசுகி ரீச்சர்
எனக்குஆதரவு அதிகரித்துச் சென்றது.
“இந்த முறை பெடியள ரூர் அனுப்பாமல் விடுறேல.நாங்களெல்லாரும் ஒண்டாச் சேந்து நிண்டா அவரால ஒண்டும் செய்யேலாது”
நான்காம் பாடம் முடிந்து பெல் அடிக்க கன்ரீன் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
சுடச் சுட வடையும் கண்டித்தேயிலையில் சுந்தரம் போட்ட பால்த் தேநீருமாய் இன்றைய ஸ்ராஃப் மீற்றிங்கில் ஆசிரியர்கள் எல்லோரும் ஒருபக்கம் நின்று அதிபரை எதிர்ப்பதாகவும், பிள்ளைகளை எப்படியும் ரூர் போக அனுப்புவதாகவும் முடிவு செய்து கொண்டோம்.
ஏஞ்சிய மூன்று பாடங்களும் நகர்ந்து பிள்ளைகளை ஏழாம் பாடத்துடன் வீட்டுக்கு அனுப்பிய பின்னர் ஸ்ராஃப் மீற்றிங் தொடங்கியது.
“எல்லோருக்கும் வணக்கம்.ஒரு முக்கியமான விசயமாக கலந்தாலோசிப்பதற்காகத்தான் இந்த அவசர ஸ்ராஃப் மீற்றிங்.உங்கள் எல்லோருக்கும் விசயம் தெரிந்திருக்குமென நினைக்கின்றேன்”
என்னைப் பார்த்து விஷமமாகச் சிரித்தார்.நான் தெரியாதது மாதிரி வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தேன்.
“A\L ஸ்ருடென்ட்ஸ் ரூர் போவதற்கு பெமிஷன் கேட்கிறார்கள்.தற்போதய நாட்டுச் சூழ்நிலையில் ரூரிற்கு அனுமதியளிக்க முடியாது.உங்களுடய அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளவே இந்த அவசர ஸ்ராஃப் மீற்றிங்”
அனைவரும் அமைதியாக இருக்க கனகலிங்கம் சேர் என் துடையில் கிள்ளினார்.
“மன்னிக்க வேணும் சேர்.கற்றல் செயற்பாடுகள் எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு கற்றல் புறச் செயற்பாடுகளும் முக்கியமானதுதான். Educational Tour என்பது எமது கல்வித்திட்டத்தில் அனுமதிக்கப் பட்ட விடயம்தான்”
“இப்ப பிரச்சினை அதில்ல. ரூர் செல்வதற்கு பொருத்தமான சூழ்நிலை இல்லை.பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கிறது”
“அப்பிடிப் பாத்தா உந்தப் பாதையால வந்து போறதும் பாதுகாப்பில்லைத்தான்.பிள்ளயள பள்ளிக்கூடம் வராமல் வீட்ட நிக்கச் சொல்லவெல்லோ வேணும்”
கனகலிங்கம் சேர் பொருத்தமான நேரத்தில் நெத்தியடி அடிக்க சிரிப்பொலி ஒருகணம் பரவி மறைந்தது.
“நீங்கள் ஒரு முடிவோடதான் வந்திருக்கிறியள் போலக்கிடக்கு.நான் மட்டும் என்ன செய்ய முடியும்.அப்ப ரூர் போகப் பெமிஷனைக் குடுப்பம்”
சாதித்து விட்ட திருப்தியில் நிமிர்ந்து அமர்ந்தேன்.
“ஆனால் சில விஷயங்களை ஒழுங்காகச் செய்ய வேணும்.இரண்டு ஜென்ஸ் ரீச்சரும் இரண்டு லேடிஸ் ரீச்சரும் கட்டாயம் போகவேணும்”
எங்கே நான் அகப்பட வேண்டி வரமோ என்ற அவசரத்தில் பேசத்தொடங்கினேன்.
“நாங்கள் கட்டாயம் போவம் சேர்.வாசுகி ரீச்சர்,செல்வராணி ரீச்சர்,ஆதித்தியன் சேர்,கனகலிங்கம் சேர் நாலு பேரும் போவினம் சேர்”
ஆதித்தியன் இளம் பட்டதாரி ஆசிரியர்.கனகலிங்கம் சேர் நாற்பது வயது தாண்டிய மனிஷன்.மனிஷியின் கரைச்சலில் இருந்து நாலு நாள் தப்பவதற்காக கட்டாயம் போகும்.வாசுகி இளம் பெட்டை.செல்வராணி ரீச்சர் போனாத்தான் பெடியளக் கட்டுப் படுத்தலாம்.பொருத்தமான நான்கு பேரை நான் முன்மொழிய அவர்களும் மௌனத்தால் தமது சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.
“அப்ப சரி.எல்லா ஒழுங்குகளையும் செய்து கொடுப்பம்.பிள்ளைகள் கவனமாப் போய் வந்தாச் சரி.இத்துடன் கூட்டத்தை நிறைவு செய்வோம்”
வாசுகி ரீச்சர் பாடசாலைக் கீதம் பாடி முடிந்ததும் எல்லோரும் கலைந்து சென்றோம்.
கனகலிங்கம் சேர் என் தோள்களில் கையைப் போட்டவாறு
“என்ன செல்வராகவன். நினச்சதச் சாதிச்சுப் போட்டியள்.பெடியளுக்காக நல்லாத்தான் கஷ்டப் படுறியள்”
“நீங்கள் ஒண்டு சேர்.பெடியளை அனுப்பி விட்டா நாலு நாளக்கு சும்மா இருக்கலாமெண்டுதான்”
கனலிங்கம் சேர் மௌனமாய் விலகிச் சென்றார்.மோட்டார் சைக்கிள் ஸ்ராண்டைத் தட்டும் போது ப்ரின்ஷிப்பல் யாருடனே ரெலிபோனில் கதைக்கும் சத்தம் தெளிவாகக் கேட்டது.
“ஓம் மச்சான்.இண்டக்கும் நல்ல அலுப்படிச்சுப் போட்டுத்தான் ரூர் போக அனுமதிச்சனான்.இல்லாட்டி எங்களப் பற்றி லேசா நினைச்சுப் போடுவாங்கள்”
(யாவும் கற்பனை)
பின்குறிப்பு : 27.01.2008 அன்று தினக்குரல் பத்திரிகையில் வெளியானது.
Tuesday, April 1, 2008
பச்சோந்திகள்
Posted by Mahalingam Nireshkumar at 8:24 AM 3 comments
Labels: சிறுகதைகள்
மனிதம் தோற்பதுண்டோ!
காலைக்கடன்களைப் பொறுத்தவரையில், மற்றவர்களை விட ராசனுக்கு ஒரு வேலை அதிகம் இருக்கிறது.
மலசலகூடம் சென்று வந்த பின் முகம் கழுவக் கிணற்றடிக்கும் போக முன்னர் இவ் வேலையை முடித்து விடுவான்.
வவுனியாவில் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ள திருட்டுச் சம்பவங்களின் பின்னர், இரவில் மோட்டார் சைக்கிள்கள் கராஜ் இனைத் தாண்டி உள் விறாந்தையில் இடம் பிடிக்க தொடங்கியிருந்ததன.
உள் விறாந்தைகளில் நித்திரை கொள்ளும் பேரன் பேத்திகள் இப்போது வெளி விறாந்தைக்கு இடம் மாற்றம் பெற்றிருந்தனர்.
துவிச்சக்கர வண்டிகள், இரவில் ஒன்றாகச் சேர்த்து சங்கிலிகளால் கட்டப்பட்டு, ஒற்றுமையாக இருக்கக் கற்றுக்கொண்டுள்ளன.
ராசன் 6 மணிக்கெல்லாம் அலாரம் இல்லாமலே எழும்பி விடுவான். இரவிரவாக கேட்கத் தொடங்கியுள்ள ஷெல் சத்தங்களை எண்ணிக் கொண்டிருந்த பேத்திக்கிழவி காலையில்தான் உறங்கிக் கொண்டிருக்கும்.
கிழவியின் நித்திரையைக் குளப்பி விடாதபடி உள் விறாந்தையிலிருந்து தனது சிவப்பு நிற CD-Dawn மோட்டார் சைக்கிளை கவனமாக உருட்டிக்கொண்டு முற்றத்திற்கு வருவான்.
இவன் முற்றத்திற்கு வருகின்ற நேரம், பக்கத்து வீட்டடியில் English Personal Class கொடுக்கும் மாஸ்டரின் ‘கோண்’ சத்தம் தினமும் கேட்கும்.
பிளாஸ்டிக் வாளியில் குளிர்ந்த தண்ணீரை அள்ளிக் கொண்டு வந்து, தோய்த்துக் காய்கின்ற துணியை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து தனது மோட்டார் சைக்கிளை கவனமாய், ஒவ்வொரு பகுதி பகுதியாக துடைப்பான்.
மற்றவர்களைப் பொறுத்தவரை மோட்டார் சைக்கிள் என்பது ஒரு வாகனம். இவனைப் பொறுத்தவரை அவனது முழுக்குடும்பத்தினதும் ஒட்டுமொத்த உழைப்பு. அதனை பாதுகாக்க வேண்டியது தனது தலையாய கடமையாகக் கருதினான்.
“கம்பஸ் முடிச்ச எத்தினை பெடியள் வேல இல்லாம இருக்கிறாங்கள். உனக்கெதுக்கு கம்பஸ். அதுவும் பீ.ஏ படிப்பு. கொக்காவுக்கும் முப்பது தாண்டப்போகுது. அவளையும் ஒருத்தன்ர கையில பிடிச்சுக் குடுக்க வழியில்லாம கிடக்கு. நீ படிச்சது காணும். ஒரு வேல தேடுறது எனக்கு நல்லதாப்படுது”
அப்பா யோசனை சொல்கிறாரா?அல்லது உத்தரவு போடுகின்றாரா? என்பது புரியாத போதும் தனது குடும்பத்தின் இன்றைய நிலையை உணர்ந்து, அவன் அந்த வேலையில் சேர்ந்திருந்தான்.
அரச சார்பற்ற நிறுவனமொன்றில் ‘கேட்செக்குரிட்டி’ வேலை. ஓவ்வொரு தடவையும் வாகனம் உள்ளே வரும் போதும் வெளியே போகும் போதும் திறந்து திறந்து மூடவேண்டும்.அந்த நிறுவனத்திற்குப் பெரியவனான அந்த வெள்ளைக்காரன் கக்கூசுக்குப் போவதென்றாலும் தனது வதிவிடத்திற்குத்தான் சென்று வருவான்.
வேலைக்குப் போகும் ஒரு நாளுக்கு நானூறு ரூபா என்பது அவனின் குடும்பத்தை பொறுத்தவரை மிகப் பெரிய வருமானம்.
வேலைக்குப் போன தொடக்கத்தில் தன் ‘புஷ்’ சைக்கிளில் தான் போய் வந்தான். அப்பாவால் செல்லமாக ‘றலிக்குதிரை’ என்று அழைக்கப்படும் அந்த சைக்கிள் அப்பா பாரிசவாதத்தால் படுத்த படுக்கையாகிவிட்ட பிறகு இவனின் கைக்கு மாறியிருந்தது. அவனது A\L படிப்புக்கும், பின்பு வேலைக்குச் செல்வதற்கும் அது தான் ஆஸ்தான வாகனமாக இருந்தது.
காலையில் எழும்பி பத்து கிலோமீற்றர் தூரம் சைக்கிளில் மிதிக்க முள்ளந்தண்டு கொதிக்கத் தொடங்கிவிடும். பிறகு எட்டு மணி தொடக்கம் ஐந்து மணி வரைக்கும் கேற்றில் நிற்க கால்களும் வலிப்பெடுக்கத் தொடங்கும். வீட்டுக்கு வந்தால் உடனே நீட்டி நிமிர்ந்து படுக்க வேண்டும்.
“அவனுக்கென்ன வயது போட்டுதே! இளந்தாரிப்பிள்ளை.எப்பிடிச் சுறுண்டு போனான்” என்ற அம்மாவின் புலம்பல் ஆறுதலை விட அரியண்டத்தையே அதிகம் தந்தது.
அப்பா தான் இந்த மோட்டார் சைக்கிள் வாங்கும் யோசனையை சொன்னார். இருபதாயிரத்து சொச்சம் புகையிலை செய்யும் போது வங்கியில் போட்ட காசையும் கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.
- தங்கச்சியின் சாமத்தியச் செலவிற்கென்று அம்மா வைத்திருந்த முக்கால் பவுண் சங்கிலி
- அக்கா சட்டை தைத்துக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்த காசு
- பேத்திக் கிழவியின் ஒரு சோடி தூக்கணத்தோடு
- தன் நண்பனிடம் கடன்பட்டது என்று பொய் சொல்லிய அவனது வங்கிக் கணக்கில் இருந்த பணம்
எல்லாமுமாக சேர்ந்து CD-Dawn ஆக மாறியிருந்தன.
*******************
இன்று திங்கட்கிழமை. பொதுவாக திங்கட்கிழமைகளில் பிரதம எழுதுவினைஞருக்கு ‘சூறணவன்’ ஏறிவிடுவது வழக்கம். எனவே அலுவலகத்திற்கு விரைவாகச் சென்றுவிட வேண்டுமென்று நேற்றே எண்ணியிருந்தான்.
அவன் வேலைக்கு வெளிக்கிட்ட போது
“இந்தா தம்பி…. இந்த சீட்டுக்காசை கனகம் அக்காற்ற குடுத்திட்டுப்போ…. பின்னேரமானா கழிவில்லாமல் முழுக்காசும் குடுக்கோணும்”
என்று தாய் சொன்னதை மறுக்கமுடியாததால் இன்று வழமையை விட பத்து நிமிடங்கள் தாமதமாகி விட்டது.
காலை வேளையில் ஸ்ரேஷன் றோட்டால் பயணம் செய்வது சரியான கஷ்டம். பள்ளிக்கூடப் பிள்ளைகளால் நிரம்பி வழியும். மன்னார் றோட்டால் குருமன்காட்டுச் சந்தியின் ஊடாகப்போனால் அலுவலகத்தை இலகுவாக அடைந்து விடலாம்.
குருமன்காடு என்பது 1990களில் உண்மையிலேயே வெறும் காடுதானாம். இப்போது அது வவுனியாவின் முக்கிய நகரமாக வளர்ந்திருந்தது. ‘குட்டிஜெனிவா’ என்று சொல்லுமளவுக்கு எல்லா அரசசார்பற்ற நிறுவனங்களும் இப்பகுதியிலேயே அமைந்திருக்கின்றது.
காளிகோயில் சந்தியைக் கடக்கும் போதுதான் அதனை அவதானித்தான்.
கொழுகொழுவென்று வளர்ந்திருந்த சிறிய நாய்க்குட்டியொன்று நடுரோட்டில் அங்குமிங்கும் பார்த்து மிரண்டுகொண்டு நின்றது. தன்தாயை தவறவிட்டு எப்படியோ ரோட்டிற்கு வந்துவிட்டது.
ராசன் பொதுவாகவே பிராணிகளில் இரக்ககுணம் உள்ளவன். அதிலும் நாய்க்குட்டியென்றால் அதன் மீது தனி அன்பு அவனுக்கு.
மோட்டார் சைக்கிளின்; வேகத்தைக் குறைத்து ஓரமாக நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தான். மரங்கள் மட்டுமே பச்சையாக இருந்தன.
‘அப்பாடா நல்ல காலம்’ என்று சைக்கிளை நிறுத்திவிட்டு நாய்க்குட்டியை நோக்கி ஓடிச்சென்று கைகளில் தூக்கிக்கொண்டான்.
“இந்த வாகன நெரிசலில் ஏன் றோட்டுக்கு வந்தாய். ஏதும் வாகனம் இடிச்சு சாகவெல்லோ போறாய்”
என்று நாய்க்குட்டிக்கு சொல்லியவாறே கோயில் வாசல் வரை சென்று அதனை பத்திரமாக இறக்கிவிட்டான். அந்த சிறிய நாய்க்குட்டி வாலை ஆட்டி தன் நன்றியை தெரிவித்தது.
கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி தன்மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி வந்த போது அங்கே நான்கைந்து இராணுவத்தினர் அதனை சுற்றி வளைத்து நின்றனர்.
“ஏய் இந்த இடத்தில் வாகனம் நிறுத்தக் கூடாது என்று தெரியாதா?”
அவன் பதில் சொல்ல முன்னம் ஒருத்தனின் துவக்குப்பிடி ராசனின் பிடரியைப் பதம் பார்த்தது.
கடைவாசல்களிலும், வீதியோரங்களிலும் வாகனம் நிறுத்தக்கூடாது என்று புதிதாக பிறப்பிக்கப்பட்ட சட்டம் பின்னர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த போதும் இராணுவத்தினர் அவ்வப்போது அதனை கடைப்பிடிக்கத்தான் செய்கின்றனர்.அவர்களை யாரும் கேட்க முடியாது.அவர்கள் நினைத்தால் ராசனை அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்யவும் முடியும்.அந்த மோட்டார் சைக்கிளை கொண்டு சென்று தபாற்கந்தோருக்கு முன்னால் உள்ள வெளியில் கருவாடு காயப் போடவும் முடியும்.
தன் பிடரியைப் பொத்தியபடி நிலத்தில குந்தியிருக்கும் ராசன் மனிதம் தோற்பதை கண்கூடாக கண்டான்.
அவன்மட்டுமல்ல …. நாமும்தான் தினம் தினம் கண்டுகொண்டிருக்கின்றோம்.
(யாவும் கற்பனை)
பின்குறிப்பு : 25.11.2007 அன்று தினக்குரல் பத்திரிகையில் இந்த கதை வெளியாகியது.
Posted by Mahalingam Nireshkumar at 8:13 AM 0 comments
Labels: சிறுகதைகள்